மின்னுவதெல்லாம் பொன்தான்-20



ஆணாக நடித்த பெண்!

ஒல்லியான உடம்பு. சுருள் சுருளான தலைமுடி. துறுதுறு பார்வை. ஐரோப்பிய தோற்றம். இப்படியான தோற்றத்தோடு ஒரு நடிகையைப் பார்த்த நினைவிருக்கிறதா?கங்கணா ரனாவத்தென்று சட்டென்று சொல்வீர்கள்.
இன்னும் கொஞ்சம் யோசியுங்கள்.ருக்மணி விஜயகுமாரை நினைவு வருகிறதா? யெஸ். அவரேதான்.பாரதிராஜா இந்தி மற்றும் தமிழில் இயக்கிய ‘பொம்மலாட்டம்’ படத்தின் நாயகி.பூர்வீகம் தமிழ்நாடு, பிறந்து வளர்ந்தது பெங்களூரு. இப்போது இருப்பது ஹைதராபாத். நியூயார்க் ஃபிலிம் அகாடமியில் நடிப்பு பயின்றவர்.

முதல் படத்திலேயே ஆச்சர்யங்களை நிகழ்த்தியவர் ருக்மணி. அடிப்படையில் நடனக் கலைஞரான அவர் பொம்மலாட்டம் படத்தில் ஒரு நாடோடி நடனக் கலைஞராக இருந்து சினிமா நடிகை ஆகும் கேரக்டரில் நடித்திருப்பார். இன்னுமொரு சிறப்பு என்னவென்றால் அவர் கதைப்படி ஒரு ஆணாக நடித்திருப்பார். கமல்ஹாசன், பிரசாந்த், விக்ரம், விஜய்சேதுபதி என்று பெரிய நடிகர்கள் பெண் வேடம் போட்டதுண்டு. ஆனால், பெண்கள் ஆணாக நடிப்பது அரிதிலும் அரிது.

ஒரு திரைப்பட இயக்குநர், தான் நினைத்தால் யாரையும் யாராகவும் நடிக்க வைக்க முடியும் என்ற வைராக்கியம் கொண்டு ஒரு ஆணை பெண்ணாக நடிக்க வைத்து அனைவரையும் ஏமாற்று வது தான் அந்தப் படத்தின் கதை.அந்த இயக்குநராக நானா படேகர் நடித்தார். தொடர்ச்சியான கொலைகளை துப்பறியும் போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் நடித்திருந்தார். அர்ஜுன் ஜோடியாக, கதைக்கு முக்கியத்தும் இல்லாத கேரக்டரில் அறிமுகமானவர் காஜல் அகர்வால்.

ஆனால் இன்றைக்கு காஜல் அகவர்வால் எங்கே... ருக்மணி எங்கே?இதுதான் காலம் போடும் கணக்கு. பொதுவாக பாரதிராஜாவின் அறிமுகங்கள் உயர்ந்த இடத்தைப் பிடிப்பார்கள். அப்படித்தான் காஜலும் பிடித்தார்.ஆனால் - ருக்மணிக்கு மட்டும் கணக்கு மாறியது.காரணத்தை யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது.

‘பொம்மலாட்டம்’ வெளிவந்த பிறகு ஆனந்த தாண்டவம் படத்தில் நடித்தார். இதிலும் நடனக் கலைஞராகத்தான் நடித்தார். அதன் பிறகு வாய்ப்புகள் எதுவும் தமிழில் இல்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘கோச்சடையான்’ அனிமேஷன் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். அதுவும் பெரிதாக பேசப்படவில்லை.

ஒரு வேளை ‘பொம்மலாட்டம்’ படம் இந்தியில் வெளிவந்திருந்தால் காலத்தின் கணக்கு  வேறாகக்கூட இருந்திருக்கலாம்.இடையில் கன்னடத்திலும் முயற்சித்துப் பார்த்தார். சிவராஜ்குமார் நடித்த ‘பஜ்ரங்கி’யில் அவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. இருந்தும், அங்கும் அடுத்தடுத்து வாய்ப்புகள் அமையவில்லை.

சினிமா கைவிட்டு விட்டது என்பதற்காக அவர் முடங்கிவிடவில்லை. தனது நடனத் திறமையை முன்னிறுத்தினார். அடிப்படையில் அவர் பரதநாட்டியக் கலைஞர். பாலே  நடனத்தையும், பரதநாட்டியத்தையும் இணைத்து  புதிய வகை நடனத்தை உருவாக்கி ஆடினார். உலகம் முழவதும் சென்று நடன நிகழ்ச்சிகள் நடத்தினார்.

நெதர்லாந்து நாட்டில் உள்ள கார்சோ அரங்கில் அவர் நடத்திய நடன நிகழ்ச்சி இன்றைக்கும் பேசப் படுகிறது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நடன பள்ளிகள் நடத்துகிறார். யோகா, மாடலிங், நடிப்பு, நடனம் என பன்முகத் தன்மையுடன் வலம் வருகிறார். ஒரு வகையில் சினிமாவுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். ஒரு நல்ல நடனக் கலைஞரை, சகலகலாவல்லியை இந்த உலகத்திற்கு தந்திருக்கிறது.

“ஏன் எனக்கு தொடர்ச்சியாக சினிமா வாய்ப்புகள் அமையவில்லை என்று  தெரியவில்லை. சில படங்கள் அதுவாகவே என்னைத் தேடி வந்ததுண்டு. நானோ  சினிமாவைத் தவிர்த்துவிட்டு நடனத்துக்கே அதிகமாக முக்கியத்துவம்  தந்திருக்கிறேன். சினிமாவில் தொடர்ந்து இருக்க வேண்டுமானால்,  பரதநாட்டியத்தைக் கைவிட வேண்டிய சூழல்.

என்னால் எப்போதுமே நாட்டியத்தை  விடமுடியாது” என்கிறார் ருக்மணி.கடைசியாக மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இன்னும் ருக்மணியின் காலம் நிறையவே இருக்கிறது. சினிமா அவருக்குரிய அங்கீகாரத்தைத் தருமா?

(மின்னும்)

●பைம்பொழில் மீரான்