மிரட்டப் போவுது இருட்டு!தமிழ் சினிமாவில் மீண்டும் பேய்ப்பட டிரெண்டினை உருவாக்கிய சுந்தர்.சி, அந்த டிரெண்டின் வீரியம் குறைந்துவிடாமல் தொடர்கிறார். இம்முறை இயக்கத்தில் அல்ல. நடிப்பில். வி.இசட் துரை இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘இருட்டு’, பேய்த்தனமான வசூலைக் குவிக்கும் என்று இண்டஸ்ட்ரியில் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை வித்தியாசமான களங்களில் பணியாற்றிய துரை, முதன்முறையாக ஹாரர் களத்தில் இயங்குகிறார். மர்மக் கதைகளுக்கு பெயர் போன எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் வசனம் எழுதுகிறார். மும்பை வரவு சாக்‌ஷி பர்வீந்தர், சுந்தர்.சிக்கு ஜோடியாம். படத்தில் தன்ஷிகாவும் இருக்கிறார். அவர்தான் பேயா என்று கேட்டால் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறது படக்குழு. விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் காமெடி கதகளியாட்டம் நடத்துகிறார்கள்.

“ஹாரர் செய்வதற்கு முதல்ல தயங்கினாலும் இப்போ படம் முடியுற நிலையில யோசிக்கும்போது புது அனுபவமாக இருக்கு. காரணம், படத்தோட கதையில இருந்த தேடல் அப்படி. நிறைய விஷயங்களை ஆராய்ச்சி பண்ணி செஞ்சிருக்கேன். அதெல்லாம் படிச்சிட்டு, அதை திரையில கொண்டு வர்றதுக்காக ஒர்க் பண்ணிட்டு, ஷூட்டிங் முடிஞ்சு ரூமுக்கு வந்தா, எதை பார்த்தாலும் பேய் மாதிரி ஒரு உணர்வு வந்துட்டு இருந்துச்சு.

நைட்ல எனக்கே பயம் வரும். என்னோட டீமுக்கும் அந்த பயம் இருந்துச்சு. இந்த உணர்வை ஸ்கிரீன்லேயும் பக்காவா கொண்டு வந்திருக்கிற நம்பிக்கையை படம் கொடுத்திருக்கு. அதனால ரசிகர்களும் ஹாலிவுட் தரத்திலான ஒரு ஹாரர் படத்தை எதிர்பார்க்கலாம்” என்று நம்பிக்கையோடு சொல்கிறார் இயக்குநர் துரை.

கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். சுதர்ஸன் எடிட்டிங், முத்து ஆர்ட் டைரக்‌ஷன் என்று சவுண்டான டெக்னிக்கல் டீம்.ஊட்டியிலேயே படத்தின் பெரும்பாலான காட்சிகளை படம் பிடித்து விட்டார்கள். இன்னமும் மீதிக் காட்சிகளுக்காக ஹைதராபாத் மற்றும் குஜராத்துக்குக் கிளம்புகிறார்கள்.

- ஜியா