கன்னடத்தில் நான்தான் நயன்தாரா! ரகசியம் சொல்கிறார் ரெபா‘நயன்தாராவின் தீவிர ரசிகை நான்’ என்கிறார் ரெபா மோனிகா ஜான். மல்லுவுட் மங்கையான இவர் ஜெய் நடித்த ‘ஜருகண்டி’ படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார். ஒரு தாபா ஓட்டலில் ரெபாவைச் சந்தித்தோம்.

“பயோடேட்டா ப்ளீஸ்?”

“பூர்வீகம் கேரளா. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே குடும்பத்துடன் பெங்களூர்ல செட்டிலாகிவிட்டோம். ஸ்கூல் படிக்கும்வரை சினிமாவுல நடிக்கும் ஐடியா இல்லை. நான் படிப்புல சுட்டிப் பெண். டான்ஸ், மியூசிக் பிடிக்கும்.மலையாள சேனலில் கலந்துக்கிட்ட ஒரு ரியாலிட்டி ஷோதான் எனக்கு சினிமா வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது.

முதன் முதலா சினிமா வாய்ப்பு வந்தபோது நடிக்கலாமா? வேணாமா? என்ற குழப்பம் இருந்தது. முதல் படமே நிவின் பாலியுடன் என்பதால் சினிமாவுல என்ட்ரி கொடுப்பதற்கு இதை விட வேறு நல்ல வாய்ப்பு கிடைக்காது என்று ஃப்ரெண்ட்ஸ் சொன்னார்கள். வீட்ல இருந்தும் க்ரீன் சிக்னல் வீழ்ந்ததால் யோசிக்காம சினிமாவுக்கு வந்துட்டேன். மலையாளத்துல நிவின் பாலியுடன் நான் நடிச்ச படம் பெரிய ஹிட்.”

“தமிழுக்கு எப்படி வந்தீங்க?”

“அந்தப் பெருமை நடிகரும் தயாரிப்பாளருமான நிதின் சத்யாவைத்தான் சாரும். ஒரு நாள் கதை கேட்க சென்னைக்கு வரமுடியுமா என்று நிதின் சத்யா ஆபீஸிலிருந்து போன் வந்தது. சென்னைக்கு வந்து ‘ஜருகண்டி’ படத்தின் கதையைக் கேட்டதும் இந்தப் படத்தை மிஸ் பண்ணக்கூடாது என்று தோன்றியது. கதை, டைட்டில், விறுவிறுப்பான திரைக்கதை பிடித்திருந்தது.

எனக்கு ஜெய் நடிப்பு பிடிக்கும். அவர் நடித்த ‘சென்னை-28’, ‘ராஜாராணி’ போன்ற படங்களை பார்த்துள்ளேன். அதுமட்டுமில்ல, ஜெய், ரோபோ சங்கர், கேமராமேன் ஆர்.டி.ராஜசேகர் என்று டீம் ஸ்ட்ராங்காக இருந்ததும் இந்தப் படத்தை கமிட் பண்ண காரணமாக இருந்தது.
படத்துல என்னுடைய கேரக்டருக்கு தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. படம் பார்த்தவர்கள் எல்லா கேரக்டரும் என்னையே சுற்றி இருந்ததை சுட்டிக் காட்டியதை என் கேரக்டருக்கான அங்கீகாரமாகப் பார்க்கிறேன்.

மலையாளத்தில் ஏற்கனவே இரண்டு படங்கள் நடித்திருந்தாலும் தமிழில் நடிக்கும் போது எனக்கு நிறைய சவால் காத்திருந்தது. அதில் முதலாவது மொழிப் பிரச்னை. அடுத்து என்னுடைய கேரக்டர். நிஜத்தில் நான் செம ரகளையான பொண்ணு. ஆனால் படத்துல அழுத்தமான வேடம் என்பதால் எனக்கே த்ரில் அனுபவமாக இருந்தது.”

“ஜெய்?”

“ஸ்வீட் ஹீரோன்னு சொல்லலாம். ரொம்ப பொறுமைசாலி. தமிழ் எனக்கு அந்நிய மொழியாக இருந்தாலும் மலையாளப் படத்தில் நடிக்கும்போது என்ன சுதந்திரத்தை அனுபவிப்பேனோ அதை இங்கு அனுபவித்தேன்.மொழிப் பிரச்னையை சமாளித்ததில் ஜெய்யோட பங்கு இருக்கு. ஷாட் இல்லாதபோது குட்டி குட்டியா ஜோக் சொல்லி டென்ஷனைக் குறைப்பார்.

வெங்கட் பிரபு டீம் ஜாலி டீம் என்று பெயர் எடுத்தது என்று கேள்விப்பட்டுள்ளேன். அதை படப்பிடிப்பு சமயத்தில் நேரடியா பார்க்க முடிந்தது. என்னையும் ‘சென்னை-28’ டீம்ல சேர்த்துக் கொண்டதால் டென்ஷன் இல்லாமல் வேலை பார்க்க முடிந்தது. ரியலி ஐயம் வெரி லக்கி. மலையாளத்தில் நிவின் பாலியுடன் அறிமுகம். தமிழில் ஜெய்.”

“அடுத்து?”

“தமிழில் ‘டாவு’. கயல் சந்திரன் ஜோடியா பண்றேன். பெரிய ஸ்டார்ஸ் நிறைய பேர் இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகிறது.
கன்னடத்தில் ‘நானும் ரவுடிதான்’ ரீ-மேக்ல நயன்தாரா ரோல் பண்றேன். தனுஷின் வொண்டர்பால் பிலிம்ஸ் தயாரிக்கிறது. நயன்தாரா ரோல் பண்ணுவது சந்தோஷமாக இருந்தாலும் மனசுக்குள்ள அப்ப அப்ப திக் திக் ன்னு இருக்குது. ஏன்னா படம் பார்க்கிறவங்க கண்டிப்பா நயன்தாராவுடன் சேர்த்து என்னையும் கம்பேர் பண்ணுவாங்க. எது எப்படியோ, இந்தப் படத்தை எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாக பார்க்கிறேன்.”

“ரோல் மாடல்?”

“வேற யாரு... நம்ம நயன்தாரா மேடம்தான். நான் சினிமாவுக்கு வருவதற்கு அவர்தான் இன்ஸ்பிரேஷன். இரண்டு பேரும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நயன்தாரா மீது பாசம் அதிகம். எனக்கும் சினிமா பின்னணி கிடையாது. அவரும் சினிமா பின்புலம் இல்லாமல்தான் சினிமாவுக்கு வந்தார். உழைப்பு, திறமை, கடவுள் கடாட்சத்தால் முதலிடத்தை அடைந்துள்ளார்.

 நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்த அனைத்துப் படங்களையும் மிஸ் பண்ணாமல் பார்த்துள்ளேன். நடிகை என்பதையும் தாண்டி அவர் மீது எனக்கு தனிப்பட்ட விதத்தில் மரியாதை உண்டு. ஒரே வார்த்தையில் சொல்வதாக இருந்தால் குவாலிட்டியான நடிகை. அப்புறம் கீர்த்தியும் பிடிக்கும்.”

“உங்களுடைய கதைத்தேர்வு எப்படி இருக்கும்?”

“சினிமாவுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது. எனக்கு ஸ்கின் ஷோ பிடிக்காது. முத்தக் காட்சிக்கு நான் செட் ஆகமாட்டேன். மற்றபடி எந்த கேரக்டர் கொடுத்தாலும் பண்ணுவேன். சமீப காலமாக பெண்களை முன்னிறுத்தி ‘அருவி’, ‘அறம்’, ‘யு டர்ன்’ என்று ஏராளமான படங்கள் வெளிவருவது சந்தோஷமாக இருக்கிறது. பெண்களை மையப்படுத்தி கதை பண்ணுவதை ஆரோக்கியமான விஷயமாகப் பார்க்கிறேன்.”

“சமீபத்தில் ரசித்த தமிழ்ப் படம்?”

“நோ டவுட்... தி ஒன் அண்ட் ஒன்லி ‘கோலமாவு கோகிலா’. நயன் படமாச்சே!”
“தமிழில் யாருடன் டூயட் பாட ஆசை?”
“விஜய், விஜய் சேதுபதி, விஜய் தேவரகொண்டா.”
“சினிமா தவிர?”
“எனக்கு மியூசிக் நல்லா தெரியும். வாய்ப்பு கிடைத்தால் பாடுவேன்.”

 சுரேஷ்ராஜா