ஹேப்பி தீபவாளி



கௌரி கிஷான்

‘96’ மூலமாக ஆறிலிருந்து அறுபது வயது வரையிலான வாலிப வயோதிக அன்பர்கள் அத்தனை பேரின் மனசுக்குள்ளும் ஹாட்டின் பறக்க விட்டிருக்கிறார் கெளரி கிஷான். படத்தில் இளம் வயது திரிஷாவாக பள்ளி, கல்லூரி மாணவியாக உள்ளங்களைத் திருடிய கள்ளி இவர்தான்.
“தமிழ்நாட்டு பாய்ஸுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ். எங்கே போனாலும் ‘96’ பத்திதான் எல்லாரும் பேசுறாங்க. இந்த தீபாவளி எனக்கு ஸ்பெஷல் தீபாவளி. பல வருஷங்களா நாங்க பட்டாசு வெடிக்கறதில்லை.

ஃபிரெண்ட்ஸோட ஜாலியா அரட்டை, ரவுண்ட்சுன்னுதான் சமீப தீபாவளிகள் கழியுது. பட்டாசு வெடிக்க வேண்டாம் என்பது எங்க மொத்த அபார்ட்மெண்ட் பிரண்ட்ஸும் சேர்ந்து எடுத்த முடிவு. தீபாவளின்னா பட்டாசைவிட ஸ்வீட்ஸ்தான் எனக்கு ரொம்ப நெருக்கமா மனசுக்கு இருக்கு. அதிலும் ஜிலேபின்னா வாவ்...” என்கிறார் கெளரி.

பிரியா பவானி ஷங்கர்

‘மேயாத மான்’, ‘கடைக்குட்டி சிங்கம்’ என ஹோம்லியாக வெளிப்பட்டிருக்கிறார் பிரியா பவானி சங்கர். “இப்படியொரு மாமாப் பொண்ணு நமக்கு இருந்தா” என்று இளசுகள் ஏங்குகிறார்கள்.“தீபாவளிக்குணு தனியா டிரெஸ் எடுக்குற காலமெல்லாம் மலையேறியாச்சி. அமைதியாதான் கொண்டாடுறோம். புகை, சுற்றுப்புறச் சூழல்னுலாம் காரணம் சொல்ல மாட்டேன். வருஷம் முழுக்க பண்ணாத பொல்யூட்டை அன்னைக்கு ஒரு நாளிலா பண்ணிடப் போறோம்? சின்ன வயசுல ஸ்கூல்ல டிரிப் கூட்டிட்டுப் போவாங்க.

அப்போ சிவகாசி போயிருந்தோம். சின்னக் குழந்தைங்க உடல் வருத்தி பட்டாசு செய்திட்டு இருந்தாங்க. அப்பவே தீபாவளி பத்தின எண்ணம் மாறிடிச்சி. எங்க வீட்டு பப்பி வேற பட்டாசு சத்தத்துலே அலறுவதை பார்க்க பட்டாசுன்னாலே காண்டாயிடிச்சி. நைட்டு மொட்டை மாடியில் உட்கார்ந்து மத்தவங்க விடுற வாணவேடிக்கையை ரசிப்பதோடு சரி. நம்மோட ஸ்பெஷல் புதுப்படம்தான். ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்குறது. இந்த வருஷம் ‘சர்கார்’ படத்துக்காக வெயிட்டிங். சிஸ்டர்! நீங்களும் சன் க்ரூப்தானே? நாலு டிக்கெட் கிடைக்குமா?” என்று நமக்கே டிக்கெட்டுக்கு தூண்டில் போடுகிறார் பிரியா.

காயத்ரி

‘ஜோக்கர்’ படத்தைத் தொடர்ந்து ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ என்று கிராமத்துக் கிளியாக உருக்கமான நடிப்பால் தமிழ் தாய்மார்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியவர் காயத்ரி.“எனக்கு மாப்பிள்ளை ரெடி. சீக்கிரமே டும் டும் டும் கொட்டப் போறேன். அனேகமா அடுத்த தீபாவளி தலை தீபாவளியா இருக்கும். மாப்பிள்ளை வேறு யாருமில்லை. கன்னடப்பட ஒளிப்பதிவாளர் ஜீவன் ராஜன்தான். சின்ன வயசுலேயே பட்டாசு வெடிக்கிற பழக்கத்தை விட்டாச்சி. தம்பியையும் வெடிக்க விடறதில்லை.

தீபாவளிக்கு குடும்பமா கோயிலுக்கு போவோம். சேலை கட்டுறது போர் அடிச்சிடிச்சி. இந்த வருஷம் பட்டுப்பாவாடைன்னு பிளான் பண்ணியிருக்கேன். அவரு எனக்கு என்ன கிஃப்ட் தரப்போறாருன்னு தெரியலை. அவருக்கு நான் என்ன திருப்பிக் கொடுக்குறதுன்னும் குழப்பமா இருக்கு. உங்களுக்கு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க...” என்கிறார் காயத்ரி.

வர்ஷா பொல்லம்மா

நஸ்ரியா கல்யாணம் கட்டிக் கொண்டு போய் செட்டில் ஆனதில் இருந்து வர்ஷாவுக்குதான் லக்கு. நஸ்ரியாவின் டயலாக்குகளை டப்ஸ் மேஷ் செய்து டாப் கீர் அடித்தவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அப்படியே சினிமாவுக்கு வந்து ‘சதுரன்’, ‘யானும் தீயவன்’, ‘இவன் யாரென்று தெரிகிறதா’, ‘வெற்றிவேல்’, ‘96’ என்று பரபரப்பாகி விட்டார்.

“நாங்க பெரிய குடும்பம். தீபாவளிக்கு வீடே கலகலன்னு இருக்கும். அம்மாவோட மைசூர்பாதான் எங்க தீபாவளி ஸ்பெஷல். பசங்க பட்டாசெல்லாம் வெடிச்சி தெருவையே அலறவைப்பாங்க. ஆனா, எனக்கு வெடின்னா பயம். கிட்டவே போகமாட்டேன். கம்பி மத்தாப்பூ, கலர் தீப்பெட்டிதான் நம்மோட மேக்ஸிமம். எப்பவுமே தீபாவளிக்கு அனார்கலி டிரெஸ் எடுப்பேன். இந்த முறை சில்க் துப்பட்டா. இப்போ அதுதானே டிரெண்ட்?” என்கிறார் வர்ஷா.

பிரியா லால்

‘ஜீனியஸ்’ படத்தில் விவகாரமான வேடத்தில் வியப்பை ஆழ்த்தியிருக்கிறார் பிரியா லால். வளைகுடா நாட்டில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்த மலையாளத்து பேரழகி.“இந்தியாவைவிட இங்கிலாந்துலே தீபாவளி கொண்டாட்டம் சூப்பரா களைகட்டும். இந்த வருஷம் அங்கே இருக்க முடியாது. இந்தியாவுலேதான் என்னோட தீபாவளி.

தமிழில் ‘ஜீனியஸ்’ ரிலீஸ் ஆகியிருப்பதுதான் எனக்கு இந்த தீபாவளி ஸ்பெஷல். தீபாவளின்னாலே பட்டாசுன்னு சொல்லுவாங்க. எனக்கு என்னவோ சப்தம்னாலே பயம். புகையைக் கண்டாலே அலர்ஜி. எனக்கு பாவாடை தாவணி ரொம்பவே பிடிக்கும். எப்பவுமே தீபாவளிக்கு அதுதான் காஸ்ட்யூம். இந்த வருஷமும் கூட. ஸ்வீட்டுன்னா குலோப்ஜாமூன்தான் பிடிக்கும்.”

சுபிக்‌ஷா

‘அன்னக்கொடி’ மூலம் அறிமுகமான அழகி. இடையில் மலையாளக் கரையோரம் ஒதுங்கியவர் மீண்டும் ‘நினைத்தது யாரோ’, ‘கடுகு’, ‘கோலிசோடா-2’வென தமிழுக்கும் இடஒதுக்கீடு கொடுத்து வருகிறார்.“எப்பவுமே தீபாவளியை சொந்த ஊரு பெல்லாரியில் கோலாகலமா கொண்டாடுவோம். இப்போ சினிமாவில் பிஸியாகிட்டதாலே சென்னையிலேதான் கொண்டாடப் போறேன்.

தீபாவளின்னா எனக்கு சேலைதான் ஸ்பெஷல். பாட்டியும், அம்மாவும் சேர்ந்து ‘ஹோலிகே’ன்னு ஒரு ஸ்பெஷல் ஸ்வீட் செய்வாங்க. ‘போளி’ மாதிரி இருக்கும். ஆனா, இதோட டேஸ்ட் செம சூப்பர். ஈவ்னிங் பிரெண்ட்ஸோட ஒரு ஜாலி ரைட் அடிச்சிட்டு நைட்டு பட்டாசெல்லாம் வெடிச்சிட்டு தூங்குறதுக்கு 11 மணி ஆகும். சங்கு சக்கரம், புஸ்வாணம்னு நைட் கிராக்கர்ஸ் வெடிக்கிறது ஜாலி. வெடி வெடிக்கிறதுக்கு மட்டும்தான் பயம். ஆனா, ஒரு சரமாவது வெடிச்சிடுவேன்” என்கிறார் சுபிக்‌ஷா.

தொகுப்பு:ஷாலினி நியூட்டன்