காதல் மட்டும் வேணா



முரட்டு சிங்கிள் பரிதாபம்!

படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் இருக்கும் நாயகன் சாம்கானுக்கு திருமண ஆசை வருகிறது. ஆனால் அவரது வீட்டில் பெண் பார்ப்பதில் தீவிரம் காட்டாத நிலையில், ஒரு பெண்ணுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு நாள் திடீரென்று அந்த பெண் மாயமாகிறார். புகார் கொடுக்க அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு செல்கிறார் சாம்கான்.

சில மாதங்களுக்கு முன்பே அந்தப் பெண்ணை கற்பழித்து கொலை செய்துவிட்டதாகவும், முக்கிய குற்றவாளியைத் தேடி வருவதாகவும் இன்ஸ்பெக்டர் தெரிவிக்கின்றார். குற்றவாளி யார், கொலை செய்யப்பட்ட பெண் யார், இறுதியில் சாம்கானின் வாழ்க்கையில் நடந்தது என்ன ஆகிய கேள்விகளுக்கு சஸ்பென்ஸ் கலந்து விடை சொல்லியுள்ளார்கள்.

இயக்கம், நடிப்பு என இரண்டையும் கவனித்திருக்கிறார் சாம்கான். படத்தின் முதல் பாதி ஓரளவுக்கு விறுவிறுப்பாக சென்றாலும், இரண்டாவது பாதி தொய்வை ஏற்படுத்துகிறது. நாயகிகள் திவ்யாங்கனா, எலிசபெத் இருவரும் அழகு. சாந்தன்  இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஜே.எஸ்,கே.வின் ஒளிப்பதிவு சிறப்பு. மொத்தத்தில் காதல் மட்டும் வேணாவா வேண்டுமா என்று கேட்டால் வேணும்னு சொல்லலாம்.