வன்முறைப்பகுதிஹீரோயினை கொலை செய்தாரா ஹீரோ?

நாயகன், நாயகி என்று முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வெளிவந்துள்ள படம் ‘வன்முறைப் பகுதி’. தேனி மாவட்ட மக்களின் வாழ்வியலைச் சொல்லும் இந்தப் படம் கோபத்தின் விளைவு எப்படி இருக்கும் என்ற அழுத்தமான மெசேஜ் சொல்கிறது.கிட்டத்தட்ட ‘சண்டக்கோழி-2’ மாதிரியான கதை.
நண்பர்களுடன் சேர்ந்து குடியும் கும்மாளமுமாக இருக்கும் நாயகன் மணிகண்டன் முன்கோபக்காரர். இவருடைய கோபத்தால்  இரண்டு ஊர்களுக்கு பொதுவாக இருக்கும் கோவில் திருவிழா சில ஆண்டுகள் நடைபெறாமல் தடைப்படுகிறது.

ஊர் மக்களின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளான தன் மகனுக்கு கால்கட்டு போட்டால் சரியாகிவிடும் என்று நினைக்கிறார் நாயகனின் அம்மா.  உள்ளூரில் பெண் தர எல்லோரும் மறுக்க, வெளியூரில் வசிக்கும் நாயகி ரபியா ஜாபரை பேசி முடிக்கிறார். இந்த நிலையில் மணிகண்டனின் சுய ரூபத்தைத் தெரிந்துகொள்ளும் பெண் வீட்டார் பெண் தர மறுக்கிறார்கள். அதை ஏற்றுக் கொள்ளாத நாயகன் எப்படியும் நாயகியை மணந்தே தீருவேன் என்று சவால் விடுகிறார்.

அப்போது மர்மமான முறையில் நாயகி கொலை செய்யப்படுகிறார். கொலைப்பழி மணிகண்டன் மீது விழுகிறது. நாயகி கொலைக்கான காரணம் என்ன, உண்மையான கொலையாளி யார், கொலைப்பழியிலிருந்து நாயகனால் வெளியே வர முடிந்ததா என்பது மீதிக் கதை.

நாயகன் மணிகண்டன், முன்கோபம், முரட்டு பாசம் கலந்த இளைஞராக கேரக்டருக்கு சரியாகப் பொருந்துகிறார். படத்தின் மொத்த சுமையும் அவர் தோள் மீது இருப்பதால் மிகையில்லாத நடிப்பால் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்.  நாயகி ரபியா ஜாபர் எளிமையான அழகு. கிராமத்துப் பெண்ணாக வரும் அவருடைய வேடம் கவனிக்க வைக்கிறது.

ஹீரோவின் அம்மாவாக நடித்திருக்கும் திண்டுக்கல் தனம் பொளந்து கட்டியிருக்கிறார். ‘பருத்திவீரன்’ சுஜாதா போல் இனி வரும் மதுரை சார்ந்த கதைகளில் இவரை எதிர்பார்க்கலாம். நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் உசிலை பாண்டியம்மாள், நாயகியின் அண்ணன்களாக நடித்திருக்கும் மனோகரா, ராஜா, வில்லன்களாக  நடித்திருக்கும் ஜெய்மாரி, முஜுபென், துருவன், நாயகனின் நண்பர்களாக நடித்திருப்பவர்கள் என அனைவரும் சிறப்பு.

ஒளிப்பதிவாளர் டி.மகேஷ் காட்சிகளில் பிரம்மாண்டத்தை காட்டவில்லை என்றாலும்,  கதாபாத்திரங்களின் உணர்வை அருமையாக பதிவு செய்திருக்கிறார்.நீண்ட உரையாடல்கள் படத்துக்கு பலவீனம்.

தலைப்பில் இருக்கும் வன்முறை படத்தில் இல்லாதது ஆறுதல். கோபத்தால் வரும் விளைவுகளை காதல், காமெடி, சென்டிமென்ட், நம்பிக்கைத் துரோகம் என்று அனைத்து உணர்வுகளையும் கலந்து அழுத்தமாகச் சொல்லியிருக்கும் இயக்குநர் நாகராஜ் கோடம்பாக்கத்துக்கு கிடைத்திருக்கும் நல்வரவு.