ஆண் தேவதை ரம்யா பாண்டியன்டைட்டில்ஸ் டாக் 87

தேவதை என்பது நல்ல குணங்களைக் கொண்ட மனிதர்களுக்கான பொது அடையாளம். அந்த வகையில் தேவதை என்கிற பதம் ஆண்களுக்கும் பொருந்தும். பாலினத்தை வைத்து தேவதையைப் பிரித்துப் பார்க்கமுடியாது.
எல்லாருக்கும் அவர்களுடைய அப்பா, அம்மாதான் முதல் தேவதைகள். அப்பா இப்போது உயிரோடு இல்லைன்னாலும் தேவதையாக இருந்து என்னை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார். எனக்கு ஓர் அக்கா, ஒரு தம்பி. ஆனால் வீட்டுக்கு நான்தான் செல்லப் பிள்ளை. அப்பா என்னை ஒரு பையன் மாதிரிதான் வளர்த்தார்.

வாழ்க்கைக்கு இன்றியமையாத வேலைகள், பழக்க வழக்கங்கள் என்று எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்ததோடு இல்லாமல் அதில் பயிற்சியையும் கொடுத்தார். நான்காம் வகுப்பு படிக்கும்போதே என்னுடைய உடைகளை நானே துவைக்க ஆரம்பித்துவிட்டேன். அதுக்குக் காரணம் அப்பாவின் ட்ரைனிங்.
சின்ன வயதிலிருந்தே அப்பா எனக்கு தைரியத்தை மட்டும் ஊட்டி வளர்க்காமல் எல்லா விஷயங்களிலும் யாரையும் சார்ந்து வாழாமல் சொந்தக் காலில் நிற்பதற்கான பயிற்சியையும்  கொடுத்தார். தானாக வளரும் மரம் ஸ்ட்ராங்காக இருக்கும் என்று அப்பா அடிக்கடி சொல்வார். அப்படித்தான் என்னை சுயமாக பல வேலைகளைச் செய்ய ஊக்கம் கொடுப்பார்.

இது ஆம்பள செய்ற வேலை, இது பெண் செய்ற வேலை என்று பிரித்துப் பார்க்காமல் எல்லாருக்கும் எல்லா வேலையும் தெரிந்திருக்கணும் என்று சொல்லி சொல்லித்தான் எங்களை  வளர்த்தார். அந்த வகையில் சமைப்பது, துவைப்பது என்று வீட்டு வேலைகள் அனைத்தும் எனக்கு அத்துப்படி.
அப்பா எனக்கு அதிக அழுத்தம் கொடுத்து சொல்லியது, யாரையும் நம்பி வாழாதே என்கிற அறிவுரைதான். யார் மீதும் நம்பிக்கை வைக்காதே என்ற பொருளில் சொல்லவில்லை. ஆழம் தெரியாமல் காலை விடாதே என்பதுதான் அதன் சாரம்.  

கல்லூரிக்குப் போகும் வயதில்தான் அப்பா சொல்லிய அறிவுரைக்கான உண்மையான அர்த்தம் எனக்கு புரிய ஆரம்பித்தது. ஏன்னா, ஆம்பள இல்லாத வீட்டை இந்த சமூகம் எப்படி பார்க்கும் என்பதை அப்போதுதான் முதன் முதலாகப் பார்த்தேன்.

அச்சமயத்தில் அப்பா கொடுத்த வழிகாட்டுதல்தான் எனக்குள் பெரிய தன்னம்பிக்கையைக் கொடுத்தது. எளிதாக இந்த உலகத்தை என்னால் எதிர் கொள்ள முடிந்தது. இரண்டாவது ஆண்டு படிக்கும்போது பார்ட் டைம் ஜாப் ஜாயின் பண்ணி என்னுடைய பாக்கெட் மணியை நானே சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டேன். கல்லூரி ஃபைனல் இயரில் கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்டாகி வேலையிலும் சேர்ந்தேன்.

வேலை செய்துகொண்டிருக்கும் போது சினிமா வாய்ப்பு கிடைத்தது. அதையும் ஏன் விட்டு வைக்கவேண்டும் என்று முடிவு பண்ணி சினிமாவில் நடித்தேன். அப்போது வேலை, சினிமா இரண்டிலும் நீடிக்க விரும்பினேன். ஆனால் கம்பெனி நிர்வாகம் நீங்கள் ஏதாவது ஒரு முடிவை எடுக்கவேண்டும் என்று நிர்ப்பந்தம் பண்ணினார்கள். சினிமாவா, வேலையா என்று வரும்போது வேலையை ராஜினாமா செய்துவிட்டு சினிமாவுக்கு வந்துவிட்டேன். இவ்வளவு துணிச்சலுக்கும் காரணம் என்னுடைய ஆண் தேவதையான அப்பா மட்டுமே.

நான் படித்தது முழுக்க முழுக்க இருபாலர் பள்ளி. அப்போதே என்னுடைய தேவதைகள் எங்களுக்கு கொடுத்த சுதந்திரத்தை புரிந்து கொள்ள முடிந்தது. என் பெற்றோர் நினைத்திருந்தால் என்னை பெண்களுக்கான பள்ளியில் சேர்த்திருக்கலாம். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவரவர் சொந்தக் காலில் நிற்க வேண்டும். எப்படிப்பட்ட சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். யார் நல்லவங்க, யார் கெட்டவங்க என்பது வெளி உலகில் பழகாமல் தெரிய வராது. ஒரு படிப்பினை கிடைத்தால்தான் நல்லது, கெட்டது தெரிய ஆரம்பிக்கும்.

அப்பாவைப் போலவே என்னுடைய அம்மாவும் நேர்மறையான சிந்தனையாளர். தோல்வி மனப்பான்மையில் இருக்கும்போது உன்னால் முடியும் என்று மோட்டிவேட் பண்ணுவார். அம்மா என்றுமே தன் கனவுகளை என் மீதோ, அக்கா, தம்பி மீதோ திணித்ததில்லை. நாங்கள் நாங்களாகவே இருக்க விரும்பினார். அக்காவுக்கு  ஃபேஷன் டிசைன் பிடிக்கும்.

அவள் இப்போது ஏராளமான படங்களுக்கு காஸ்டியூம் டிசைனராக இருக்கிறார். தம்பிக்கு சினிமா ஆர்வம் அதிகம். அவன் இப்போது பிலிம் டெக்னாலஜி படிக்கிறான். அப்பா ‘ஊழியன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். விட்ட குறை தொட்ட குறை என்பார்களே அது மாதிரி நாங்க மூணு பேருமே சினிமா துறைக்குள் இருக்கிறோம்.

என் சித்தப்பா அருண் பாண்டியன் இன்னொரு ஆண் தேவதை. அப்பாவின் சொந்த தம்பி. சித்தப்பாவைப் பொறுத்தவரை அவருடைய சொந்த மகள் போல் தான் எங்களிடம் பாசம் காட்டுவார். பொதுவா நீயும் என் பிள்ளை மாதிரி என்று சொல்வார்கள். ஆனால் என் சித்தப்பா சொந்த மகள் போல்தான் எங்களிடம் அன்பு காட்டினார்.

குறிப்பாக பணம் என்று வரும்போது எல்லா உறவுகளும் பேக் அடிக்கும். எங்களுக்கு நெருக்கடி என்று வரும்போது முதலில் எங்கள் நினைவுக்கு வருவது எங்கள் சித்தப்பா. அவருடைய வீட்டுக் கதவு எங்களுக்காக எப்போதும் திறந்தேயிருக்கும்.காலத்தினாற்செய்த நன்றி சிறிது எனினும் ஞாலத்தின் மானப் பெரிது இது வள்ளுவர் வாக்கு. இதன் பொருள் நெருக்கடியான நேரத்தில் செய்த சிறிய உதவி உலகத்தை விட பெரிது. அப்படி சித்தப்பா எங்களுக்கு செய்த உதவி உலகத்தைவிட பெரிது.  சித்தப்பாவிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கும். நேரம் தவறாமை, கொடுத்த வாக்கை காப்பாற்றுவது உட்பட அவருடைய நற்குணங்கள் ஏராளம்.  

என்னுடைய ஆண் தேவதைகள் லிஸ்ட்டில் இயக்குநர் ராஜு முருகனுக்கும் இடம் உண்டு.  நான் நடித்த முதல் படம் ‘டம்மி பட்டாசு’. அந்தப் படம் சரியாகப் போகவில்லை. ஆரம்பத்தில் அந்தப் படத்தில் சிறந்த டெக்னீஷியன்கள் இருந்தார்கள். அதன் காரணமாகவே அந்தப் படத்தில் நடித்தேன். ஒரு கட்டத்தில் ஒவ்வொருவராக ப்ராஜக்ட்டிலிருந்து வெளியே போய்விட்டார்கள். வெளிவருவதற்கு என் மனம் இடம் கொடுக்கவில்லை.

படம் தோல்வி அடைந்தபோது மன அழுத்தத்தில் இருந்தேன். ஏன்னா, அதற்கு முன் ஆரம்பித்த என் முதல் படமும் டேக் ஆஃப் ஆகாமலேயே நின்று போனது. அச்சமயத்தில் எனக்கு கிடைத்த வாய்ப்புதான் ‘ஜோக்கர்’. என் திறமை மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்தார். இப்போது ‘ஜோக்கர்’ ரம்யா பாண்டியன் என்ற ப்ராண்ட் என் மீது இருக்க காரணமே ராஜு முருகன்தான். அந்த வகையில் அவரும் ஆண் தேவதைதான்.

அடுத்த ஆண் தேவதை சமுத்திரக்கனி. படப்பிடிப்பில் கிடைக்கும் கொஞ்ச நேரத்தையும் வீணாக்கமாட்டார். டயலாக் எழுதுவார். ஷூட்டிங் முடிந்து ரிக்கார்டிங் என்று பிஸியாக இருப்பார். தேனீ போல் எப்போதும் தன்னை பிஸியாக வைத்திருப்பார். இது எல்லாரும் அவரிடைம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்.

தொழில் சார்ந்து மட்டுமில்ல, சமூகம் மீதும் அக்கறை உள்ளவர். எல்லாத்தையும் நேர்த்தியா கையாள்வார். ஆண் தேவதை இயக்குநர் தாமிராவும் அன்புக்குரிய ஆண் தேவதைதான். முற்போக்குச் சிந்தனையாளர்.இந்த சமூகம் பெண்களை தேவதையாகப் பார்க்கிறது. ஆண்களையும் தேவதையாகப் பார்க்க வேண்டும்.

தொகுப்பு : சுரேஷ்ராஜா

(தொடரும்)