நடிப்பு பொழைப்பைக் கெடுத்தது!மின்னுவதெல்லாம் பொன்தான் 5

‘சண்டக்கோழி’ மூலமாக ஆக்‌ஷன் ஹீரோவாகியிருந்த விஷாலை கமர்ஷியல் ஹீரோவாக நிலைநிறுத்திய படம் ‘திமிரு’. 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்த திரைப்படம் கோடம்பாக்கம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையே ‘திமிரு’ இயக்குநர் தருண் கோபியை திரும்பிப் பார்க்க வைத்தது.

‘படையப்பா’ நீலாம்பரி பாணியில் ஸ்ரேயா ரெட்டியை அதகள வில்லியாக சித்தரித்திருந்தார் கோபி. அதே ஸ்ரேயா ரெட்டிதான் பின்னாளில் விஷாலின் அண்ணன் விக்ரம் குமாரை மணந்துகொண்டு (‘திமிரு’ படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான், அஜய் என்கிற பெயரில் ‘பூப்பறிக்க வருகிறோம்’ படத்தின் நாயகன்) படத்தின் ஹீரோ விஷாலுக்கு நிஜவாழ்க்கையில் அண்ணியானார் என்பது ருசிகரமான சம்பவம்.

“என்னை மீறி எவ கழுத்துலே நீ தாலி கட்டுறேன்னு பார்க்கலாம்” என்று மதுரை மாநகரின் நடுத்தெருவில் நின்று ஈஸ்வரி கேரக்டர் போட்ட ஆங்காரக் கூச்சலின் எதிரொலி, இன்னமும் தமிழ் சினிமாக்களில் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இன்றும் கூட மதுரக்கதை என்றாலே  ‘திமிரு’ படத்தின் காட்சிகள், ஸ்டோரி டிஸ்கஷன்களில் பேசுபொருளாகத்தான் இயக்குநர்கள் மத்தியில் இருக்கிறது. அவ்வகையில் ‘திமிரு’க்கு கோடம்பாக்கத்தில் ஒரு கல்ட் ஸ்டேட்டஸ் உண்டு.

‘திமிரு’, பக்கா மாஸ் என்டெர்டெயின்மென்ட் படமாக அமைந்து, வசூலிலும் பின்னிப் பெடலெடுத்தது. எல்லா ஏரியாவிலும் கல்லாப்பெட்டி நிரம்பி வழிந்தது. தமிழ் சினிமாவுக்கு நேட்டிவிட்டியோடு கூடிய பக்கா கமர்ஷியல் இயக்குநர் கிடைத்துவிட்டார் என்றே எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள்.

ஆனால் -நினைத்ததெல்லாம் நடந்துவிடுமா என்ன?

உடனடியாக தருண் கோபிக்கு மாதவனை ஹீரோவாக வைத்து எடுக்கும் பிராஜக்ட் அமைந்தது. அது ஏனோ பாதியிலேயே நின்று விட்டது.சிம்பு, வேதிகாவை வைத்து அவர் இயக்கிய ‘காளை’, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்தது. ‘திமிரு’ படத்தைத் தாண்டியும் ‘காளை’ சீறுமென்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் -படம், கடுமையான ஏமாற்றத்தைத் தந்தது. ‘திமிரு’ இயக்கிய தருண் கோபியா இந்தப் படத்தையும் இயக்கினார் என்று ஆச்சரியத்தோடு அனைவரும் வேதனைப்பட்டனர். படம், வணிகரீதியாகவும் மிகப்பெரிய தோல்வியை அடைந்தது.‘காளை’ படப்பிடிப்பின் போதே ஹீரோ சிம்புவோடு இயக்குநர் தருண் கோபிக்கு ஒத்து வரவில்லை என்றெல்லாம் செய்திகள் பின்னர்தான் வெளிவந்தது.

அதே நேரம் ‘வல்லவன்’ படத்துக்குப் பிறகு சிம்பு இயக்குவதாக இருந்த ‘கெட்டவன்’ படத்தில் தருண் கோபி வில்லனாக நடிக்கிறார் என்கிற தகவலும் வெளிவந்தது. ‘கெட்டவன்’, தருணுக்கும் கெட்டவனாகி, பாதியிலேயே நின்றுவிட்டதால் அவர் வில்லனாக உருவெடுக்கும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டது.

இயக்குவதற்கும் வாய்ப்பில்லை, நடிப்புக்கும் வாய்ப்பில்லை என்கிற நிலையில் எல்லோரும் செய்யக்கூடிய தவறையே தருண் கோபியும் செய்தார்.ஆம்.அவரே படம் தயாரிக்க திட்டமிட்டார். ‘காட்டுப்பய’ என்கிற படத்தை அவரே இயக்கி, தயாரித்து, ஹீரோவாகவும் நடிப்பதாக அறிவித்தார். இதில் ரீமாசென்னை ஹீரோயினாக்க முயற்சித்தார்.

ரீமா மறுக்க, வேறு பெரிய ஹீரோயின்கள் அமையாமல் ‘காட்டுப்பய’ படமும் அப்படியே நின்றது.2009ல் ஒரு வழியாக ராசு மதுரவன் இயக்கிய ‘மாயாண்டி குடும்பத்தார்’ மூலம் நடிகரானார். இவரோடு சேர்த்து இந்தப் படத்தில் ஒன்பது இயக்குநர்கள் நடித்தார்கள். எனினும் ஹீரோ என்று சொல்லக்கூடிய லீட் கேரக்டர் தருண் கோபிக்குத்தான். அவரது நடிப்பு விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது.

‘மாயாண்டி குடும்பத்தார்’ வெளிவந்து பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தபோது பத்திரிகையாளர்கள் மத்தியில், அப்படத்தின் போஸ்டர்களை தன்னை போட்டியாக நினைக்கும் ஹீரோக்களின் ரசிகர்கள் கிழிப்பதாக குற்றம் சாட்டினார். தன் இயக்கத்தில் நடித்த விஷால், சிம்பு போன்றோர் தன்னை டைரக்டராக மரியாதையோடு நடத்தவில்லை என்றெல்லாம் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

‘மாயாண்டி குடும்பத்தார்’ பெற்ற வெற்றியின் மூலமாக நடிகனாக, தான் திரையுலகில் முன்னேற முடியும் என்கிற நம்பிக்கையைப் பெற்றார். அடுத்து ‘கன்னியும் காளையும் செம காதல்’, ‘சரவணக் குடில்’, ‘ஜீவா பூங்கா’, ‘என்னை ஏதோ செய்துவிட்டாய்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். எந்தப் படமும் வெளிவரக்கூட இல்லை.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘திமிரு-2’ என்று அறிவித்து ‘வெறி’ என்கிற படத்தை இயக்கி நடித்தார்.

இன்றுவரை அந்தப் படம் வெளிவருவதற்கான எவ்வித அறிகுறிகளும் இல்லை. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டில், தேவையில்லாமல் நடிக்கப் போய் தன்னுடைய டைரக்‌ஷன் திறமையை வீணடித்து விட்டதாக வருந்தினார்.

இனிமேல் இயக்கத்தில் முழுமூச்சாக ஈடுபடுவேன் என்று பேசினார்.அறிமுக இயக்குநராக சூப்பர்ஹிட் படத்தைக் கொடுத்தவரின் அட்ரஸ் கூட இன்று யாருக்கும் தெரியாது.பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தருண் கோபி நிகழ்த்திய மேஜிக்கை மீண்டும் ஒரு முறை நிகழ்த்துவார் என்று எதிர்பார்ப்போம்.

(மின்னும்)

●பைம்பொழில் மீரான்