மைதா மாவு மஞ்சுளா



யோகிபாபு சாலையோரம் சிறு ஓட்டல் வைத்து, அதில் அவரே பரோட்டா மாஸ்டராகவும் இருக்கிறார். ‘மைதா மாவு மஞ்சுளா’ என்கிற நயன்தாரா தரமான மைதாமாவு பாக்கெட்டுகளை தயாரித்து யோகிபாபுக்கு வினியோகிக்கிறார்.பரோட்டா சுட்டுக் கொண்டிருக்கும் யோகிபாபுவிடம் அவரிடம் வேலை செய்யும் பையன் கேட்கிறான்.“அண்ணே, இன்னிக்கு மைதா மாவு மஞ்சுளா வருவாங்களா அண்ணே?”

“என்னடா இப்படிக் கேட்குறே? அண்ணனை பார்க்குறதுக்கே மைதா மாவு வரும்டா.”
“யோவ், உனக்கே ஓவரா தெரியலை. அந்தம்மா மைதா மாவு கணக்கா வெளேர்னு இருக்கு. நீரு எள்ளுப் புண்ணாக்குக் கணக்கா இருக்கீரு. உங்களைப் பார்க்குறதுக்கு வர்றாங்களாக்கும்?”

“டேய், கலாய்க்கறீயாடா.. கலாய்க்கறீயாடா... சரி. கலாய்ச்சுக்கடா.. ஆனா, மஞ்சுளா எதிருலே இந்த மாதிரி எகனைமொகனையா பேசுனேன்னு வெச்சிக்கோ. உன் மூஞ்சியை கல்லுலே தேச்சி பரோட்டா ஆக்கிடுவேன் பார்த்துக்க...”அப்போது ஸ்கூட்டர் சத்தம் கேட்கிறது.“அண்ணே! மைதாமாவு கமிங்.”துண்டால் அவசர அவசரமாக முகத்தைத் துடைத்து, தலையைச் சீவிக்கொண்டு பர்சனாலிட்டி டெவலப்மென்ட் செய்துகொள்கிறார் யோகிபாபு.“என்ன யோகி சார், பரோட்டா வியாபாரம் பரபரப்பா போவுதா?”

“உன்னோட மைதா மாவு புண்ணியத்துலே நல்லா போவுதும்மா. கடையோட பேரையே மைதா மாவு மஞ்சளா பரோட்டா கடைன்னு மாத்திட்டேன். பார்க்கலியா?”“உங்களைப் பார்த்தாலே எனக்கென்னவோ சிரிப்பு சிரிப்பா வருது யோகி. உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.”
நயன்தாரா சொன்னதுமே யோகிபாபு கற்பனையில் மிதக்கிறார். மைதா மாவு பாக்கெட்டுகளை அவர் கையில் வலுக்கட்டாயமாகத் திணித்துவிட்டு நயன்தாரா ஸ்கூட்டரில் பறக்கிறார்.

கற்பனையில் நயனுடன் டூயட் பாடிக்கொண்டிருந்த யோகியை உலுக்குகிறான் கடைப்பையன்.“என்னண்ணே.... அந்த அக்கா உங்களை கோமாளி ரேஞ்சுக்கு சொல்லிட்டுப் போவுது. நீங்க பார்த்தா கனவுலே டூயட் பாடுறீங்க”“என்னை ரொம்பப் பிடிக்கும்னு சொல்லிட்டாடா.....”

“இது அந்தப் புடிக்கும்னு எனக்குத் தோணலை. நீங்க பரோட்டா போடுற வேலையை ஒழுங்கா பாருங்க.”பையனை முறைத்துக் கொண்டே யோகி பரோட்டா தட்ட ஆரம்பிக்கிறார்.ஒருநாள், யோகிபாபுவின் ‘மைதா மாவு மஞ்சுளா பரோட்டா கடை’யின் கஸ்டமர் ஒருவர், பரோட்டாவில் கம்பளிப்பூச்சி விழுந்திருப்பதாக கூச்சல் போடுகிறார். பரோட்டாவை தூக்கி யோகிபாபு முகத்தில் எறிகிறார்.

கல்லு மாதிரியான பரோட்டா பட்டு, யோகியின் கன்னம் பீட்ஸா கணக்காக வீங்குகிறது. மற்ற கஸ்டமர்களும் சூழ்ந்து நின்று யோகியிடம் கம்பளிப்பூச்சி பிரச்னைக்காக நியாயம் கேட்கிறார்கள்.கலாட்டா நடப்பதைப் பார்த்துவிட்டு போலீஸ் ஜீப் கடை வாசலில் வந்து நிற்கிறது. பரோட்டாவில் கம்பளிப்பூச்சி போட்டு விற்ற குற்றத்துக்காக யோகி கைது செய்யப்பட்டு ஜீப்பில் ஏற்றப்படுகிறார்.அந்த  ஜீப், நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு போகாமல் பின்னி மில் கோடவுனுக்கு போய் நிற்கிறது.

இதைக் கண்டு காண்டான யோகி, “யோவ், நீங்க ஒரிஜினல் போலீஸ்தானா, இல்லைன்னா சினிமா போலீஸா?” என்று எகிறுகிறார்.போலீஸ் வேடத்தில் இருந்த ரவுடி தீனா, யோகிபாபுவின் முகத்தில் ஒரு குத்து விட்டு, “உன் போண்டா வாயை மூடிக்கிட்டு இருடா” என்கிறார்.“என் வாயி போண்டான்னா உன் வாயி அண்டாவா?” என்று யோகி கவுண்டர் கொடுக்க, மீண்டும் வாயிலேயே ஒரு குத்து விழுகிறது.

இதற்குள்ளாக இன்னொரு சுமோ கார் வந்து நிற்கிறது. அதற்குள்ளிருந்து நயன்தாராவை இழுத்து வருகிறார்கள் ரவுடிகள். நயனும், யோகியும் அருகருகே உட்காரவைக்கப்பட்டு கைகால் கட்டப்படுகிறார்கள். வெள்ளைச் சட்டை, வேட்டியில் ஜெயப்பிரகாஷ் வருகிறார். அவர் மைதா மாவு தயாரித்து கார்ப்பரேட் லெவலில் பிசினஸ் செய்பவர்.

அவர் நயன்தாராவிடம், “மஞ்சுளா, இனிமே நீ மைதா மாவு தயாரிச்சி விக்கக்கூடாது. உன்னாலே எனக்கு பல கோடி நஷ்டம்” என்கிறார்.
யோகிபாபு குறுக்கிட்டு, “யோவ், என்னை பரோட்டா விக்காதேன்னு சொல்லு. கண்டுக்காம போயிடறேன். மஞ்சுளாவை மைதா மாவு விக்கக் கூடாதுன்னு சொல்றதுக்கு நீ யாருய்யா?” என்று குரல் விடுகிறார்.

தீனா மீண்டும் யோகிபாபுவின் வாய் மேலேயே ஒரு போடு போடுகிறார்.“மஞ்சுளா கண்ணு. நீ எங்கிட்டே வேலை பாரு. என்னோட வேனிலே 2,000 பாக்கெட் மைதா மாவு இருக்கு. அதை முழுக்க நீதான் வித்துக் கொடுக்கணும்” என்கிறார் ஜெயப்பிரகாஷ்.“மஞ்சுளா, அந்தாளு பேச்சை கேட்காதே. அந்தாளு கொடுக்கிற மைதா மாவை வெச்சி கோலம்தான் போட முடியும். பரோட்டா போட முடியாது” என்கிறார் யோகி.

உடனே தீனா துப்பாக்கியெடுத்து, யோகிபாபுவின் வாய்க்குள் நுழைக்கிறார்.“ஏய் மஞ்சுளா, முதலாளி சொல்லுறதைக் கேட்கலைன்னா, உன்னையும் இவனையும் சுட்டுப் பொசுக்கிடுவேன்” என்றும் மிரட்டுகிறார்.வேறு வழியில்லாமல் நயன்தாரா சம்மதிக்கிறார்.மைதா பாக்கெட் வேனை யோகிபாபு ஓட்டிச்செல்ல, ஒவ்வொரு கடையாகப் போய் நயன்தாரா சேல்ஸ் செய்வதாக ஏற்பாடு.

யோகிபாபு வேனை ஓட்டிச் செல்லும்போது செக்போஸ்ட்டில் போலீஸ் கும்பலாக தடுத்து நிறுத்துகிறார்கள். போலீஸை இடித்துவிட்டு யோகிபாபு வேகமாக அந்த வேனை ஓட்டிச் செல்கிறார்.“நம்மளையே இடிச்சிட்டு ஓட்டிட்டு போறான்னா ஏதோ முக்கியமான சரக்கு இருக்கு” என்று சொல்லியவாறே போலீஸ் வண்டிகள் வேனைத் துரத்துகின்றன.

பரபரப்பான சேஸிங்.சந்து பொந்தெல்லாம் வேனை லாவகமாகத் திருப்பி, கடைசியாக தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கோடவுனுக்கே வந்து வேனை சடன் பிரேக் போட்டு நிறுத்துகிறார் யோகி. துரத்தி வந்த போலீஸாரும், கூட்டமாக வந்து குழுமுகிறார்கள். எல்லோர் கையிலும் துப்பாக்கி.
வேனில் இருந்து இறங்கி வந்த நயன்தாராவைப் பார்த்ததுமே போலீஸ்காரர்கள் அட்டென்ஷனில் நின்று சல்யூட் அடிக்கிறார்கள்.
“மேடம், நீங்க இந்த வேனிலே எப்படி?” என்று கேட்கிறார்கள்.

கோடவுனுக்குள் இருந்து வெளியே வந்த மைதா மாவு ஃபேக்டரி முதலாளி ஜெயப்பிரகாஷைக் காட்டி, “இவன் மைதா ஃபேக்டரி என்கிற பேருலே போலி மைதா மாவு தயாரிப்பதாவும், கள்ளக் கடத்தல் செய்யுறதாவும் சிபிஐக்கு தகவல் வந்துச்சி. ‘இமைக்கா நொடிகள்’ சிபிஐ ஆபீஸர் அஞ்சலியான நான், ‘கோலமாவு கோகிலா’வா மாறி.. சாரி... ‘மைதாமாவு மஞ்சுளா’வா மாறி இவங்களைப் பிடிக்கிறதுக்கு ஸ்கெட்ச் போட்டேன். அதுக்கு இந்த கோமாளி யோகிபாபுவும் உதவினார். இப்போ எல்லோரையும் கையும் களவுமா பிடிச்சிட்டோம்” என்கிறார் நயன்தாரா.

சொல்லிவிட்டு ஸ்லோமோஷனில் பேக்கிரவுண்டு மியூசிக்கோடு அவர் நடக்க, யோகிபாபு மயக்கமடைந்து விழுகிறார்.சில நாட்கள் கழித்து, யோகிபாபுவின் பரோட்டா கடை. கடையின் பெயர் ‘அஞ்சலி பரோட்டா ஸ்டால்’ என்று மாற்றப்பட்டிருக்கிறது.கடைப்பையனிடம் சோகமாக சொல்லிக் கொண்டிருக்கிறார் யோகிபாபு.

“ஏதோ மைதா மாவு விக்கிற பொண்ணு, ஈஸியா மாட்டிடும்னு நெனைச்சேண்டா. அது சிபிஐ ஆபீஸராம். புருஷன் வேற விஜய் சேதுபதியாம். ஒரு குழந்தை வேற இருக்காம்!”சொல்லிக் கொண்டிருக்கும்போதே தெருவில் ஒயிலாக நாட்டுக்கட்டை வடிவில் ஒரு பெண் கூடையை எடுத்து வருகிறார்.

“மைதா மாவு வேணுமா?” என்று கேட்கிறார்.

“உன் பேரு என்னா?” என்று யோகிபாபு கேட்க அவர், “புல்லுக்கட்டு முத்தம்மா” என்கிறார்.இந்த பரோட்டா பாபுவுக்கு முத்தம்மாதான் பொருத்தம் என்று மனசுக்குள்ளேயே சொல்லிக்கொண்டு, ரொமான்ஸாக ஒரு லுக்கு விடுகிறார் யோகி. முத்தம்மாவின் கூடைக்குள் ஒரு ஏகே47 துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

அயன்புரம் த.சத்தியநாராயணன்