ரீல் சுத்தப் போறாங்க!



முனுசாமி, ஏராளமான இயக்குநர்களிடம் பணியாற்றிய அனுபவத்துடன் இயக்குநராகக் களமிறங்கியுள்ளார். புதுமுகங்கள் உதயராஜ், அவந்திகா நடிக்கும் இந்தப் படத்துக்கு ‘ரீல்’ என்று டைட்டில் வைத்துள்ளார்.
இறுதிக் கட்ட வேலையில் பிஸியாக இருந்த இயக்குநர் முனுசாமியை சந்தித்தோம். கோடை வெயிலில் வதங்கிக் கொண்டிருந்த நமக்கு இதமாக பதநீர் வாங்கிக் கொடுத்து பதமாகப் பேச ஆரம்பித்தார்.“டைட்டிலுக்கான கேள்வி இது...”

“புரியுது. இந்த டைட்டில் தான் படத்தைப் பற்றி பேச வைத்துள்ளது. எல்லாரும் ‘என்ன... ரீல் விடப்போறீங்க’ என்று கேட்கிறார்கள். காதுல பூ சுத்துற மாதிரியான விஷயங்கள் இல்லாமல்  உணர்வு பூர்வமான நல்ல கதையைச் சொல்லியுள்ளேன். காதல், ஃபேமிலி சென்டிமென்ட், காமெடி என்று பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த படமாக வந்திருக்கு.

ஹீரோ அப்பா, அம்மா இல்லாதவர். வாழ்க்கையில் சொல்லுமளவுக்கு பிடிப்பு இல்லாதவர். போதாதக்குறைக்கு சாப்பாட்டுக்கு அல்லாடுபவர். சின்னச் சின்னதா சில்லறைத் திருட்டு பண்ணி வயித்தைக் கழுவுபவர். அவருக்கு உள்ளூர் போலீஸ் அதிகாரி அடைக்கலம் தருகிறார்.ஹீரோயின் குடும்ப சூழ்நிலை காரணமாக சிட்டிக்கு வருகிறார். வந்த இடத்தில் சிறிய பிரச்சனையில் சிக்குகிறார்.

மீண்டும் ஊருக்குத் திரும்ப நினைத்தாலும் திரும்பமுடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அந்தச் சூழ்நிலையில் ஹீரோ, ஹீரோயினைச் சந்திக்கிறார். அதன்பிறகு அவர்கள் வாழ்க்கை எப்படி பயணிக்கிறது என்பதை உணர்வுகளுக்கு அழுத்தம் கொடுத்து சொல்லியிருக்கிறேன்.”
“புதுமுகங்கள் ஏன்?”

“இது மாஸ் ஹீரோவுக்கான கதை கிடையாது என்பதால் கதைக்குப் பொருத்தமான ஹீரோவைத் தேடினோம். ஏன்னா இது ஹீரோவை மனதில் வைத்து எழுதப்பட்ட கதை இல்லை என்பதால் கதையின் நாயகன் கிடைத்துவிடுவார் என்ற நம்பிக்கை இருந்தது. அப்படி கதை பண்ணி முடித்தப் பிறகுதான் ஹீரோவைப் பற்றிய டாக் வந்தது.

உதயராஜ் சில குறும்படங்களில் நடித்த அனுபவம் உள்ளவர். அவருடைய குறும்படம் பார்த்து விட்டுத்தான் நேரில் அழைத்தேன். என் கதையில் உள்ள ஒரு சீன் கொடுத்து நடிக்கச் சொன்னேன். அதில் எனக்கு திருப்தி வரவே அவரையே ஹீரோவாக ஃபிக்ஸ் பண்ணினோம்.இந்தப் படத்துக்குப் பிறகு தமிழில் பேசப்படும் நடிகராக இருப்பார். படத்தில் நடித்த நிறையப்  பேர் பல டேக் வாங்கினார்கள். ஆனால் உதயராஜ் சிங்கிள் டேக்கில் ஓ.கே. பண்ணிவிடுவார். ஒரு கட்டத்தில் அவர் ‘எனக்கு மட்டும் ஏன் சார் ஒரு டேக்ல ஓ.கே பண்றீங்க’ என்று கேட்டார். ‘மறு டேக் எடுக்க வேண்டிய அவசியம் இல்லைப்பா’ என்று சொன்னபிறகே திருப்தியடைந்தார்.

நாயகியாக அவந்திகாவை அறிமுகம் செய்கிறோம். கேரளாவைச் சேர்ந்தவங்க. மலையாளத்துல சில படங்கள்ல நடிச்சிருக்காங்க. கதைப்படி நாயகிக்கு சாவித்திரி அம்மா மாதிரி நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். எங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமளவுக்கு அவந்திகாவும் சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட்டாக பின்னியெடுத்தாங்க.”“படத்துல லிப்லாக் சீன் உள்ளதாமே?”

“காதல் கதைகளில் லிப்லாக் சீன் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கும். அதன்படி கதையின் தேவைக்காகவே அந்தக் காட்சியை எடுத்தோம். ஆனால் அந்தக் காட்சியை எடுக்க நான் தான் சிரமப்பட்டேன். ஏன்னா, வளர்ந்த நடிகைகள் சினிமாவை புரிந்தவர்களாக லிப்லாக் காட்சியில் ஜஸ்ட் லைக் தட் எனுமளவுக்கு நடித்துவிடுவார்கள்.

ஆனால் புதுமுகம் என்று வரும்போது இயல்பாகவே அவர்களிடம் அச்ச உணர்வு இருக்கும். லிப் லாக் சீன் வைக்கும்போது யூனிட்ல உள்ளவங்க சிலர் தேவையா என்று கேட்டார்கள். கதையின் முக்கியத்துவத்துக்கு தேவையாக இருந்தது என்று சொன்னேன்.

காட்சிப்படி ஹீரோ, ஹீரோயின் நெருக்கமாக இருக்கும்போது லிப் லாக் முத்தம் கொடுக்க வேண்டும். அந்தக் காட்சி எடுக்கும்போது ஹீரோ, ஹீரோயின் இரண்டு பேரிடமும் சொல்லாமல் ஸ்பாட்டுக்கு கிளம்பினோம். ஸ்பாட்ல முத்தக் காட்சியைப் பற்றி சொன்னதும் ஹீரோயின் அதிர்ச்சி அடைந்தவராக ‘அக்ரிமெண்ட்ல இந்த விஷயத்தை சொல்லவே இல்லையே’ என்று லா பாயிண்ட் பேசினார். கடைசியில் என் தரப்பு நியாயத்தை உணர்ந்து லிப் லாக் சீன்ல நடித்துக் கொடுத்தார். ஹீரோ, ஹீரோயின் இருவரும் பெர்ஃபாமிங் ஆர்டிஸ்ட் என்பதால் அந்தக் காட்சியை ஒரே டேக்ல எடுத்து முடித்தோம்.”

“மற்ற நடிகர்கள்?”

“வில்லனாக கேப்டன் கருடு பண்ணியிருக்கிறார். இவர் ராணுவத்தில் கேப்டனாக பணி புரிந்தவர்.  இவர் ரொட்டி சுட்ட வீரர் கிடையாது. போர்க்களத்தில் நாட்டுக்காக நின்று விளையாடிய வீரர். அதற்கு அவர் வீட்டில் இருக்கும் கேடயங்களும் பதக்கங்களுமே சாட்சி. டிவி புகழ் சரத் முக்கியமான வேடத்துலே வர்றார்.

கதைக்களம் கோவை என்பதால் கோத்தகிரியில் ஆரம்பித்து கோவையில் முடிவடைகிற மாதிரி திரைக்கதை அமைத்துள்ளேன். அந்த வகையில் கொங்கு மண்டலத்தில் படமாக்கியுள்ளோம். பாடல் காட்சியை மைசூர்ல உள்ள மேலக்கோட்டையில் எடுத்தோம். அரசுத் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் படப்பிடிப்புக்கு சுலபமாக அனுமதி வாங்க முடியாது. தமிழில் ‘தளபதி’ போன்ற சில படங்கள் எடுத்துள்ளார்கள். நீண்ட காலத்துக்குப் பிறகு நாங்கள்தான் அங்கு ஷூட் பண்ணியுள்ளோம்.”

“பாடல்கள் எப்படி வந்துள்ளது?”

“சந்தோஷ் சந்திரன் மியூசிக் பண்றார். மிக மிகத் திறமைசாலி. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற ஜாம்பவான்களின் இசைக் குழுவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். இந்தியளவில்  ப்ளமிங் கிடார் இசைப்படத்தில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களில் ஒருவர். பாடல்கள் எல்லோரும் ரசிக்கும்படியாக வந்துள்ளது.

பெண் எழுத்தாளர் சாரு ஹரிகரன் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். கார்த்திக், சுவேதா மேனன் போன்ற முன்னணி பாடகர்கள் பாடியுள்ளார்கள். என்னுடைய சாய்ஸாக ‘ஒன்றாக நின்றாயே’ பாடலைச் சொல்லுவேன். மேலக்கோட்டையில் எடுத்த பாடல் அது.  இந்த ஆண்டின் ‘டாப்-10’  பாடல்கள் வரிசையில் இடம் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கு.

ஒளிப்பதிவாளர் சுனில் பிரேமுக்கு இது பத்தாவது படம் என்பதால் அனுபவத்துக்கு பஞ்சமில்லை. மலைப் பகுதிகளில் படமாக்கும் போது கேமரா கிரேனில் இருந்த நேரத்தை விட அவர் தோளில்தான் அதிகமாக இருந்தது. அவர் ஒளிப்பதிவு பண்ணிய ‘மின்னா மினிகள்’ என்ற மலையாளப் படத்துக்கு நாயகிக்கான தேசிய விருது  கிடைத்திருப்பது ஒளிப்பதிவாளரைப் பற்றிய கூடுதல் தகவல்.

பின்னணி இசையை அச்சுராஜாமணி கவனிக்கிறார். சுராஜ் கதை எழுதி உள்ளார். இவர் பிரபல நடிகர் திலீப்புக்கு நெருங்கிய உறவினர். ஏராளமான வெற்றிப் படங்களின் கதாசிரியர். எடிட்டர் சாய் சுரேஷ் மிகப் பெரிய சீனியர். ‘அன்பே சிவம்’, ‘அருணாச்சலம்‘, ‘உள்ளத்தை அள்ளித்தா’ போன்ற ஹிட் படங்களில் வேலை பார்த்துள்ளார். படத்தை மிக ஷார்ப்பாக நிறுத்தியிருக்கிறார்.

முருகா மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. தயாரிப்பாளர்கள்  நிறையப்பேர் என்பதால் அவர்களை சம்மதிக்க வைப்பது சுலபமான காரியம் அல்ல. அதுமட்டுமில்ல, பேனருக்கு இதுதான் முதல் படம். தொடர்ந்து படம் பண்ணும் திட்டத்தோடு வந்துள்ளார்கள். எனக்குப் பிறகு வரும் திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கிடைப்பதும் கிடைக்காமல் இருப்பதும் என் கரத்தில் இருந்ததால் தயாரிப்பாளரின் இயக்குநராகவே இந்தப் படத்தை இயக்கினேன்.”

“உங்களைப் பற்றி...?”

“சொந்த ஊர் தர்மபுரி. அப்பா, அம்மா இருவருமே சினிமா பைத்தியம். அவர்கள் எந்தளவுக்கு சினிமா பைத்தியம் என்றால் ஊர்ல எந்தப் படம் நல்லா இருக்கு, எந்தப் படம் நல்லா இல்லை என்று அவர்களிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். அந்த வகையில் பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் தியேட்டரில்தான் என் பொழுது போகும். எங்க ஊர் என்று இல்லை. சுற்றுவட்டாரத்தில் காதுகுத்து, திருவிழா என்று எங்கு படம் போட்டாலும்  ஆஜராகிவிடுவேன்.

நான் சினிமாவுக்கு போறேன் என்றதும் வீட்லயும் பெரிதா எதிர்ப்பு காண்பிக்கவில்லை. ஒரு உதவி இயக்குநர் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளையும் நானும் சந்தித்துள்ளேன். கோடம்பாக்கத்தில் ஏராளமான இயக்குநர்களிடம் வேலை பார்த்த அனுபவத்துடன் இந்தப் படத்தை எடுத்துள்ளேன். என்னுடைய ரியல் லைஃபோட எதிர்காலம் இந்த ‘ரீல்’ படத்துல இருப்பதால் கொடுத்த வேலைக்கு நியாயமா வேலை செய்திருக்கிறேன் என்ற மனதிருப்தி இருக்கு.”

- சுரேஷ்ராஜா