விரைவில் வருகிறது பசுமைவழிச் சாலை!



டைட்டில் வைப்பதில் நம்ம கோலிவுட்டாரை அடிச்சிக்க ஆளே இல்லை.இப்போதுதான் ‘பசுமை வழிச்சாலை’ அமளியெல்லாம் கொஞ்சம் அடங்கி நம் முதல்வர் எடப்பாடியார் நிம்மதியாக இருக்கிறார். அவரை தூங்கவிடாமல் செய்வதற்காகவோ என்னவோ ‘பசுமை வழிச்சாலை’ என்று டைட்டில் வைத்து படமெடுக்கிறார்கள்.

படத்தின் களமும்கூட சென்னைக்கும் - சேலத்துக்கும் இடையே அமையவிருக்கும் அந்த சர்ச்சைக்குரிய சாலைதானாம்.படத்தில் டபுள் ஹீரோக்கள். கிஷோர், பசுபதி ஆகியோர் நாயகர்களாக நடிக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். சத்துவா புரொடக்ஷன்ஸ் சார்பில் நிருபமா தயாரிக்கிறார். இயக்கம் சந்தோஷ் கோபால்.

சமீபத்தில் இந்தப் படத்தின் சில முக்கியமான காட்சிகளை ஜம்மு காஷ்மீர், லே, லடாக், திபெத், நேபாளம் மற்றும் பூடான் என பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்திவிட்டு  திரும்பியுள்ளது படக்குழு.இமயமலைப் பிரதேசத்தில் மிகவும் தீவிரமான வானிலை நிலவியபோதும்கூட படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். திபெத்தில் உள்ள உலகப்புகழ்பெற்ற தஷி லுன்போ மடத்திலும் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

உலகத்திலேயே மிக உயரத்தில் வாகனங்கள் செல்லும் சாலைகளைக் கொண்ட புகழ்பெற்ற கார்டுங்லா மலைப்பகுதியில் இதுவரை படப்பிடிப்பு நடக்காத இடங்களில் சில காட்சிகளைப் படமாக்கியுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள லே நகரத்தில் இந்திய ராணுவ தளத்திற்கு மிக அருகில் படப்பிடிப்பு நடத்த சிறப்பு அனுமதிகள் பெற்று, வான்வழி காட்சிகளை படமாக்கினார்களாம்.

‘‘இந்தப் படத்தின் பலமே கதாநாயகன்களும் கதைக்களமும்தான். அந்த வகையில் பசுபதி, கிஷோர் இருவருமே யதார்த்தமான நடிப்புக்கு பேர் போனவர்கள். கிஷோர் எப்போதும் தீவிர உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். அவருடைய கட்டுமஸ்தான உடல்வாகு கதைக்குத் தேவையாக இருந்தது.

நான்கு டிகிரி குளிர் நிலவிய, மிகவும் சிரமமான பகுதிகளில் கூட படப்பிடிப்பு முழுவதும் தனது மோட்டார் பைக்கை உற்சாகத்துடன் மிகத் திறமையாக ஓட்டி ஆச்சர்யப்படுத்தினார். படம் பார்க்கும்போது ரசிகர்களுக்கு இன்னும் சில ஆச்சர்யங்கள் காத்திருக்கிறது’’ என்கிறார் இயக்குநர் சந்தோஷ் கோபால்.

- எஸ்