சிம்பு ரொம்ப உதவியா இருந்தாரு!டயானா ஒப்புதல்பேஸ்கட்பால் பிளேயர், 2011 மிஸ் ஃபெமினா என்று ஏகப்பட்ட பெருமைகளுக்கு சொந்தக்காரர் டயானா எரப்பா. மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அதிரடி கவர்ச்சி காட்டி பரபரப்பு ஏற்படுத்தி இருப்பவர்.
“சின்ன வயசுலே இருந்தே சினிமாதான் லட்சியமா?”

“அப்படியெல்லாம் கனவுலே கூட நினைச்சதில்லை. இயல்பாவே நான் கூச்ச சுபாவம் கொண்டவள். இந்த சுபாவம் சினிமாவுக்கு செட் ஆவாதுன்னுதான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். என் குடும்பத்துலே இருக்கிறவங்களுக்கும் சினிமாவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. என்னோட அப்பா கூர்க் மலைப்பகுதியில் சொந்தமா காஃபி எஸ்டேட் வெச்சி நடத்திக்கிட்டு இருக்காரு.

மாமா ஒருத்தர் மிலிட்டரியில் வேலை பார்க்கிறார். அவர் எங்க வீட்டுக்கு வர்றப்போ எல்லாம், ‘நீயெல்லாம் நாட்டுக்கு சேவை செய்யணும்’னு சொல்லிக்கிட்டு இருப்பாரு. அதனாலே சின்ன வயசில் இருந்தே இராணுவத்தில் சேருவதுதான் என்னோட லட்சியமா இருந்தது. நான் இப்போ சினிமா ஹீரோயினா ஆகியிருப்பது எனக்கே கனவு மாதிரிதான் இருக்கு.”

“கூச்ச சுபாவம்னு சொல்றீங்க, அப்புறம் மாடலிங்கில் எப்படி...?”
“அதிர்ஷ்ட தேவதை ஒரு முறைதான் கதவைத் தட்டுவாள்னு சொல்லுவாங்க. நான் பெங்களூரில் காலேஜ் படிச்சிக்கிட்டிருந்தப்போ எனக்கு தட்டினாள். என்னோட தோழிகள், என் உயரத்தைப் பார்த்துட்டு ‘உன்னோட ஹைட்டுக்கும், ஃபிகருக்கும் நீ மாடலிங் போனா சும்மா அள்ளும்டி’ன்னு ஏத்தி விட்டுக்கிட்டே இருப்பாங்க. சும்மா கலாய்க்கிறாங்கன்னுதான் நெனைச்சுக்கிட்டு இருந்தேன். அதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டதும் இல்லை.

ஆனா, எனக்குத் தெரியாம என்னோட ஃப்ரெண்ட்ஸே என் போட்டோவை ஏஜென்ஸிக்கெல்லாம் அனுப்பி மாடலிங் துறையில் நுழைய வெச்சாங்க. மாடலிங்கில் ஈடுபட்ட பிறகுதான் அழகுப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினேன். 2011ல் மிஸ் ஃபெமினா போட்டியில் சிறந்த போட்டோஜெனிக்கா செலக்ட் ஆனேன்.

அதுக்கப்புறம் மாடலிங்கையே முழுநேரத் தொழிலா எடுத்துக்கிட்டு மும்பைக்கு குடிபெயர்ந்தேன். அங்கே போனதுக்கு அப்புறம் ஏறுமுகம்தான். ஏராளமான அழகிப் போட்டிகள், கிங்ஃபிஷர் காலண்டர் கேர்ள், இன்டர்நேஷனல் மேகஸின்களின் கவர் போட்டோன்னு ரொம்ப ஃபேமஸ் ஆயிட்டேன்.”

“மாடலிங் செய்யுறவங்க பெரும்பாலும் சினிமாவுக்கு ஷிப்ட் ஆக ட்ரை பண்ணிக்கிட்டே இருப்பாங்க. நீங்க ரொம்ப லேட்டா சினிமாவுக்கு வந்தீங்களோ?”

“உண்மையை சொல்லப் போனா, ஏற்கனவே சொன்ன மாதிரி எனக்கு சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்ததில்லை. நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாக சில டிவி நிகழ்ச்சிகளுக்கான ஆடிஷனில் கலந்துகொண்டேன். ஏனோ என் மனம் நடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லை. ஏன்னா, மாடலிங் துறை எனக்கு முழு மன திருப்தியை அளித்தது.”

“அப்புறம், ‘செக்கச் சிவந்த வானம்’ வாய்ப்பு எப்படி கிடைத்தது?”

“அது ஒரு இன்ப அதிர்ச்சி என்றுதான் சொல்லவேண்டும். ஒரு நாள் மும்பையில் ஷாப்பிங் பண்ணிக் கொண்டிருந்தபோது மணிரத்னம் சாரின் உதவியாளர் என்று சொல்லி ரிச்சர்ட் என்றவர் போன் பண்ணினார்.

என்னுடைய சமீபத்திய புகைப்படங்களை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டார். நான் வழக்கம்போல யாரோ கலாய்க்கிறாங்க என்றுதான் நினைத்தேன். பிறகு ரிச்சர்டின் ஃபேஸ்புக் பக்கத்துக்கு சென்று அவரைப் பற்றிய பின்னணியைத் தேட ஆரம்பித்தபோது உண்மையிலேயே அது மெட்ராஸ் டாக்கீஸின் அழைப்பு என்று புரிந்து கொண்டேன்.

என்னுடைய புகைப்படங்களை அனுப்பி வைத்தேன். பிறகு ஒரு நாள் மணிரத்னம் சார் நடத்திய ஆடிஷனில் கலந்துகொண்டேன். மணி சாரை பார்த்ததும் நெர்வஸாக இருந்தேன். மணி சார்தான் நிலைமையை சகஜமாக்கி எப்படி நடிக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.

முதல் நாளே அந்த டீமில் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்று தோன்றியதால் ஒரு கேள்வியும் கேட்காமல் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தேன்.”
“நடிப்பை யாரிடம் கற்றுக் கொண்டீர்கள்?”

“கலாராணி அம்மா நடத்திய ஒர்க் ஷாப் எனக்கு உதவியது. அங்கு எமோஷனல் காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும், கண் அசைவு எப்படி இருக்க வேண்டும், குரல் பயிற்சி உட்பட பலவித பயிற்சிகளை சொல்லிக் கொடுத்தார்.

பிறகு மும்பையிலும் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் நடிப்பைப் பற்றி கொஞ்சம் கற்றுக் கொண்டேன். நான் மாடலிங் துறையில் இருந்ததால் படத்துல வரும் வெளிநாட்டிலிருந்து திரும்பும் இந்திய பெண் வேடத்தில் இயல்பாக பண்ண முடிந்தது. சக நடிகரான சிம்பு தமிழ் சினிமாவைப் பற்றி புரிந்துகொள்ள உதவியாக இருந்தார்.”
“தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் ஐடியா உள்ளதா?”

“மாடலிங், சினிமா இரண்டும் எனக்கு இரு கண்கள் மாதிரி. கண்டிப்பாக சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். சினிமா என்பது அற்புதமான உலகம். நிஜத்தில் நாம் ஒரே ஒரு வாழ்க்கையைத்தான் வாழமுடியும்.

ஆனால் சினிமா அப்படியல்ல, நாம் நினைத்தால் மீண்டும் ஸ்கூல் வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை என்று வெவ்வேறு வாழ்க்கையை வாழமுடியும். பாலிவுட், கோலிவுட் என்று பிரித்துப் பார்க்கமாட்டேன். எந்த மொழியில் வாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க தயராக இருக்கிறேன்.”

 சுரேஷ்ராஜா