கோகோ மாகோ



காதல் ஆல்பம்!

இசையமைப்பாளரான அருண்காந்த் தனது இசை ஆல்பத்தை வீடியோ ஆல்பமாக தயாரிக்க நினைக்கிறார். அதற்காக ரோட் ட்ரிப் செல்லும் நிஜ காதலர்களான ராம்குமார் - தனுஷா ஜோடியின் காதல் நடவடிக்கைகளை அவர்களுக்கே தெரியாமல் படம் பிடித்து அதை வீடியோ ஆல்பமாக தயாரிக்க முடிவு செய்கிறார்.

அதற்காக, ஒளிப்பதிவாளர் சாம்ஸ் உதவியை நாடுகிறார். அதன்படி காதலர்களுடன் ரோட் ட்ரிப்புக்கு செல்லும் சாம்ஸ், காதலர்களின் நடவடிக்கைகளை அருண்காந்த் நினைத்தது போல படம் பிடித்தாரா இல்லையா, அருண்காந்தின் இசை ஆல்பம் வெளியானதா இல்லையா என்பது மீதிக் கதை.

ஹீரோ ராம்குமார், ஹீரோயின் தனுஷா கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்கள்.  சாம்ஸ் காமெடி சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கிறது. டெல்லி கணேஷ், அஜய் ரத்தினம் போன்றவர்கள் தங்கள் அனுபவத்தால் கவனிக்க வைக்கிறார்கள்.

இந்தப் படத்தை இசையமைத்து இயக்கியுள்ள அருண்காந்த், விஷயம் தெரிந்தவர் என்பது அவர் திரைக்கதை அமைத்த விதத்திலே தெரிகிறது. தான் சொல்ல வந்ததை சுருக்கமாகவும், நேர்த்தியாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார்.