ஜருகண்டிஜருகண்டி.. ஜருகண்டி.. ஜெய் வர்றார்!

லோன் வாங்கிவிட்டு வங்கி அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுக்கும் ஏமாற்றுக்காரர்களிடமிருந்து  கார்களை பறிமுதல் செய்யும் வேலை செய்பவர் ஜெய். அவருக்கு ஒரு டிராவல்ஸ் வைக்க வேண்டும் என்பது லட்சியம். ஒரு கட்டத்தில் பொய்யான வீட்டுப் பத்திரங்களைக் கொடுத்து லோன் வாங்கிவிடுகிறார்.

இந்த விஷயத்தை தெரிந்து கொள்ளும் போலீஸ் அதிகாரி போஸ் வெங்கட், ஜெய்யை மிரட்டி பணம் சம்பாதிக்க நினைக்கிறார். அதன்படி 2 நாட்களில் 10 லட்சம் கேட்கிறார். பணத்துக்காக நாயகி ரெபா மோனிகாவை கடத்துகிறார். ஆனால் அதுவே அவருக்கு பெரும் சிக்கலாக மாறுகிறது. அதன் பின்னர் என்ன நடந்தது? என்பது மீதிக்கதை.

சும்மா சொல்லக்கூடாது... ஜெய்க்கு நடிப்பு வசப்படுகிறது. நடனம், ஆக்‌ஷனிலும் அசத்துகிறார். ஆனால், ஒரே முக பாவனை, வசன உச்சரிப்பைத் தவிர்க்கலாம். கொஞ்சம் முயற்சித்தால் இரண்டாம் நிலை நடிகர் பட்டியலில் இருக்கும் ஜெய் முதல் நிலை பட்டியலுக்கு வர முடியும். செய்வாரா?

நாயகி  ரெபா மோனிகா அழகாக இருக்கிறார். நடிப்புக்கான ஸ்கோப் பெரிதாக இல்லை. ஃப்ளாஷ் பேக் காட்சியில் மட்டும் தன் நடிப்புத் திறமையை கொஞ்சம் வெளிப்படுத்தியுள்ளார்.

ஜெய்யின் நண்பராக வரும் டேனியல் காமெடி செய்ய முயற்சித்துள்ளார். ரோபோ சங்கர் இருந்தும் காமெடி மிஸ்ஸிங். அமித்குமாருக்கு வழக்கமான வில்லன் வேடம். வாங்கிய காசுக்கு பங்கம் வராமல் ஹீரோவிடம் அடி வாங்குகிறார்.இளவரசு, போஸ் வெங்கட், ஜி.எம்.குமார், ஜெயக்குமார் ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.தயாரிப்பாளர் நிதின் சத்யா ஓரிரு காட்சிகளில் வந்து இருப்பை காண்பிக்கிறரர்.

‘போபோ’ சசியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் கவனிக்க வைக்கிறார்.ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் தன் பணியை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். எடிட்டர் பிரவீன் கே.எல். கதைக்கான வேகத்தை வழங்கியுள்ளார்.இயக்குநர் பிச்சுமணி தன் குரு நாதர் வெங்கட் பிரபு பாணியில் ஒரு கருவை வைத்து அதை விறுவிறுப்பாகக் கொடுக்கும் முயற்சியில் முட்டி மோதி பாஸ் மார்க் வாங்குகிறார்.