விஜய் சேதுபதிக்கு ஸ்க்ரிப்ட் எழுதி வெச்சிருக்கேன்! வரலட்சுமி சொல்கிறார்



வரலட்சுமியை, நடிகைகளில் நம்பியார் எனலாம்.“ஆம்பள வீசுனாத்தான் வெட்டுமா? பொம்பள வீசுனாலும் அருவா வெட்டும்” என ‘சண்டக்கோழி-2’வில் கொலை வெறியுடன் சிலிர்த்துக் கொண்டு நின்றபோது தமிழகமெங்கும் அரங்கங்கள் அதிர்ந்தன.
அந்த அமளி துமளி அடங்குவதற்குள் அடுத்து சன் பிக்சர்ஸின் ‘சர்கார்’ படத்தில் அதிரடியான வேடம். ‘நீயா-2’ படத்தில் நாகக் கன்னியாக, ‘ராஜபார்வை’யில் பார்வை சவால் கொண்டவராக என்று வரலட்சுமி ஏற்று நடிக்கும் வேடங்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகம்.

நடிப்பில் வித்தியாசம் காட்டுவதோடு இல்லாமல், ‘சேவ் சக்தி’ என்கிற அமைப்பின் மூலம் பெண்ணுரிமைகளுக்காக போராடும் போராளியாகவும் சமூகத்தில் அறியப்படுகிறார்.“பொதுவாக வாரிசு நடிகைகள் ஜெயிப்பது சிரமம் என்பார்கள்..”“வாரிசு என்பதெல்லாம் ஒரு விசிட்டிங் கார்டுதான் பிரதர்.

அதுக்குப் பிறகு நாமதான் நம்மை தக்க வச்சிக்கணும். என்னைப் பொறுத்தவரை சரத்குமார் மகள் என்பதால் எனக்கு யாரும் வாய்ப்புத் தரவில்லை. எனக்காக என் குடும்பம் படம் தயாரிக்கவில்லை. எனது திறமை, எனது நண்பர்கள் இப்படித்தான் என் கேரியர் ஸ்டார்ட் ஆச்சு.”

“ஆனா, உங்களை முழுமையான ஹீரோயின்னு சொல்ல முடியலையே?”

“ஹீரோயின்னா என்னா? ஹீரோவை சுற்றிச் சுற்றி வந்து காதலிப்பதா? இப்பயெல்லாம் ஹீரோ, ஹீரோயின்னு தனியா யாரும் இல்லை. கதைதான் எல்லாம். ‘ராஜபார்வை’, ‘நீயா 2’ படங்களில் என் கேரக்டர்தான் முதன்மை கேரக்டர்.”

“இருந்தாலும் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கவில்லையே?”

“அப்படியா? ‘சர்கார்’ படத்துலே விஜய், ‘சண்டக்கோழி-2’ படத்துலே விஷால்னுலாம் நடிக்கிறேனே? அவங்களுக்கு ஜோடியா நடிச்சா மட்டும்தான் ஏத்துப்பீங்களா? அவங்க படத்துலே எல்லாம் பவர்ஃபுல் ரோல்தானே பண்ணியிருக்கேன். அதுவுமில்லாமே எனக்கு இன்னும் டைம் இருக்கு பிரதர். பார்க்கலாம்.”

“சசிகலா கேரக்டரில் நடிக்க மறுத்து விட்டீர்களாமே?”

“அப்படி யாரும் கேட்கவில்லை. கேட்டாலும் நடிக்கமாட்டேன். ஜெயலலிதா கேரக்டரில் நடிக்கக் கேட்டால் ஓக்கே.”

“சமூகவலைத்தள விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

‘சண்டக்கோழி-2’ படத்தில் ‘காஞ்சனா’ சரத்குமார் மாதிரி நீங்க இருந்ததா எல்லாம் மீம்ஸ் போடுறாங்களே?”

“அதுலே என்ன கோச்சுக்க இருக்கு? அப்பா மாதிரிதானே மகள் இருப்பா? இதுமாதிரி மீம்ஸையெல்லாம் பாராட்டா எடுத்துக்கிறதா, நம்மளை கலாய்க்கிறாங்களான்னே புரிஞ்சுக்க முடியலை. அதைப்பத்தி நாம எதுக்குக் கவலைப்படணும்? நமக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்குதே சாமி.”

“டைரக்ட் பண்ணப் போவதா சொல்றாங்களே?”

“மைக்ரோபயாலஜி படிச்சேன். அப்புறம் டான்ஸ் ஆடினேன். இப்போ நடிக்கிறேன். நாளை என்ன பண்ணப் போறேன்னு எனக்கு எப்படி தெரியும்? இருந்தாலும் டைரக்‌ஷன் ஆசை மனசுலே ஒரு ஓரத்துலே இருக்கத்தான் செய்யுது. நிறைய ஸ்க்ரிப்ட்டும் வெச்சிருக்கேன். அதுலே ஒண்ணு விஜய் சேதுபதிக்குன்னு எழுதினது. பார்ப்போம்.”

“இதென்ன #MeTooன்னு ஏதோ பரபரப்பா பேசுறாங்களே?”

“அது சமீபத்தில் பேசப்படும் ஆன்லைன் இயக்கம். ஆனா, நான் கடந்த சில ஆண்டுகளாகவே பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றங்கள் பற்றி தொடர்ந்து பேசி வருகிறேன். ‘சேவ் சக்தி’ என்ற இயக்கத்தைத் தொடங்கியதன் நோக்கமும் அதுதான். மகளிர் கோர்ட்டுகளை அதிகப்படுத்தி அதன் மூலம் பெண்களுக்கு இழைக்கப்படும் அனைத்து குற்றங்களுக்கும் குறுகிய காலத்துக்குள் விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அமைச்சர்களை சந்தித்துப் பேசினேன்.

இது தொடர்பாக கவன ஈர்ப்புக் கையெழுத்து இயக்கம் நடத்தினேன். அதற்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது. வட மாநிலங்களில் மகளிர் நீதிமன்றங்கள் அதிகப்படுத்தப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் தாலுகா லெவலில் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.”

“#MeToo-வுக்கு எதிரா நிறைய விமர்சனம் வருதே?”

“இப்போது பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலுடன் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் ஆதரவு தரவேண்டுமே தவிர ஏன் இத்தனை வருடம் கழித்து சொல்கிறீர்கள், ஆதாரம் இருக்கிறதா என்று கேள்வி கேட்கக்கூடாது.

அவர்கள் சொல்வதை காது கொடுத்துக் கேட்க வேண்டும். கொச்சைப்படுத்தக் கூடாது. சின்மயிக்கு நான்தான் முதன் முதலில் வெளிப்படையாக ஆதரவுக் குரல் கொடுத்தேன். இப்போது #MeToo மூலம் வரும் பல நிகழ்வுகளைப் படிக்கும்போது வருத்தமும், கோபமும் வருகிறது.”

“சினிமாவில் பாலியல் தொல்லை உண்டா இல்லையா?”

“திரைப்படத்துறையில் என்ன நடக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதை வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். சினிமாவின் பலமான பின்புலத்தில் வந்த எனக்கே நடந்திருக்கிறது. நான் இதுபற்றி முன்பு பேசியபோது பழைய நடிகைகள் இதுமாதிரியெல்லாம் எங்களுக்கு நடந்ததே இல்லை என்றார்கள். அதெல்லாம் சுத்தப் பொய்.

அவர்களுக்கு தயக்கம், தன்னோட இமேஜ் பாதிக்கப்படுமோ என்கிற பயம். அதனால்தான் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் சொன்ன சின்மயிக்கு ஆதரவைத் தெரிவித்தேன். இந்த விஷயத்தில் சித்தார்த், பிரகாஷ்ராஜ், சமந்தா என ஒரு சிலர் மட்டுமே குரல் கொடுக்கிறோம்.

பெரும்பாலானவர்களின் மவுனமே குற்றங்களுக்கு ஆதாரம். பெண்களே, இனிமேலும் பயப்படாதீர்கள். தைரியமாகப் பேசுங்கள். நாளைய தலைமுறை பெண்களாவது பாலியல் தொல்லை இல்லாமல் வாழ்வார்கள். உங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை எனக்கு அனுப்புங்கள். அதனை நான் ஷேர் செய்கிறேன்.”

“பாலியல் குற்றங்களைத் தடுக்க என்ன வழி?”

“பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனையை கடுமையாக்க வேண்டும். இப்போதுள்ள தண்டனைகள் போதாது. அரபு நாடுகளில் உள்ளது போன்ற தண்டனை முறைகள் வரவேண்டும். தப்பு செய்தால் கட் பண்ணிடுவாங்க என்கிற பயம் வரணும். அப்போதுதான் தவறு செய்கிறவர்களுக்கு பயம் வரும். நாம் மாறினால் சமூகமே மாறும்.”

“இவ்வளவு பேசுகிறீர்களே? அரசியலுக்கு வருவீர்களா?”

“எங்கப்பாவே கட்சி வெச்சிருக்காரு. இருந்தும் நான் இதுவரை நேரடியா அரசியலுக்கு வரலை. ஆனால், பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்களுக்கு எதிரா போராட அவசியம் என்றால் அரசியலுக்கு வரவும் தயங்கமாட்டேன்.”

“கடைசி கேள்வி...”
“இருங்க பிரதர். விஷாலோட எப்போ கல்யாணம்னுதானே கேட்கப் போறீங்க. கேட்டீங்கன்னா அடிச்சுப்புடுவேன் பிரதர். ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையின் லட்சியமே திருமணம்தானா? அதுக்கும் மேல நிறைய இருக்கு.

திருமணம் முக்கியம்தான். அதுக்கு நமக்கு ஏற்ற மாதிரி ஒரு நல்ல ஆண்மகன் கிடைக்கணும், கொஞ்ச நாளைக்கு அவனைக் காதலிக்கணும், புரிஞ்சுக்கணும்.... இப்படி நிறைய பிராசஸ் இருக்கு பிரதர்.”

“அப்போன்னா விஷால்?”

“உங்களுக்கும் ‘வண்ணத்திரை’ வாசகர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். வணக்கம்.”

 மீரான்