ஜீனியஸ்படித்தால் மட்டும் போதுமா?

கமர்ஷியல் படத்திலும் கருத்துகள் இடம்பெற வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர் இயக்குநர் சுசீந்திரன். அந்த கொள்கைப்படியே ‘ஜீனியஸ்’ எடுத்திருக்கிறார்.காலை எழுந்தவுடன் படிப்பு என்பது மாறி காலை எழுந்தவுடன் அவசர அவசரமாகப் பள்ளிக்குக் கிளம்பிப் போவதுதான் இன்றைய நிலை. மாலை முழுவதும் விளையாட்டு என்பது சுத்தமாக மாறி மாலையிலும் படிப்பு என்றாகிவிட்டது.

அதோடு படிப்பு மட்டுமே நம்மை முன்னேற்றும் என்கிற கருத்தை உள்வாங்கிக்கொண்ட பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தம் குழந்தைகளுக்கு நன்மை செய்வதாய் நினைத்துச் செய்யும் தீமைகளைச் சுட்டிக்காட்டுகிறது படம். நாயகன் ரோஷன், தனக்கு கொடுத்த வேடத்துக்குப் பொருத்தமாக நடிக்க முயற்சி செய்து மனதில் நிற்கிறார். மன அழுத்தம் குறைக்க தியானம் செய்யப் போகுமிடத்தில் அவர் சொல்லும் கருத்து உடனே சிரிக்க வைக்கிறது; பின்பு சிந்திக்கவும் வைக்கிறது.

நாயகி பிரியா லால். அழகான புதுவரவு. மிக அழுத்தமான ஆழமான வேடம் அவருக்கு. அதை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். தாய்மை உணர்வோடு அவர் நாயகனை அணுகும் விதம் சிறப்பு.‘ஆடுகளம்’ நரேன், மீராகிருஷ்ணன் தம்பதி இன்றைய பெற்றோர்களைப் பிரதிபலிக்கிற வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

நாயகி பிரியா லாலிடம் பேசிவிட்டு வேகமாக நடக்கிற நடையில் தன் திறமையை வெளிப்படுத்தி கவர்கிறார் ‘ஆடுகளம்’ நரேன். மீரா கிருஷ்ணன், கணவனைக் குற்றம் சொல்லிப் பேசும் வசனங்கள் அர்த்தமுள்ளவை; ஆழமானவை. அந்த உணர்வை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார் மீரா கிருஷ்ணன்.

தாத்தா கேரக்டரில் வரும் வ.ஐ.ச.ஜெயபாலன் அருமையாக நடித்திருக்கிறார். சிங்கம்புலி தன்னுடைய நகைச்சுவையால் தன் தேர்வை நியாயப்படுத்தியுள்ளார். சிங்கமுத்து, ஈரோடு மகேஷ், பாலாஜி ஆகியோர் ஏமாற்றம் தருகிறார்கள்.

அமுதேஸ்வர் எழுதியுள்ள வசனங்கள் நறுக். கிராமத்தையும் நகரத்தையும் அழகாகக் காண்பித்து அப்ளாஸ் வாங்குகிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ். பள்ளிக்கூடக் காட்சிகள் கவனிக்க வைக்கின்றன. பாடல்களைப் படமாக்கிய விதமும் கண்களுக்கு குளுமை. யுவனின் இசையில், ‘சிலுசிலு காற்று’, ‘நீங்களும் ஊரும்’ உட்பட அனைத்துப் பாடல்களும் நன்று.

தற்போதைய பெற்றோர் செய்யும் தவறுகளைச் சுட்டியிருக்கும் இயக்குநர் சுசீந்திரன், நிறைய செய்திகளைச் சொல்லவேண்டும் என்கிற ஆர்வத்தில் வேகவேகமாகச் சொல்லி இருப்பதைத் தவிர்த்து உணர்வு பூர்வமாக சொல்லியிருக்கலாம். ஒவ்வொரு பெற்றோரும், கண்டிப்பான ஆசிரியர் என்று பெயரெடுத்தவர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.