அத்தியாவசியம் என்பதால் ஆடை குறைத்தேன்!அமலாபால் சொல்கிறார்‘ராட்சசன்’ படத்தில் இளம் டீச்சராக ரசிகர்களைக் கவர்ந்திழுத்திருக்கிறார் அமலாபால். திருமணமான ஹீரோயின்களுக்கு ரசிகர்களிடம் மவுசு இருக்காது என்கிற நம்பிக்கையை உடைத்தெறிந்திருப்பவர்களில் இவரும் ஒருவர்.“நீங்க நடிக்க வந்து பத்தாவது வருஷம் இது. உங்களுக்குப் பின்னாடி வந்தவங்களெல்லாம் பட எண்ணிக்கையில் உங்களைத் தாண்டி ஓடிட்டாங்களே?”

“எத்தனை படத்துல நடிக்கிறோம்னு ெசால்ற எண்ணிக்கையா பெருசு? என்ன மாதிரி படம் பண்றோம்னு பார்க்கணும். அதுதான் பெருசு. ரொம்ப தூரம் போனபிறகு திரும்பிப் பார்க்கிறப்ப, நாம வந்த பாதை சரியானதுதான், கரெக்ட்டாதான் பயணம் பண்ணியிருக்கோம்னு ஒரு திருப்தி வரணும். அது போதும்னு நினைக்கிறேன். ரொம்ப செலக்ட்டிவா பண்றேன்.”

“ஆரம்பத்துலே ‘ராட்சசன்’ படத்துல நடிக்கமாட்டேன்னு சொல்லிட்டீங்களாமே?”

“ஆமாம். நீங்க கேள்விப்பட்டது உண்மைதான். அப்படித்தான் சொன்னேன். டைரக்டர் ராம்குமாரோட ‘முண்டாசுப்பட்டி’ படம் பார்த்தேன். அவர் கதை சொல்ல வர்றேன்னு சொன்னதுமே ஓக்கே சொன்னேன். ஆனா, அவருக்கு சரியாவே கதை சொல்லத் தெரியல. என் முகத்தை நேரா பார்க்கவே தயங்கினார். அப்படியே எங்கேயோ பார்த்துட்டு கதை சொன்னார்.

ஸோ, அந்த நேரத்துல அவர் சொன்ன கதை உண்மையிலேயே எனக்குப் புரியல. அதனால், ‘இதுல நான் நடிக்கமுடியாது; போயிட்டு வாங்க’ன்னு சொல்லி அனுப்பிட்டேன். அதுக்குப் பிறகு ஹீரோ விஷ்ணு விஷால் போன் பண்ணி, ‘ராம்குமார் கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவர். நீங்க பெரிய நடிகை. அந்த தயக்கம் வேற அவருக்கு இருந்திருக்கும்’னு சொல்லி,  அவரே முழுக் கதையையும் சொன்னார். அற்புதமாக இருந்ததால் நடிக்க சம்மதிச்சேன். முதல் சந்திப்புல ராம்குமாரை நான் தப்பா நினைச்சதுக்குப் பிறகு ஷூட்டிங் ஸ்பாட்ல அவர் கிட்ட நான் மன்னிப்பு கேட்டேன். அப்பவும் கூச்சப்பட்டு சிரிச்சுக்கிட்டே போனார்.”

“ஆடியன்ஸ் கிட்ட உங்களுக்கு ஹோம்லி இமேஜ் இருக்கு. ஆனா, ‘ஆடை’ படத்துல குறைந்த ஆடையோட போஸ் கொடுத்து மிரட்டி இருக்கீங்களே...?”
“இந்தக் கேள்வியை தினமும் நாலு பேராவது கேட்கிறாங்க. அமலாபால்னா இப்படித்தான் இருப்பாங்க, இப்படித்தான் நடிப்பாங்கன்னு எதுக்கு ஒரு குறுகிய வட்டம் போடறீங்க. ஒரு நடிகை எல்லா கேரக்டர்லயும் பொருந்தி நடிக்கணும். ‘ஆடை’ படத்தோட கதைக்கு இது ரொம்ப அத்தியாவசியமான காட்சி. ஸோ, நான் அப்படித்தான் இருக்கணும். நான் இல்ல, யார் அந்த கேரக்டர்ல நடிச்சாலும் அப்படித்தான் நடிக்கணும்.

இன்னும் சொல்லணும்னா, அது ஆபாசப் படமோ, ஆடை குறைப்பு படமோ இல்ல. கதை கூட நீங்க பயணிக்கிறப்ப, அதை தனியா பிரிச்சுப் பார்க்கத் தோணாது.”“சரி, சவுத் இந்தியாவுல இருந்து பாலிவுட்டுக்கு எப்ப என்ட்ரி கொடுக்கப் போறீங்க?”
“பாலிவுட்ல ஒரு படம் சைன் பண்ணியிருக்கேன். அதனோட ஷூட்டிங் எப்ப ஆரம்பிக்கிறாங்கன்னு தெரியல. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்குன்னு ஒவ்வொரு மொழியில நடிக்கிற மாதிரி, இந்தின்னு இன்னொரு லாங்குவேஜ் படத்துல நடிக்கிறேன். அதைத் தாண்டி அதுக்கு பெரிய முக்கியத்துவம் எல்லாம் கொடுக்கிறது இல்ல. அமலா பால் பாலிவுட்டுக்குப் போனார், பெரிய நடிகையா மாறிட்டார்னு பில்டப் எதுவும் தேவையில்ல.”
“இப்ப உங்களுக்கு நீங்களே டப்பிங் பேசறீங்களாமே...?”

“பொதுவா என் நடிப்புக்கு இன்னொருத்தர் குரல் கொடுக்கிறதே எனக்குப் பிடிக்காது. ஆனா, என்ன பண்றது? மொழி தெரியலன்னா வேற வழியில்ல. இப்ப நான் நல்லா தமிழ் பேச கத்துக்கிட்டேன். அதுக்குப் பிறகும் டப்பிங் பேசலன்னா எப்படி? நாம கஷ்டப்பட்டு குழந்தை பெத்து அடுத்தவங்க கிட்ட கொடுத்து, அதை நீங்க பார்த்துக்குங்கன்னு சொல்ற மாதிரி இருக்கும். இனிமே நான் நடிக்கிற எல்லா படத்துக்கும் நான்தான் டப்பிங் பேசுவேன். மலையாளத்துல ஆரம்பத்துல இருந்தே நான் பேசறேன். இனி தெலுங்குல பேசவும் முயற்சி பண்ணுவேன்.”

“உங்களுக்குப் பிறகு வந்த கீர்த்தி சுரேஷ், பெரிய நடிகையா மாறிட்டார். நடிகை சாவித்திரி கேரக்டர்ல அவர் நடிச்ச மாதிரி, பயோபிக் படத்துல நடிக்கிற ஆர்வம் இருக்கா?”“நிறைய ஆர்வம் இருக்கு. பயோபிக் படத்துல நடிக்க வாய்ப்பு வந்தா கண்டிப்பா நடிப்பேன். அது யாரோட பயோபிக்கா இருக்கணும்னு டைரக்டர்தான் முடிவு பண்ணணும். என் முகமும், தோற்றமும் யாருக்கு சரியாகப் பொருந்தும்னு அவங்களுக்குத்தான் தெரியும். மற்றபடி ‘நடிகையர் திலகம்’ படத்துலே கீர்த்தி சுரேஷ் ரொம்ப பிரமாதமா பண்ணியிருக்காங்க. ஆனா, அவரை எதுக்கு என்ேனாட கம்பேர் பண்றீங்கன்னுதான் தெரியல.”

“திடீர்னு ரஜினி மாதிரி இமயமலைக்கு தனியா போயிட்டு வர்றீங்களே! என்ன மர்மம்?”
“நாட்டுலே தனியா நடமாடத்தான் பயமா இருக்கு. இமயமலையில தனியா போறதுக்கு பயம் கிடையாது. ஏன்னா, இயற்கை நமக்கு எந்த கெடுதலும் பண்ணாது. அங்கே போனா, மறுபடியும் நான் ஃபிரெஷ்ஷா திரும்பி வர்றேன். மனசு லேசாகும். பரந்து விரிந்த இந்த மாபெரும் உலகத்துல, இந்த மனித வாழ்க்கை எவ்வளவு சின்னது என்ற உண்மை புரியும். அந்த வாழ்க்கையில நாம என்ன பண்ணணும், என்ன பண்ணக்கூடாதுன்னு தெரிஞ்சுக்க முடியும்.”

“உங்களுக்கு பெர்சனலா டார்ச்சர் கொடுத்த ஒருத்தரை, தைரியமா போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் இழுத்துக்கிட்டு போனீங்க. ஸோ, பிற்காலத்துல அரசியலுக்கு வர்ற ஐடியா இருக்கா?”“ஏன் இருக்கக்கூடாது? காலமும், சூழ்நிலையும், தேவையும் சேர்ந்து வந்தா, கண்டிப்பா நானும் அரசியலுக்கு வருவேன்!”“மறுமணம் பண்ணிக்கிற திட்டம் இருக்கா?”

“இந்தக் கேள்வியைத்தான் கடைசியா கேட்பீங்கன்னு தெரியும். இப்ப நான் சினிமாவுல சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. பிற்காலத்துல மறுமணம் பண்ணிக்கிற மாதிரி ஒரு யோசனை வந்தா, கண்டிப்பா அதை வெளிப்படையா சொல்வேன். ரகசியமா எதுவும் பண்ண மாட்டேன்.”

- மீரான்