சந்தோஷத்தில் கலவரம்



உல்லாசத்துக்கு தடை!

காஸ்மிக் சக்தி என்று சொல்லப்படும் வான்காந்த சக்திக்கும், மனிதர்களை வேட்டையாடும் தீய சக்திக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் இந்த ‘சந்தோஷத்தில் கலவரம்’.
என்ஜினியரிங் முடித்த ஐந்து நண்பர்கள் தங்கள் கேர்ள் ஃப்ரெண்ட்ஸுடன்  சந்தோஷம் அனுபவிக்க அடர்ந்த வனப் பகுதிக்கு சுற்றுலா செல்கிறார்கள். அங்குள்ள பிரம்மாண்டமான கெஸ்ட் ஹவுஸில் தங்குகிறார்கள். நண்பர்கள் தங்கள் பெண் தோழிகளுடன் உல்லாசமாக இருக்க திட்டமிடும்போது தடை ஏற்படுகிறது.

இதற்கிடையே இரண்டாவது பாதியில் என்ட்ரி கொடுக்கும் அமானுஷ்ய சக்தி நாயகன் நிரந்த்தை கொலை செய்ய துடிக்கிறது. நிரந்த்தின் பின்னணி என்ன, நண்பர்களின் உல்லாசத்  திட்டம் நிறைவேறியதா, அமானுஷ்ய சக்தியின் கொலை முயற்சிக்கான காரணம் என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு திகில் கலந்த விடைதான் படம்.

நாயகன் நிரந்துக்கு நடிப்பு நன்றாக வருகிறது. கல்லூரியில் கலாட்டா பேர்வழியாக வரும் அவர், செய்த தப்புக்கு மன்னிப்பு கேட்டு தண்டனையை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லும்போது நெகிழ வைக்கிறார். நண்பர்களாக வரும் ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், ராகுல் சி . கல்யாண் என அனைவரும் தங்கள் வேடத்துக்கு குறை வைக்காமல் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

நாயகிகள் கெளதமி, செளஜன்யா, ஷிவானி, அபேக்ஷா  என அனைவரும் கவர்ச்சியில் நீயா? நானா? போட்டியே நடத்துகிறார்கள். சமூக சேவகராக வரும் ரவி மரியா சிறிது நேரமே வந்தாலும் மன நிறைவு தருகிறார்.நாயகனும் அவருடைய நண்பர்களும் காட்டை விட்டு வெளியேற நினைக்கும் அனைத்துக் காட்சிகளும் செம த்ரில்லிங்.

முதல் பாதியில் விறுவிறுப்பு குறைந்திருந்தாலும் இரண்டாவது பாதியின் ஸ்பீடு சமன் செய்துவிடுகிறது.சிவநக் இசையில் பாடல்கள் இனிமை. பின்னனி இசையிலும் மிரட்டியிருக்கிறார் காட்டு பங்களா, மலைகள், அதைச் சார்ந்த அனைத்தையும் லாங் ஆங்கிளில் அருமையாக படம் பிடித்துள்ளார்கள் ஒளிப்பதிவாளர்கள் பவுலியஸ், மற்றும் ஷிரவன் குமார்.

பாசிடிவ் எனர்ஜியையும் காஸ்மிக் எனர்ஜியையும் சேர்த்தால் பெரிய அற்புதம் நிகழும் என்பதை ரசிக்கும்படியாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கிராந்தி பிரசாத். மொத்தத்தில் கொஞ்சம் சந்தோஷம்... கொஞ்சம் கலவரம்...