ஹீரோவின் டார்ச்சரால் நடிகரான தயாரிப்பாளர்!அமெரிக்க தமிழர் ஆரோக்கியசாமி க்ளமென்ட் தயாரித்து, இசையமைத்து இயக்கியிருக்கும் படம் ‘முடிவில்லா புன்னகை’.இதில் ஹீரோவாக டிட்டோ என்ற பல் மருத்துவர் அறிமுகமாகிறார்.
ஹீரோயினாக பெங்களூரைச் சேர்ந்த ரக்‌ஷா நடிக்கிறார். இயக்குநர் ஆரோக்கியசாமி க்ளமென்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கூல் சுரேஷ் வில்லனாக நடித்திருக்கிறார். இவர்களுடன்  டெலிபோன் ராஜ், நெல்லை சிவா உள்பட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு தஷி பின்னணி இசையமைத்திருக்கிறார். பாடல்களுக்கு ஆரோக்கியசாமி க்ளமென்ட் இசையமைத்திருப்பதோடு, இளையகம்பனுடன் சேர்ந்து பாடல்களும் எழுதியுள்ளார். பவர் சிவா நடனம் அமைத்திருக்கிறார்.

சென்னையைச் சேர்ந்த ஆரோக்கியசாமி க்ளமென்ட் தற்போது அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டாலும், தனக்கு சினிமா மீது இருக்கும் ஆர்வத்தின் மூலம் ‘முடிவில்லா புன்னகை’ படத்தைத் தயாரித்து இயக்கியிருப்பதோடு நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளதாகக் கூறுகிறார்.

“இந்தப் படத்தில் நான் நடிக்கும் ஐடியாவே இல்லை. தயாரித்து இயக்குவது மட்டுமே என்னுடைய திட்டம். படத்தின் ஹீரோ டிட்டோ ஆரம்பத்தில் கொடுத்த சம்பளத்தை வாங்கிக் கொண்டு நடிக்க சம்மதித்தார். முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்தபிறகு அதிகமான தொகையை சம்பளமாகக் கேட்டதோடு, பணம் கொடுத்தால் தான் நடிப்பேன் என்றும் அடம்  பிடித்தார்.

இப்படி அவர் செய்த பிரச்சினையால் ரொம்பவே அப்செட்டானேன். பிறகு டிட்டோவை நீக்கிவிட்டு கதையை சற்று மாற்றி, புதிய கதாபாத்திரம் ஒன்றை படத்தில் சேர்த்து, அதில் நானே நடித்துள்ளேன்.

தற்போது நாட்டில் விவாகரத்து என்பது பெருகிவிட்டது. இளம் தம்பதியினரிடையே விவாகரத்து என்பது சர்வசாதாரணமாகிவிட்ட நிலையில், இந்தப்படம் அத்தகைய நிலையை மாற்றும் அளவுக்கு சிறப்பான மெசேஜைச் சொல்வதோடு, சினிமாத் துறையில் இருக்கும் கஷ்டங்களைப் பற்றியும் பேசுகிறது.

சினிமா என்பது கடல் போல. அதில் நீச்சல் அடித்து கரை சேர்வது என்பது மிக மிகக் கடினம் என்பதையும் இந்தப் படத்தில் சொல்லியுள்ளேன்.சென்டிமென்ட், காதல், காமெடி, மெசேஜ் என்று அனைத்தையும் கலந்து சொல்லப்பட்டிருக்கும் இந்தப்படம் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் பிடிக்கும் அளவுக்கு தரமான படைப்பாக இருக்கும்’’ என்றார்.

- எஸ்