ராட்சசன்போலீஸ் ஆகும் சினிமாக்காரர்!

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதுதான் நாயகன் விஷ்ணுவிஷாலின் ஆசை. அதிலும் சைக்கோ த்ரில்லர் எடுக்க வேண்டுமென ஆண்டுக்கணக்கில் ஆய்வு செய்து வருகிறார். இயக்குநர் வாய்ப்பு தட்டிப் போய்க்கொண்டே இருக்கிறது. வருமானமே இல்லாத குடும்பச்சூழல். போலீஸ்காரரான அப்பாவும் காலமாகிவிட்டார்.
கட்டாயத்தின் பேரில் மாமா முனீஸ்காந்தின் ஆலோசனைப்படி எஸ்.ஐ. தேர்வு எழுதி, போலீஸாகிறார்.அடுத்தடுத்து சென்னை மாநகரில் பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். கொலைகாரன் ஒரு சைக்கோ என்பதை தடயங்கள் வாயிலாக நிரூபிக்கிறார் விஷ்ணு.

ஆனால் -கொலையாளி யார் என்பதற்கு எவ்விதமான துப்பும் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் விஷ்ணுவின் அக்கா மகளும் அதே சைக்கோ கொலையாளியால் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். இதன் பிறகு தொழில்ரீதியாக மட்டுமில்லாமல், சொந்த பழிவாங்கும் உணர்வுக்காகவும் முன்பைவிட தீவிரமாக கொலையாளியைத் தேடுகிறார் விஷ்ணு. அலுவல்ரீதியாக அவருக்கு ஏற்படும் அபத்தமான முட்டுக்கட்டைகளையும் தாண்டி கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார்.

இதுதான் ‘ராட்சசன்’.எஸ்.ஐ. கதாபாத்திரத்துக்கு ஜம்மென்று பொருந்துகிறார் விஷ்ணுவிஷால். ஒட்ட வெட்டப்பட்ட தலைமுடி, வொர்க்கவுட் செய்த உடம்பு என்று பக்காவாக ரெடி ஆகியிருக்கிறார். மிகையில்லாத துல்லியமான நடிப்பு. தனக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்துக்கு பன்மடங்கு வேலை பார்த்திருக்கிறார் விஷ்ணு.

அமலாபால்தான் ஹீரோயின் என்பதை வாய்ஸ் ஓவரில் சொன்னால்தான் தெரியும் போலிருக்கிறது. தமிழ்ப் படங்களுக்கு பாடல்கள் அவசியம்தானா என்பதைவிட ஹீரோயின் அவசியம்தானா என்று பரிசீலிக்க வேண்டிய நிலையில் இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஹீரோயின் என்பதாலேயே வலுக்கட்டாயமாக அவரை கதைக்குள் திணிக்க சில காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.

சைக்கோ த்ரில்லர் படங்களில் எப்போதுமே ஹீரோவுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரமும் பவர்ஃபுல்லாக அமைந்தால்தான் வெற்றியை எட்ட முடியும். படத்தில் ‘ராட்சசன்’-னைக் கண்ணில் காட்டாமலேயே அவனுடைய பவரை எஸ்டாப்ளிஷ் செய்ததில் பெரும் வெற்றியை எட்டியிருக்கிறார் இயக்குநர்.

அதிலும் வில்லனின் அந்த பியானோ இசைத்துணுக்கு முதுகெலும்பை சில்லிடச் செய்கிறது. ஜிப்ரானின் பின்னணி இசையே வில்லனின் பெரும் பலம். பி.வி.சங்கரின் ஒளிப்பதிவும் ராட்சசத்தனமான உழைப்பு.தமிழ் சினிமாவில் நெடுங்காலத்துக்கு நினைவுகூரப்படும் திகில் படமாக வந்திருக்கிறது ‘ராட்சசன்’.