டைட்டில்ஸ் டாக்-104



முந்தானை முடிச்சு பயில்வான் ரங்கநாதன்

நான் நடித்த முதல் படமான ‘முந்தானை முடிச்சு’ படமே எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்போது எனக்கு திருமணம்  ஆகவில்லை. லாட்ஜில் தங்கி சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தேன்.
பாக்யராஜ் சாருக்கு பிரவீணாவுடன் திருமணம் நடந்திருந்தது. பிரவீணா எனக்கு திருமணத்துக்கு முன்பே நல்ல நண்பர். அதன் அடிப்படையில் லாட்ஜுக்கு போன் பண்ணி ‘முந்தானை முடிச்சு’ படத்துக்கு ஆடிஷன் நடப்பதாக சொல்லி ராஜாவை (பாக்யராஜ் சாரை அப்படித்தான் அழைப்பார்கள்) போய் பாருங்கள் என்றார்.

அங்கு பாக்யராஜ் குழுவில் இயக்குநர் அவினாசிமணியும் இருந்தார். இவர் பாண்டியராஜனின் மாமனார்.  மணி சார் என்னைப் பார்த்தவுடன் ‘‘இவரை எம்.ஜி.ஆர். சாரே நடிகனாக்க முயற்சித்தார். ஆனால் பத்திரிகையாளராக இருந்துவிட்டார்’’ என்று எனக்காக பாக்யராஜ் சாரிடம் சிபாரிசு பண்ணினார்.

பாக்யராஜ் சாரும் ‘நல்ல கேரக்டர் இருந்தால் தகவல் கொடுக்கிறேன்’ என்றார். அதற்கு முன், பாக்யராஜ் சார் இயக்கத்தில் ‘தூறல் நின்னுப் போச்சு’ படத்தில் நம்பியார் நடித்த ரோலில் நான்தான் நடிப்பதாக இருந்தது. அந்தக் கேரக்டரில் நம்பியார் சாமி நடித்தால் நல்லா இருக்கும் என்று பாக்யராஜ் சார் ஃபீல் பண்ணியதால் நடிக்கமுடியவில்லை.

அதன்படி ‘முந்தானை  முடிச்சு’ ஆரம்பித்ததும் வாய்ப்பு தருவதாக உறுதி அளித்திருந்தார். ஆடிஷனுக்காக ஏவி.எம்.மில் கூட்டம் அலைமோதியது. ஒரு உதவியாளரிடம் ‘வைத்தியர் கேரக்டரை அண்ணனுக்கு கொடுத்துடுங்க’ என்று பாக்யராஜ் சொன்னதும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

படப்பிடிப்பு ஆரம்பித்து மூன்றாவது நாள் படப்பிடிப்பு தளத்துக்கு போனேன். பதினைந்து வரிகளுக்கு டயலாக் கொடுத்தார்கள். ‘ஏம் புள்ள அவனே காய்ஞ்சி போய் இருக்கான். நீ புள்ளத்தாச்சி பொண்ணு. அவனுக்கு போய் முருங்கை குழம்பு, முருங்கை பச்சடி என்று முருங்கை ஐட்டங்களை செய்து கொடுக்கலாமா. அப்புறம் அவன் சும்மா இருப்பானா’ என்ற டயலாக்கை சிங்கிள் டேக்கில் ஓ.கே.பண்ணினேன்.

பாக்யராஜ் சார் உட்பட யூனிட்ல இருந்த அனைவருக்கும் நான் சிங்கிள் டேக்கில் ஓ.கே. பண்ணியதில் மகிழ்ச்சி. ஒளிப்பதிவாளர் அசோக்குமார் சார் தனியாக அழைத்து பாராட்டினார்.அந்தப் படத்தில் நடை, உடை, நரை முடி என்று கெட்டப்பே மாறியிருக்கும். அப்போது எனக்கு 24 வயது. ஆனால் படத்துல 65 வயது கிழவனா நடித் திருந்தேன்.

படம் மாபெரும் வெற்றியடைந்தது. விழா மேடையில் பாக்யராஜ் சார் காலில் வீழ்ந்து வணங்கினேன். அதற்கு முன் நான் யார் காலிலும் வீழ்ந்தது இல்லை. அருகில் இருந்த தயாரிப்பாளர் சரவணன் சார், பாக்யராஜ் சாரிடம் என்னை சுட்டிக் காண்பித்து ‘இவர் வித்தியாசமான பத்திரிகையாளர். சினிமாக்காரர்களை எதிர்த்து கேள்வி கேட்கக் கூடியவர். ஆச்சர்யம்...அவர் உங்க காலில் வீழ்ந்து வணங்குகிறார்’ என்றார்.

நான் உடனே ‘சார், அவர் என்னை பயன்படுத்திய விதத்துக்காகவும் அவர் மீது இருந்த மரியாதை, திறமைக்காகவும் விழுந்தேன். எனக்குள் இருக்கும் காமெடியனை வெளியே கொண்டு வந்தது பாக்யராஜ் சார்’ என்றேன். உடனே பாக்யராஜ் சார், சரவணன் சாரிடம் ‘நீங்க ரங்கநாதன் ஃபைட் மாஸ்டர் மாதிரி இருக்கார்! அவர்  போய் வைத்தியர் ரோல் பண்ணுவதா என்று கேட்டீர்கள். ஒமக்குச்சி மாதிரி ஒருவரை வைத்தியராக போட்டால் காமெடியாக இருக்கும். கிராமத்து ஜனங்க ஏற்க மாட்டார்கள். கிராமத்துல வைத்தியர் வாட்டசாட்டமா இருந்தா தான் ஏற்றுக் கொள்வார்கள்.

அப்போதுதான் வைத்தியர் நோய் இல்லாதவர் என்று நம்புவார்கள், என்று லாஜிக் பாயிண்ட்டை எடுத்துச் சொன்னதை நினைவு படுத்தினார். சரவணன் சாரும் அதை ஆமோதித்தார்.அந்தப் படம் செய்த சாதனைகளில் ஒன்று... பத்து பைசாவாக இருந்த முருங்கைக்காய் ஒரு ரூபாயாக உயர்ந்தது. பின்னடைவு என்றால், அந்தப் படத்தில் நடித்ததால் என்னை முந்தானையில் முடிந்து கொள்ள ஒரு பெண்ணும் கிடைக்கவில்லை. யாரும் எனக்கு பெண் கொடுக்க முன் வரவில்லை. நீண்ட தேடலுக்குப் பிறகு பெண் கிடைத்தது.

எல்லோரும் எனக்கு பெண் கொடுக்க தயங்கியபோது என் மாமியார்தான் என்னை தேர்வு செய்தார். நான் சினிமாக்காரன் என்பதால்  மைத்துனர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.  திருமணம் முடிந்து சென்னைக்கு  திரும்பும்போது தூத்துக்குடி ரயில் நிலையத்தில் என்னுடைய அப்பா சொன்ன  ஆலோசனை... ‘கல்யாணம் ஆகிவிட்டது. இனி டிராக் மாறக் கூடாது’ என்றார். அது  இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அடிப்படையில் நான் முரட்டு மனிதன். என்னைப் பார்த்தாலே மிரளுவாங்க. மனைவி வந்ததும் மாற்றம் வரும் என்பார்கள். அது என் வாழ்வில் நடந்தது. நான் இன்று மனிதனாக இருக்க காரணம் என் மனைவி. காரணம்... எனக்கு சில கெட்ட பழக்கங்கள் இருந்தது. அதை மாற்றியது ‘முந்தானை முடிச்சு’. இன்று என் பிள்ளைகள் நல்ல படியாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் என் மனைவி. நான் சினிமாவில் சம்பாதித்தது குறைவுதான். ஆனால் அந்த குறைந்த சம்பளத்தில் கெட்டிக்காரத்தனமாக குடும்பம் நடத்தி இரண்டு  பெண்கள், ஒரு மகனை நன்றாகப் படிக்க வைத்து  குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வந்தார்.

ஜல்லிக்கட்டு காளை மாதிரி திரிகிறவர்களைத்தான் முந்தானை முடிச்சு போட்டு அங்கும் இங்கும் நகர முடியாத அளவுக்கு லாக் பண்ணணும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். முடிச்சு என்பது லகான் மாதிரி. இழுத்தவுடன் வந்துவிட வேண்டும். கி.மு., கி.பி. என்று இருப்பது போல் என் வாழ்க்கையை முந்தானைக்கு முன் முந்தானைக்குப் பின் என்று பிரித்துவிடலாம்.

முந்தானை முடிச்சுக்குப் பிறகு என்னுடைய டிராக் வேறு மாதிரி ஆனது. முந்தானை முடிச்சுக்குப் பிறகுதான் பைக், வீடு, கார் வாங்கினேன். இதுவரை நான் எவ்வளவு சம்பாதிக்கிறேன் என்று மனைவிக்குத் தெரியாது. மனைவி என்ன செலவு பண்ணுகிறார் என்று எனக்குத் தெரியாது. குடும்பக்  கணக்கு வழக்கு எல்லாமே மனைவி கையில்தான். ஆனால் எங்களுக்குள் அநாவாசியமா சண்டை சச்சரவு வந்ததில்லை.

பிள்ளைகள் அப்பாவிடம் அன்பு காட்டுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் மனைவி. கணவன் மனைவி வேலை செய்கிற வீட்டில் பணம் இருக்கும். பிள்ளைகளுக்கு கேட்டது கிடைக்கும். ஆனால் அந்தப் பிள்ளைகளுக்கு பெற்றோரிடம் பாசம் குறைவாக இருக்கும். என் அனுபவத்தில் சொல்வதாக இருந்தால் இல்லத்தரசியாக இருப்பவர்கள் பிள்ளைகளை நல்ல வழிக்குக் கொண்டுவரமுடியும். அதை நான் என் வாழ்வில் நேரடியாகப் பார்த்துள்ளேன். சிலபேருக்கு தன் மனைவி வேலைக்கு போய் பொருள் ஈட்டவில்லையே என்ற வருத்தம் இருக்கலாம். பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை.

பணம் எப்போதும் முழு திருப்தி கொடுக்காது. நிம்மதியான வாழ்க்கைக்கு பணம் தேவை. ஆனால் பணம் மட்டுமே நிம்மதி கொடுக்க முடியும் என்ற முடிவுக்கு வரக்கூடாது. வரவுக்கு ஏற்ற செலவு இருந்தால் வாழ்க்கையில் நிம்மதி அடையலாம். வீட்ல என்ன சண்டை நடந்தாலும் நான் விட்டுக் கொடுத்து விடுவேன். சிலர் வீட்ல புலியாகவும் வெளியே எலியாகவும் இருப்பார்கள்.

என்னைக்கேட்டால் நாம் எலியாக இருக்க வேண்டியது வீட்டில்தான். காரணம், ஆண்கள் வெளியே பல பேரிடம் சண்டை போட முடியும். தங்கள் கோபங்களையும், ஆதங்கங்களையும் கொட்டித் தீர்க்க முடியும். ஆனால் மனைவிக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை கணவன் மட்டுமே. அவரிடம்தான் தன்னுடைய கோபத்தை வெளியே கொட்ட  முடியும்.

முந்தானை முடிச்சு மதிப்பை என் வாழ்க்கையில் கண்டுள்ளேன். பொதுவா மனைவி கோபத்தை வெளிப்படுத்தக் காரணம் கணவன் மீது வைத்துள்ள அதீத அன்பு. ஒருவர் எப்படி சீரழிந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பவர்கள் கோபிக்க மாட்டார்கள். மகனை அம்மாவிடமிருந்து பிரித்துவிட்டாள் என்று முந்தானை முடிச்சை வைத்து பெண்ணை தவறாகப் பேசலாம்.

கணவன், மனைவி பேச்சை கேட்பதை தவறாகப் பார்க்க வேண்டியதில்லை. ஒரு மனிதன் எவ்வளவு புகழ், செல்வம் அடைந்திருந்தாலும்  திருமணத்தில் தான் வாழ்க்கை நிறைவு பெறுகிறது. அந்த வகையில் கணவனை நம்பி வந்த மனைவியை கை விடவும் கூடாது. அதே சமயம் பெற்றெடுத்த தாயை உதாசீனப்படுத்தவும் கூடாது.

மனைவிபற்றி அம்மா புகார் வாசித்தால் அமைதியாக இருந்துவிட வேண்டும். அதே மாதிரி அம்மா,  மனைவி மீது புகார் வாசித்தால் அமைதியாக இருந்து விட வேண்டும். இந்த மாதிரி அணுகுமுறை இருந்தால் சண்டையே வராது. அம்மாவுக்கும் தலையாட்ட வேண்டும், மனைவிக்கும் தலை ஆட்ட வேண்டும். அம்மா, மனைவி இருவரையும் பேலன்ஸ் பண்ண வேண்டும் என்றால் எதிர்த்து பேசக் கூடாது.

மனைவிக்கு நாம் எவ்வளவு சுதந்திரம் கொடுக்கிறோமோ அந்தளவுக்கு கணவனுக்கு சுதந்திரம் கிடைக்கும். மனைவியின் சமையலை குறை சொல்ல ஆரம்பித்தால் சாப்பாடு குறைந்துவிடுவது போல் மனைவியின் குறைகளை பெரிதாக்காமல் நிறைகளை பேசினால் இல்லறம் இனிக்கும்.

மனைவி பேசும்போது கணவன் அமைதியாக இருக்க வேண்டும். கணவன் பேசும் போது மனைவி அமைதியாக இருக்க வேண்டும். இந்த சூத்திரத்தைச்தான் என்குருநாதர் பாக்யராஜ் சாரும் கடைப்பிடிக்கிறார். நானும் கடைப்பிடிக்கிறேன்.நண்பர்களே... மனைவியை ஜெயிக்க நினைத்தால் வாழ்வில் தோல்விதான் கிடைக்கும். வாழ்க்கையில் ஜெயிக்கணும்னா மனைவியிடம் தோற்றுப்போங்கள்!

தொகுப்பு : சுரேஷ்ராஜா

(தொடரும்)