96மலரும் நினைவுகள்!

உணர்ச்சிகளைத் தூண்டாமல், உணர்வுகளைக் கிளறும் காதல் காவியமாக உருவாகியிருக்கிறது ‘96’ படம்.பள்ளிப்படிப்பின்போது காதலித்த மாணவியை, இன்னொருவரின் மனைவியாக, இருபத்திரண்டு வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே நடக்கும் உரையாடல்களும், வார்த்தைகளை வெளிப்படுத்தாத உடல்மொழி உணர்வுகளும் உன்னதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நாடு சுற்றும் புகைப்படக் கலைஞரான விஜய் சேதுபதியின் இயற்கை மற்றும் உயிரினங்களின் மீதான காதலை, அவற்றைப் படம்பிடிக்கும் கலையார்வத்தை மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். ஊர் ஊராகச் சுற்றும் விஜய் சேதுபதி,  ஒரு கட்டத்தில் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு வருகிறார்.

தான் படித்த பள்ளியைச் சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறார். காவல் தெய்வம் என்று மாணவர்களால் அழைக்கப்பட்ட வாட்ச்மேன் ஜனகராஜின் அன்பு வரவேற்பில், பள்ளியைச் சுற்றிப் பார்க்கிறார். உடனே தனது நெருங்கிய நண்பர்களை செல்போனில் தொடர்பு கொண்டு, பழைய மாணவர்கள் எல்லாம் சென்னையில் சந்திக்கவேண்டும் என திட்டம் சொல்கிறார். குறிப்பிட்ட நாளில் அனைவரும் சென்னையில் கூடுகிறார்கள்.

வருவாரா, மாட்டாரா என்று கருதப்பட்ட த்ரிஷாவும் வந்து சேர்கிறார். மலரும் நினைவுகள் பரிமாறப்படுகின்றன.  த்ரிஷாவைக் கண்டதும் பம்மிப் பதுங்குகிறார் விஜய்சேதுபதி. இருவரையும் பேச வைக்க நண்பர்கள்  முயற்சி செய்கிறார்கள். தயங்கி, ஒடுங்கிப்போகும் விஜய்சேதுபதியை விடாப்பிடியாக விரட்டுகிறார் த்ரிஷா. தான் தங்கியிருக்கும் ஓட்டல்  அழைத்துச் செல்கிறார்.

அங்கே உரையாடல்களும் உணர்வுகளும் சிதறுகின்றன. அந்த நள்ளிரவில் தனது வீட்டுக்கு த்ரிஷாவை அழைத்துச் செல்கிறார் விஜய்சேதுபதி. அங்கேயே தூங்குகிறார், குளிக்கிறார் த்ரிஷா. அதிகாலையில் அவரை விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்கிறார் விஜய் சேதுபதி. இருவரும் விடைபெறுகிறார்கள்; காதல் மட்டும் விடை தெரியாமல் தவிக்கிறது.

பருத்த உடல்வாகு, அடர்ந்த தாடி மீசையுடன் வளம் வருகிறார் விஜய் சேதுபதி. முக்கால்வாசி முகத்தை மூடியிருக்கும் தாடி மீசையை மீறி, அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள் வியக்க வைக்கின்றன. நாட் டேக் எ போட்டோ, டேக் த மெமரி என்று அவர் புகைப்படம் எடுக்க கற்றுகொள்ளும் தனது சிஷ்யர்களுக்குக் கூறும் அறிவுரை அவரது கதாபாத்திரத்தின்  மேன்மையை வெளிச்சம் போட்டுப் படம் பிடிக்கிறது.

நண்பர்கள் சந்திப்புக்கு த்ரிஷா வரமாட்டார் என்று நண்பர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டு, மனம் நெகிழ வைக்கிறது. அழுது  ஆர்ப்பாட்டம் செய்யாமல், உணர்வுகளாலேயே காதலின் இயலாமையை வெளிக்காட்டும் நடிப்பு  மிக அருமையாக இருக்கிறது.

த்ரிஷாவுக்கு இந்தப் படத்தின் கதாபாத்திரம் மிக முக்கியமான பதிவாக இருக்கும். ராமுக்கு இன்னும் கல்யாணம்  ஆகல என்று நண்பர்கள் சொன்னதைக்கேட்டதும் அவர் முகத்தில் தெரியும் கவலைக்கோடுகள் சிறப்பான உணர்வுகள். சூழ்நிலை தங்களது காதலைப் பிரித்துவிட்டது என்பதை உணர்ந்து அழும் காட்சியில் பழைய காதலர்களையெல்லாம் அழவைக்கிறார்.

தேவதர்ஷனி, பக்ஸ், ஆடுகளம் முருகதாஸ், ஜனகராஜ், கவிதாலயா கிருஷ்ணன், மாணவப் பருவத்து விஜய் சேதுபதியாக வரும் ஆதித்யா  பாஸ்கர், த்ரிஷாவாக வரும் கவுரி கிஷன், தேவதர்ஷினியாக வரும் தேவதர் ஷினியின் சொந்த மகள் நியாத்தி கடம்பி என அத்தனை கதாபாத்திரங்களும் வாழ்ந்திருக்கின்றனர்.

உமாதேவியின் உருக்கமான பாடல் வரிகள் நெஞ்சை உலுக்குகின்றன . கோவிந்த் வசந்தாவின் வாத்தியக் கருவிகள் காதல்  உள்ளங்களைக் கலங்க வைக்கின்றன.சண்முகசுந்தரம் ஒளிப்பதிவும் அனைத்துக் காட்சிகளும் கவிதையாய் தொடங்கி கதையாக விரிகின்றன.

காதலின் வலியை  நேர்மையாகப் பதிவு செய்து, ஒரு காதல் படத்தை பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன்  பார்க்கும் வகையில்  படமாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் சி.பிரேம்குமார்.