தமிழர்களுடனாவது தமிழில் பேசுங்கள்! ஈழத்துப் பாடலாசிரியர் வேதனைஇலங்கை கவிஞர், பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின். இலங்கையில் உள்ள பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, தொகுப்பாளராக பணிபுரிந்து வருகின்றார். ‘நான்’ படத்தில் இடம்பெற்ற ‘தப்பெல்லாம் தப்பேயில்லை’ பாடல் மூலம் விஜய் ஆண்டனியினால் அறிமுகப்படுத்தப்பட்டவர்.
‘வானே இடிந்ததம்மா’ என்ற இரங்கல் பாடல் மூலம் தமிழ் பேசும் உலகின் கவனத்தை ஈர்த்தவர். இலங்கையில் மூன்று தேசிய விருதுகள் , மூன்று கவிதை நூல்கள் என பல விருதுகளின் சொந்தக்காரர். சமீபத்தில் பாடல் பதிவுக்காக கோடம்பாக்கம் வந்தவரிடம் பேசினோம். மிக அருமையான தமிழில் உரையாடினார்.

“இலங்கையில் இருந்து கொண்டு இந்தியத் தமிழர்களின் ரசனையை உள்வாங்கி தங்களால் எப்படி பாடல்களை எழுத முடிகிறது?”

“இலங்கை எம் தாய்நாடு. இந்தியா எம் தந்தை நாடு. இரு நாடுகளுக்குள் இருக்கலாம் எல்லைக்கோடு. ஆனால் எமக்குள் இல்லை துளியும் வேறுபாடு. நாம் அனைவரும் தமிழ்த்தாய் பெற்ற பிள்ளைகள்.வெவ்வேறு பாத்திரங்களில் இருக்கின்ற ஒரே சுவையுள்ள பானம் நாங்கள்.  

எமக்கு அடித்தால் உங்களுக்கு வலிக்கிறதே, அது எப்படி? நாம் அழுதால் நீங்கள் துடிக்கின்றீர்களே, அது எப்படி சாத்தியமானது?

ஈழத்தமிழர்களுக்காக தன்னுயிர் நீத்த மாவீரர் முத்துக்குமார், தோழர் செங்கொடி எதனால் அப்படிச் செய்தார்கள்? தொப்புள் கொடி உறவின் மீதான பாசம் என்பது அதுதான். இலங்கையில் இருக்கின்ற படைப்பாளிகளுக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள் தமிழகத்தில் இருக்கின்றவர்கள்தான். இங்கு இருந்து வெளிவருகின்ற நூல்கள், சஞ்சிகைகளை நாம் வாசிக்கின்றோம். தமிழ்த் திரைப்படங்களை ரசிக்கின்றோம். தமிழ்ப் பாடல்களைக் கேட்கின்றோம். உணர்வுபூர்வமாக தமிழகத்தோடு நாம்  எப்போதும் ஒன்றித்தே இருக்கின்றோம்.

உங்களுக்கும் இசைஞானி பிடித்திருக்கிறது. ‘ஆஸ்கார்’ நாயகன் பிடித்திருக்கிறது. அதுபோல் எங்களுக்கும்  அவர்களைப் பிடிக்கும். எங்களுக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்தான். எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் இலங்கையிலும் இருக்கிறது.உலக நாயகன் கமல் நடிப்பை நாமும் ரசிக்கிறோம். தலயையும் தளபதியையும் நாமும் தலையில் வைத்துக் கொண்டாடுகிறோம். தமிழன் என்ற திமிர் உங்களுக்கு இருப்பதுபோல் எங்களுக்கும் இருக்கிறது. இப்படி எத்தனையோ விடயங்களில் நாம் ஒரே பாதையில் பயணிக்கின்றோம்.

இலங்கைத் தமிழர்கள் தமிழ் நாட்டிலிருந்து தமிழ்ப்பாடல்களையும் கவிதைகளையும் இதுகாலம் வரை இறக்குமதி செய்து வந்தார்கள். நான் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்ய முனைந்திருக்கின்றேன். தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாத ‘கொன்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி’ என்ற இத்தாலியர் தமிழ் உரைநடையின் தந்தையாகப் போற்றப்படுகின்றார். அவர்தான் ‘தேம்பாவணி’ என்ற காப்பியம் தந்த புலவர் வீரமா முனிவர். வெள்ளைக்காரனே தமிழகம் வந்து தமிழுக்கு வெள்ளையடிக்கும்போது இலங்கைத் தமிழன் இந்திய தமிழர்களின் உணர்வுகளை எழுதுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.”

“கா.மு.ஷெரீப், ரோஷனா பேகம், மு.மேத்தா ஆகியோரைத் தொடர்ந்து தற்போது நீங்கள்... தமிழ் சினிமாவில் இஸ்லாமிய பாடலாசிரியர்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளதே?”

“தமிழ் சினிமாவில் பாடல் எழுதுவதென்பது இலகுவான விடயமல்ல.ஒரு காலத்தில் முகவரி இல்லாமல் அலைந்தவர்கள் தமிழ் சினிமாவுக்கே முகவரிகளாக மாறியிருக்கின்றார்கள்.  தட்டாமல் கதவு கூட திறக்காது. இங்கே போராடாமல் எதுவுமே கிடைக்காது.கிடைத்தாலும் நிலைக்காது. முஸ்லிம் கவிஞர்கள் பாடல் எழுதுவதற்கு முயற்சிக்காது இருந்திருக்கலாம். வந்தாரை வரவேற்று வாழ்வைக்காட்டி வளர்ந்தோங்கி அவர் நிற்க வழியைக் காட்டும் பண்புள்ள மக்கள் உள்ள நாடு தமிழ்நாடு. இங்கே எவராக இருந்தாலும் திறமையும் முயற்சியும் இருந்தால் தமிழ் சினிமா தூக்கியெறியாது.  என்றோ ஒருநாள் தோளில் தூக்கி வைத்துக்கொண்டாடும்.”

“பிறமொழி வார்த்தையைக் கலக்காமல் தமிழில் மட்டும் பாடல் எழுதும் கொள்கையை வைத்துள்ளீர்களா?”

“உலக மொழிகளின் ‘ஏவாள்’ தமிழ்தான். நாம் பேசும் தமிழில் பன்னாட்டு மொழிகள் கலந்திருக்கின்றன. அதுபோல் நம் மொழியும் பல மொழிகளில் மலர்ந்து மணக்கிறது.நான் குமளி பழம் சாப்பிட்டேன் என்றால் இன்று பலருக்கும் புரியாது. ஆப்பிள் பழம் என்றால் அனைவரும் இலகுவில் புரிந்துகொள்வர். சீமெந்து என்றால் பைஞ்சுதை என்று இங்கு எத்தனை பேருக்குத் தெரியும்? மேசை என்ற போர்த்துக்கேய சொல்லைத்தான் நாம் தத்தெடுத்து தமிழாக நினைத்து பயன்படுத்துகின்றோம். பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களில் ஆங்கில வார்த்தைகளை தமிழுக்கு நிகராக பயன்படுத்துவதை நான் பார்த்திருக்கிறேன்.

இங்கு பலருக்கு ஆங்கிலம் தெரிந்தளவுக்கு தமிழ் தெரியாது என்பது உறைக்கும் உண்மை. இத்தகைய சூழலில் தூய தமிழில் மட்டும்தான் பாடல் எழுதுவேன் என்று கூறுவது ஏமாற்று வேலை. உடை தைக்கும் தையல்காரரிடம் யாராவது அவருக்குப் பிடிக்காத நிறத்தில துணியைக் கொடுத்தாலும் தைத்துக் கொடுத்தே ஆகவேண்டும்.

எனக்கு இந்த நிறம் பிடிக்கவில்லை என்னால் இதனை தைக்க முடியாது என்று சொன்னால் வந்தவர் வேறு தையல்காரரை நாடுவார். அந்த தையல்காரர் நிலைதான் பாடலாசிரியனுக்கும். இங்கு எங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை.

கதைச் சூழலுக்கு என்ன தேவையோ, இயக்குனர், இசையமைப்பாளர் எதை விரும்புகிறாரோ அதைத்தான் நாங்கள் செய்ய வேண்டும். தமிழ் சினிமாவில் நான் இப்படித்தான் பாடல் எழுதுவேன் என்று முரண்டு பிடிக்க முடியாது. எப்படி நான் எழுத வேண்டும் என்று கேட்க வேண்டும். நான் ஆங்கில வார்த்தை கலந்து எழுத மாட்டேன்; தூய தமிழில்தான் எழுதுவேன் என்று சொல்லிக்கொண்டிருந்தால் அந்த வாய்ப்புக்காக பலர் வரிசையில் காத்திருக்கின்றார்கள்.

தூய தமிழில் பாடல் வரவேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம் நமது அன்றாட வாழ்வில் தமிழுக்கு கொடுக்கும் இடந்தான் என்ன? ஆங்கிலத்தில் பேசுவதை கௌரவமாய் நினைக்கும் நாம் குறைந்த பட்சம் தமிழர்களுடனாவது தமிழில் பேசுகின்றோமா? ‘குட்நைட்’டில் தூங்கச் செல்லும் எங்கள் இரவு ‘குட்மார்னிங்’ கில் தானே  மீண்டும் எழும்புகிறது?”

“இலங்கையில் இருக்கும் நீங்கள் பாடல் வாய்ப்புகளை எப்படி பெறுகின்றீர்கள்? சிட்ச்சுவேஷன்  மெட்டுகளை எப்படி தெரிந்துகொள்கிறீர்கள்?”

“இசையமைப்பாளர்- நடிகர் விஜய் ஆண்டனியின் ‘நான்’ படத்தில் இடம்பெற்ற ‘தப்பெல்லாம் தப்பேயில்லை’ என்ற பாடலினூடாகத்தான் நான் தமிழ் சினிமாவில் அறிமுகமானேன். அதன் பின்னர் சுமார் 15 படங்களில் நான் பணிபுரிந்துள்ளேன். ‘அமரகாவியம்’, ‘சும்மாவே ஆடுவோம்’ ‘எந்த நேரத்திலும்’ ஆகிய படங்கள் இதுவரை  வெளியாகியுள்ளன. இயக்குனர் ஜீவாசங்கரின் ‘அமரகாவியம்’ படத்தில் ஜிப்ரானின் இசையில் ‘தாகம் தீர கானல் நீரை காதல் இன்று காட்டுதே’ பாடலுக்கு சிறந்த வெளிநாட்டுப் பாடலாசிரியருக்கான தனியார் அமைப்பின் விருது எனக்குக் கிடைத்தது.

எந்த நேரத்திலும் படத்தின் இயக்குனரையோ, இசையமைப்பாளரையோ நேரடியாகச் சந்திக்காமலே இந்தப் படத்தின் பாடல்கள் என்னால் எழுதப்பட்டன. கடல் கடந்து இருந்தாலும் தேவையேற்பட்டால் அவ்வப்போது  சென்னைக்கு வந்து போகின்றேன். 2019ம் ஆண்டில் நான் பணிபுரிந்த பல படங்கள் வெளிவர இருக்கின்றன. புதிய படங்களுக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளேன்.

தூரத்தில் இருப்பதால் பல நல்ல வாய்ப்புகளும் கடைசி நேரத்தில் கைநழுவிப் போயிருக்கின்றன. தேடி வரும் வாய்ப்புகளை பயன்படுத்துகின்றேன். வாட்சப் தொழில் நுட்பம் என் பாடல் பணியை இலகுவாக்குகிறது. வாட்சப்பில் டியூன் கேட்டு வாட்சப்பில் கதை கேட்டு வாட்சப்பில் பாட்டெழுதி வாட்சப்பில் அதை திருத்தும் வண்மை மிகு பாவலன் நான் வாழ்க்கையிலே கண்டவற்றை வார்த்தைகளில் கொண்டு வந்து வானளந்த தேன் கவியால் வரலாற்றில் பெயர் பதிப்பேன்.”

“கவிஞர்,  திரைப்படப் பாடலாசிரியர் தவிர்த்து வேறு என்ன மாதிரியான கலை வடிவங்களில் விருப்பம்?”

“ஆரம்பத்தில் பத்திரிகைத் துறையில் பணியாற்றிய நான், அதன் பின்னர் தொலைக்காட்சித் துறையில் இணைந்து பத்தாண்டுகாலமாக பணிபுரிந்து வருகின்றேன். நான் இயக்கிய ‘தூவானம்’ என்ற நிகழ்ச்சி தேசிய விருதினைப் பெற்றுள்ளது.சிறுகதைகளும் எழுதியுள்ளேன். நான் பிறந்த மண்ணின் வாழ்வியலை நாவலாய் எழுதவேண்டும் என்ற எண்ணமும் உள்ளது.

நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை பற்றி காவியம் ஒன்று எழுத வேண்டும் என்ற கனவும் உள்ளது. வானொலிகளுக்கு நிலைய குறியீட்டு இசை மற்றும் விளம்பரங்களும் எழுதியுள்ளேன். வாய்ப்பு கிடைத்தால் தமிழ் சினிமாவுக்கு என்னால் வசனம் எழுத முடியும் என்ற நம்பிக்கையுண்டு. தமிழில் எந்த கலைப்படைப்பையும் என்னால் படைக்க முடியும்.ஒரு போதும் முடியாது என்று நான் கருதியதில்லை. காரணம், என்னிடம் ‘தமிழ்’ இருக்கிறது.”

“உங்களுக்குப் பிடித்த கவிஞர் யார்? இலக்கியவாதிகள் யார்?”

“பிடித்த கவிஞர் இருந்தால் பிடிக்காத கவிஞர்களும் இருக்கலாம் அல்லவா.எனக்கு அப்படி இல்லை. நான் நல்ல கவிதைகளைத் தருகின்ற என் சம காலத்து கவிஞனுக்கும் ரசிகன்தான். தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் பல நல்ல கவிஞர்கள் இருக்கின்றார்கள். அவர்களைப் படிக்கின்றேன். பட்டியலிட விருப்பமில்லை. வைரமுத்து, பா. விஜய் ஆகியோர் எனது கவிதை நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ளனர்.

அப்துல் ரஹ்மான் தலைமையில் மலேசியாவில் நடைபெற்ற பன்னாட்டுக் கவியரங்கில் நான் பாடிய மரபுக்கவிதை  எனது மரபு அறிவுக்கு சிறந்த எடுத்துக் காட்டு என்று வைரமுத்து எனது நூலில் குறிப்பிட்டுள்ளார். கவிக்கோவும் அருகே அழைத்து தோள் தொட்டு என்னை அந்தக் கவியரங்கு நிகழ்வின்போது வாழ்த்தினார். அது என்வாழ்வில் மறக்க முடியாது. கவிஞர் மு.மேத்தா அவர்களின் நேரடி வாழ்த்தினையும் பெற்றுள்ளேன். இவர்களை வாசித்து கடந்து வராத கவிஞர்கள் தமிழில் இல்லை என்றே கூறலாம்.”

“உங்கள் பாடலுக்கு இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பு எப்படி உள்ளது?”

“தமிழகத்தை சேர்ந்த ஒருவர் தமிழ் சினிமாவில் பாடல் எழுதிவிட்டால் அது சாதாரண சம்பவம்தான்.ஆனால் இலங்கையர் எந்த வடிவத்தில் தமிழ் சினிமாவுக்கு பங்களிப்பு செய்தாலும் அது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இருபது ஆண்டுகள் இலக்கிய உலகில் வராத புகழை தமிழ் சினிமாவில் பாடல் எழுத ஆரம்பித்து ஆறு ஆண்டுகளுக்குள் நான் அடைந்துள்ளேன்.தமிழ் சினமாவில் பாடல் எழுதிய பிறகுதான் என் கவிதைகளுக்கும் சரியான கௌரவம் கிடைத்துள்ளது. ரசிகர்களும் அதிகரித்துள்ளனர் என்று சொல்லலாம்.”

“எதிர்காலத்தில் பொத்துவில் அஸ்மின் எப்படி அறியப்பட வேண்டும்? ”

“தமிழ் சினிமாவின் சிறந்த பாடலாசிரியர்கள் வரிசையில் எனது பெயரும் பதியப்பட வேண்டும் என்றே நான் விரும்பு கின்றேன். அதற்கான முயற்சியின் ஆரம்ப நிலையில் இருக்கின்றேன். என்றோ ஒருநாள் இந்த உலகே என் பாடல்களை, கவிதைகளை கொண்டாடும் என்று உறுதியாக நம்புகின்றேன்.”

“முதல் பாடல் வாய்ப்பு வழங்கிய விஜய் ஆண்டனி பற்றி?”

“நான் வாழ்வில் மறக்க முடியாத, என்றும் மறக்கக்கூடாத மனிதர் விஜய் ஆண்டனி. வைரமுத்து ஐயாவுக்கு ‘இதுவொரு பொன்மாலைப் பொழுது’ பாடல் எப்படி நல்ல ஆரம்பமாக அமைந்ததோ அதுபோல் ‘தப்பெல்லாம் தப்பேயில்லை’ பாடல் உங்களை உயரத்தில் இருத்தும் என்று அன்றே கட்டியம் கூறியிருந்தார். தமிழில் முதல் நாவலை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பேரன் அவர்.

தமிழாற்றல் மிக்கவர்.மிகச்சிறந்த உழைப்பாளி.எவ்வளவு உயரத்துக்குச் சென்றாலும் கடந்து வந்த பாதையை மறக்காமல் தன்னடக்கதோடு பழகுபவர். தன்னம்பிக்கை மிகுந்தவர்.நான் தமிழ் சினிமாவில் பெற்ற முதல் விருதினை அவருக்குத்தான் சமர்ப்பணம் செய்தேன்.குறுகிய காலகட்டத்துக்குள் பலரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமை அவருக்கு உண்டு.என் இதய இருக்கையில் அமர்ந்திருக்கும் உன்னதமான மனிதர்களில் அவருக்கு என்றும் நிரந்தர இடமுண்டு.”

- சுரேஷ்ராஜா