‘சிம்டாங்காரன்’ பாட்டு, தியேட்டர்களில் அள்ளு அள்ளுன்னு அள்ளும்!இந்த தீபாவளிக்கு ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்பார்ப்பும் சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் ‘சர்கார்’ படத்தின் மீதுதான் குவிந்திருக்கிறது. ‘துப்பாக்கி’, ‘கத்தி’ அதிரடி வெற்றிகளைத் தொடர்ந்து விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் பம்பர் ஹிட் அடிக்கத் தயாராகி இருக்கிறார்கள். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் இசை, ரசிகர்களுக்கு தீபாவளி போனஸ்.

இந்த பிரும்மாண்ட படைப்பில் ஆர்ட் டைரக்டராக பணியாற்றி இருப்பவர் டி.சந்தானம். படத்தின் அவுட்லுக்கை ஆர்ட்டிஸ்ட்டாக காட்டுவதில் கில்லாடி என்று பெயரெடுத்தவர். ‘தமிழ்ப்படம்’, ‘யாரடி நீ மோகினி’, ‘தூங்கா நகரம்’, ‘புதுப்பேட்டை’, ‘டிமாண்டி காலனி’, ‘தெய்வத்திருமகள்’, ‘இறுதிச்சுற்று’, ‘நெடுஞ்சாலை’ உள்ளிட்ட டைட்டில்களை சொன்னாலே போதும், சந்தானத்தின் பெருமையை நாம் உணரலாம்.

‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘காவியத் தலைவன்’ ஆகிய படங்களுக்கு சிறந்த ஆர்ட் டைரக்டருக்கான தமிழக அரசு விருது பெற்றவர். இப்படியான வெயிட் பேக்ரவுண்டுக்கு சொந்தக்காரரான டி.சந்தானம் ‘சர்கார்’ உட்பட தன் திரையுலக அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

“சன் பிக்சர்ஸின் ‘சர்கார்’ வாய்ப்பு எப்படி அமைஞ்சது?”

“ஏ.ஆர்.முருகதாஸ் சாருடன் ‘ஏழாம் அறிவு’ படத்திலேயே நான் இணைந்து பணியாற்றியிருக்க வேண்டும். அப்போது ஏற்கனவே ஒப்புக்கொண்ட வேறு சில கமிட்மெண்டுகளில் சிக்கியிருந்தேன். தயக்கத்தோடு என்னுடைய மறுப்பை சொன்னபோது முருகதாஸ் சார், ‘அதனால என்ன, நாம வேற ஒரு படத்துலே சேர்ந்து வேலை பார்க்கத் தான் போறோம்’ என்று பெருந்தன்மையாக சொன்னார்.

அவர் சொன்ன அந்த வாய்ப்பு சன் பிக்சர்ஸ் தயாரிப்பு, விஜய் ஹீரோ, ஏ.ஆர்.ரகுமான் இசையென்று இந்த பிரும்மாண்டமான பிராஜக்டில் நிறைவேறும் என்று கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கவில்லை. படம் பாருங்க. என்னோட வேலை எங்கேயுமே துருத்திக்கிட்டு தெரியாது. படத்தோட கதையோடவே ரொம்ப அழகா டிராவல் பண்ணும்.”

“விஜய் நடிக்கிற படங்களில் பாடல் காட்சி களின் பின்னணி அமைப்பு பற்றி ரொம்ப கவனமா இருப்பாருன்னு சொல்லுவாங்க. ‘சர்கார்’ படத்தில் அவரை அசத்தியது எந்தப் பாட்டுக்கு?”

“அவரை மாதிரி பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றிருக்கும் மாஸ் ஹீரோவை வெச்சி லைவ் லொக்கேஷனில் ஷூட் பண்ண முடியாது. செட் போட்டுத்தான் எடுக்கணும். கோர்ட் சீன், வீடு லொக்கேஷன் எதுவா இருந்தாலும் பெருசா செட்டு போட்டே ஆவணும். இந்தப் படம் முழுக்க ஏகப்பட்ட வித்தியாசமான அரங்குகளை அமைச்சிருக்கோம்.

பொதுவாவே விஜய் சார் படம்னா பாட்டும், பேக்கிரவுண்டும் ரொம்ப தனித்துவமா இருக்கும். இந்தப் படத்துலே ‘சிம்டாங் காரன்’ பாட்டு சும்மா அள்ளும். அதுக்குன்னு அந்த ஒரு பாட்டு மட்டுமில்லை. அத்தனை பாட்டுமே ரசிகர்களைக் கவரும்.

என்னபண்ணியிருக்கேன்னு இப்பவே சொன்னா, பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ படம் பார்க்கிற ரசிகனுக்கு பெப்பு குறைஞ்சுடும். பட்டாசு வெடிச்சாதான் தீபாவளி. வெடிக்கிற வரைக்கும் வெயிட் பண்ணுங்களேன். படம் ரிலீஸ் ஆனப்புறம் இன்னும் நிறைய பேசுறேன்.”

“விஜய்யோடு முதன்முதலாக இணைகிறீர்கள். என்ன சொல்லுறார் உங்க ஹீரோ?”
“சார், நான் ஆர்ட் டைரக்டராதான் முதன்முதலா அவரோடு இப்போ இணையுறேன். ஏற்கனவே அவர் நடிச்ச ‘நினைத்தேன் வந்தாய்’, ‘உதயா’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ போன்ற படங்களில் உதவி ஆர்ட் டைரக்டரா வேலை பார்த்திருக்கேன்.

அப்போ எப்படி பழகினாரோ அப்படியேதான் இன்னும் பழகுறாரு. இடைப்பட்ட ஆண்டுகளில் அவரோட இமேஜ்தான் மக்கள் மத்தியில் எகிறி இருக்கே தவிர, அவர் அதே சிம்பிள் & ஹானஸ்ட் விஜய்தான். அப்போ மாதிரியே ஜாலியாவும், மரியாதையாகவும் நடந்துக்கிறாரு. எனக்கே ரொம்ப ஆச்சரியம்தான்.

இந்தப் படத்தோட போட்டோ செஷன் சமயத்தில்தான் விஜய் சாரை முதன் முதலாக சந்தித்தேன். போட்டோ ஷூட்டுக்காக நான் பரபரப்பாக வேலை செய்துகொண்டிருந்தேன். அப்போது என் தோள் மீது ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தா அது விஜய் சாரின் கை. ‘எப்படி இருக்கீங்க’ன்னு சிரித்தபடியே நலம் விசாரித்தார்.

அவருடைய  அந்தத் தோழமையில் சிறதளவும் என்னால் இடைவெளியைப் பார்க்க முடியவில்லை.விஜய் சார் பற்றி சொல்வதாக இருந்தால், அமைதியா இருப்பார். புத்திக்கூர்மை அதிகம். தேவையில்லாத விஷயங்களைப் பேசி நேரத்தை வீணாக்கமாட்டார். திறமைசாலிகளை இனம் கண்டு என்கரேஜ் பண்ணுவார்.

‘சர்கார்’ படத்துக்காக நான் அமைத்த ‘செட்’டை பார்த்ததும் விஷ் பண்ணினார். ‘நல்லா பண்ணியிருக்கிங்க’ என்று மனம் திறந்து பாராட்டினார். விஜய் சார் நான் ஒர்க் பண்ணும் படத்தின் ஹீரோ மட்டுமில்ல. நான் அவருடைய ரசிகனும்கூட. கரும்பு தின்னக் கூலியா என்பது மாதிரிதான் எனக்கு ‘சர்கார்’ வாய்ப்பு”“கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி?”

“கீர்த்தியோட ‘நடிகையர் திலகம்’ படம் பார்த்த பிறகு அவருடைய ரசிகனா மாறிட்டேன். அழகும் திறமையும் ஒருங்கே அமைவது திரையுலகில் அபூர்வம். ‘சர்கார்’ படத்துல அவருடைய கீர்த்தி பெரிதாக பேசப்படும்.

வரலட்சுமி ரொம்ப ஜாலியான டைப். செட்டு கலகலப்பாக இருக்கிறது என்றால் அங்கு வரலட்சுமி இருக்கிறார் என்று புரிந்துகொள்ளலாம். பெரிய ஸ்டாரோட பொண்ணு, சமூகத்தில் போராளியா அவர் எடுத்திருக்கிற பெயர் என்கிற பந்தாவெல்லாம் இல்லாமல் ரொம்ப ஜோவியலா இருப்பாங்க.”

“முருகதாஸ் கடுமையா வேலை வாங்கி இருப்பாரே?”

“கடுமையா வேலை செஞ்சோம்னா அது நல்ல விஷயம்தானே? பொதுவாக முருகதாஸ் சார் அமைதியானவர். தன் மைண்ட்லே என்ன இருக்கோ, அதை கொஞ்சமாதான் வெளிப்படுத்துவார்.

அவரோட எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யணும் என்கிற சவால், கத்தி மாதிரி நம்ம தலைக்கு மேலே தொங்கிக்கிட்டே இருக்கும். அவர் கூட வேலை செய்யணும்னா அசாத்திய திறமை இருக்கணும். படத்தின் மையக்கருத்தை ஆரம்பத்திலேயே சொல்லிடுவார். அதுலே அவரோட சேர்ந்து நாமளும் டிராவல் பண்ணிக்கிட்டே இருக்கணும். ரெஸ்ட்டே எடுக்க மாட்டார். அப்படி ரெஸ்ட் கிடைச்சாலும் ஏதாவது படிச்சிக்கிட்டே இருப்பார்.

இந்தப் படத்தை கமிட் பண்ணும்போது கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் என்னுடைய பயத்தை நீக்கி ‘உங்களுக்கு தோணும் விஷயங்களை பண்ணுங்க. எந்த இடத்திலும், எனக்காகவும்கூட சமரசம் செய்து கொள்ளாதீங்க’ என்று ஃபுல் ஃப்ரீடம் கொடுத்தார். ஒருவரிடம் இருக்கும் திறமையை அடையாளம் கண்டுகொண்டு அதை அப்படியே வெளியே  கொண்டுவரக்கூடிய இயக்குநர்களில் முருகதாஸ் முக்கியமானவர்.”
“ஆர்ட் டைரக்‌ஷனுக்கு என்று இலக்கணம் இருக்கா?”

“இலக்கணம் இல்லாத துறைன்னு ஒண்ணு இருக்கா என்ன? நல்ல இயக்குநருக்கு வாசிப்பு முக்கியம். எழுத்தாளருக்கு ஆய்வும் தேடலும் முக்கியமானவை. எடுக்குறது சினிமாவா இருந்தாலும் கேமராமேனுக்கு சமூகத்தின் நிஜமான களம் தெரியணும். அதுபோல ஆர்ட் டைரக்டருக்கு டிராயிங் சென்ஸ் இருக்கணும்.

டைரக்டர், கேமிராமேன் இருவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் நெளிவு, சுளிவு கொண்டவரா இருக்கணும். இயக்குநர் தான் எடுக்கிற கதைக்கான பிரும்மாண்டம் பற்றி ஒரு கனவு வைத்திருப்பார். கேமிராமேன் அந்த கனவை அழகாக்க மெனக்கெடுவார். அவங்களோட கனவை ஷூட்டிங் எடுக்க வசதியாக ஆர்ட் டைரக்டர்தான் நிஜமாக்கிக் காட்டணும். ஒரு ஆர்ட் டைரக்டர் நினைத்தால் அமெரிக்காவைக்கூட சென்னையில் செட்போட்டு உருவாக்கலாம்.”

“எல்லாப் படத்துக்கும் ஆர்ட் டைரக்டர் தேவைதானா? லைவ் லொக்கேஷனிலேயே முழுப்படத்தையும் ஷூட் செய்ய முடியாதா?”

“அப்படி நிறைய பேருக்கு சினிமாவிலேயே கூட எண்ணமிருக்கு. சின்ன படமோ, பெரிய படமோ.. ஆர்ட் டைரக்டரால் பட்ஜெட்டில் பெருசா சேமிச்சிக் கொடுக்க முடியும்.

இயக்குநர், கேமிராமேன் மாதிரியே ஆர்ட் டைரக்டரும் ஷூட்டிங்கைப் பொறுத்தவரை முக்கியமான தவிர்க்க முடியாத ஒரு டெக்னீஷியன்தான். டைரக்டர் ஸ்க்ரிப்ட்டில் நினைச்ச விஷயத்தை ஆர்ட் டைரக்டர்தான் உருவாக்கிக் கொடுக்க முடியும். ஆர்ட் டைரக்டருக்கு ரெஸ்பான்ஸிபிளிட்டி அதிகம்.

இந்திய சினிமா இப்போது ஹாலிவுட் படங்களுக்கு இணையான தரத்தை எட்டியிருக்குன்னு சொல்லுறாங்க. அதில் ஆர்ட் டைரக்டர்களோட பங்களிப்பும் கணிசமா இருக்கு. ‘பாகுபலி’ மாதிரியான ஒரு படத்தை நல்ல ஆர்ட் டைரக்டர் அமையாம நீங்க நினைச்சிக் கூட பார்க்க முடியாது.”

“நீங்க முதலில் வேலை பார்த்த படம்?”

“கே.பாக்யராஜ் சார் டைரக்‌ஷனில் கேப்டன் விஜயகாந்த் நடிச்ச ‘சொக்கத் தங்கம்’. அந்தப் படத்தில் கேப்டன், மரச்செக்கு வைத்திருக்கும் வியாபாரி. அதற்காக பராம்பரியமிக்க மரச்செக்கை பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரிந்து பார்த்து, அதுமாதிரியே பக்காவா ரெடி பண்ணினேன். அப்போ அந்த செக்கு பண்ணினதுக்கு பாராட்டாதான் இப்போ ‘சர்கார்’ படத்துக்கு பெரிய ‘செக்’ சம்பளமா வாங்குற அளவுக்கு உயர்த்தியிருக்கு.”
“உங்களை ரொம்ப வேலை வாங்கின படங்கள்?”

“எல்லாப் படமுமேதான் வேலை வாங்குது. இருந்தாலும் ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘காவியத்தலைவன்’ போன்ற படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் சோழர்களின் வரலாற்றை மையமாகக் கொண்ட படம். சோழர்களின் இறைவழிபாடு, உணவுப் பழக்கம், போர்த் தந்திரங்கள் எப்படி இருக்கும் என்பதை சோழர்களின் ஆட்சிக் காலம் நடைபெற்ற இடங்களுக்கு பிரயாணம் செய்து நீண்ட ஆய்வை நடத்தினேன்.

‘காவியத்தலைவன்’  நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையைச் சொன்ன படம். சுதந்திரத்துக்கு முன் நடக்கும் கதை என்பதால் அந்தப் படத்துக்கும் நெடியகளப்பணிகளை செய்தேன். அப்படி சேலம், மதுரையில் உள்ள பழம்பெரும் நாடகக் கலைஞர்களை நேரில் சந்தித்து பண்டைய நாடகத்துறையில் கலைஞர்களின் நடை, உடை எப்படி இருக்கும் என்று தகவல் சேர்த்து அந்த இடத்திலேயே அதை ஸ்கெட்ச் போட்டு உறுதி பண்ணிய பிறகே செட் வேலைகளை ஆரம்பித்தேன்.

அதேபோல் ‘புதுப்பேட்டை’ படமும் எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம். அது கேங்ஸ்டர் பற்றிய படம்.  பெரும்பாலான காட்சிகளை நைட் எபெக்ட்டில் எடுத்தார்கள். ‘டிமாண்டி காலனி’ நான் வேலை செய்த முதல் ஹாரர் படம். அந்தப் படத்தில் ஆங்கிலேயர்களுக்கு முன் இந்தியாவில் வாணிபம் செய்த போர்ச்சுகீசியர்களின் பின்னணியை வைத்து ஆர்ட் டைரக்‌ஷன் பண்ணியிருந்தேன். அந்தப் படத்துக்கு மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.”

“உங்களுக்கு பிடிச்ச ஆர்ட் டைரக்டர்?”

“என்னுடைய குருநாதர் எம்.பிரபாகர் அவர்கள்தான். சாருடன் நான் பணிபுரிந்த காலத்தை பொற்காலமாக பார்க்கிறேன். ஐந்து வருடத்தில் பதினான்கு படங்களில் அவருடன் பணிபுரிந்தேன். ‘விஐபி’, ‘டும் டும் டும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ உட்பட ஏராளமான வெற்றிப் படங்களில் அவரிடம் வேலை பார்த்திருக்கேன். ஓர் உதவியாளராக இல்லாமல் சகோதரனாக நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுத்தார். அன்று என் குருநாதர் போட்டுக் கொடுத்த பாதைதான் என் வெற்றிக்குக் காரணம்.”

“உங்களைப் பற்றி சொல்லவேயில்லையே?”

“பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். ஸ்கூல் படிக்கும்போது ஓவியத்துலே நாட்டம் அதிகம். பள்ளியில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளின்போது கரும்பலகையை என்னுடைய பல வண்ண சாக்பீஸ்தான் அலங்கரித்திருக்கும். என்னுடைய ஓவியங்களைப் பார்த்துவிட்டு நண்பர்கள், ஆசிரியர்கள் ஓவியத் துறையில் நுழைவதற்கு ஊக்கம் கொடுத்தார்கள். அப்பாவும் ஓவியக் கல்லூரியில் சேர்த்து என் ஆசையை நிறைவேற்றினார். கல்லூரி வாழ்க்கை முடிந்தவுடன் உடனடியாக சினிமாவுக்கு வந்துவிட்டேன்.”