வசப்படுத்த வருகிறது வானரப்படை!“முதல்லே எங்க படத்தோட டீசரைப் பாருங்க. அதுக்கு அப்புறம் பேசுவோம்” என்றவாறே லேப்டாப்பில் ‘வானரப்படை’ படத்தின் டீசரை ஓடவிட்டார் இயக்குநர் எம்.ஜெயப்பிரகாஷ். ஓடி முடித்ததுமே, “எப்படி இருக்கு?” என்று கேட்டார்.“மணிரத்னத்தோட ‘அஞ்சலி’ படத்தின் லேட்டஸ்ட் வெர்ஷன் மாதிரி ஹைடெக்கா இருக்கு சார்” என்றோம்.

“இது சாம்பிள்தான். முழுப்படமும் பார்த்தா செமத்தியான எனர்ஜி வரும்” என்றவாறே பேச ஆரம்பித்தார்.

“குழந்தைகள் படமா?”

“அப்படிச் சொல்லிட முடியாது. பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமிடையே ஏற்படும் தலைமுறை இடைவெளி தொடர்பான பிரச்னைகளைப் பேசும் படம் இது. பெரும்பாலான பெற்றோர் பசங்களுடைய படிப்பு, உடை போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினால் போதும் என்று நினைக்கிறார்கள். பிள்ளைகளின் மனநிலையை இவர்கள் புரிந்து கொள்வது இல்லை.

பக்கத்து வீட்டு குடும்பங்களை பார்த்துத்தான் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். சினிமாவும் நல்லவைகளை சொல்வதிலிருந்து தடம் மாறிவிட்டது. கடந்த கால சினிமாக்களில் அப்பாவைப் பார்த்து பிள்ளைகள் பயப்படுகிற மாதிரி சீன் இருந்தது. இப்போது அப்பாவும் மகனும் சேர்ந்து சரக்கு சாப்பிடற மாதிரி சீன் வருகிறது.

பெற்றோர் பிள்ளைகளிடம் அன்பாக இருப்பதைப் புரிய வைக்க வேண்டும். பெற்றோர் பிள்ளைகளுக்கு என்று நேரம் ஒதுக்கி அவர்களிடம் மனம் திறந்து பேசுவதில்லை. அதுபோன்ற காரணங்களாலேயே பிள்ளைகள் அப்பா, அம்மாவிடம் அன்பு காட்டுவதில்லை. திக்கு தெரியாமல் இருக்கும் பிள்ளைகள் வரம்பு மீறுகிறார்கள். சிலர் வன்முறையில் இறங்குவதையும் பார்க்கமுடிகிறது.

இதன் விளைவுகள்தான் படம். இந்தப் படம் பெற்றோர்களைப் பார்த்து கேள்வி கேட்பதோடு பசங்களின் ஆழ் மனதை வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்கும். என்னுடைய இயக்குநர் மூளையைக் கழட்டி வைத்துவிட்டு குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி எடுத்துள்ளேன்.”
“நடிகர்கள்?”

“அவந்திகா என்ற பொண்ணு லீட் பண்ணியிருக்காங்க. அமெரிக்காவில் செட்டிலான அக்கட தேசத்துப் பொண்ணு. ஒரு எண்ணெய் விளம்பரப் படத்தைப் பார்த்து இவங்களை செலக்ட் பண்ணினோம். தாய் மொழி தெலுங்காக இருந்தாலும் ஆங்கிலத்தில் ஸ்கிப்ரிட்டை வாங்கி அதை தெலுங்கில் மொழி மாற்றம் செய்து புரிந்து நடித்தார். கற்பூரப்புத்தி என்று சொல்லலாம்.

இரண்டாவது பாதியில் கோர்ட் சீன்ல எமோஷனலா பேசும்போதே கீழே விழுவது மாதிரி ஒரு காட்சி. அந்தக் காட்சியில் எப்படி விழவேண்டும் என்ற டெக்னிக்கை முதல் நாளே சொல்லிக் கொடுத்திருந்தேன். படப்பிடிப்பு அன்று உண்மையிலேயே கீழே விழுகிற மாதிரி ரியாலிட்டியைக் கொண்டு வந்ததும் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தவங்க அவந்திகாவைத் தூக்குவதற்கு ஓடி வந்தார்கள். கிட்ட வந்த பார்த்தபோது அவந்திகாவுக்கு அடிபடவில்லை என்று தெரிந்த பிறகுதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். அவருடைய கேரக்டரை வைத்து இப்போதுள்ள பசங்களின் வளர்ச்சி எப்படியிருக்கிறது என்பதைக் காண்பித்துள்ளோம்.

அப்பாவாக கண்ணதாசன் பேரன் முத்தையா கண்ணதாசன் பண்றார். இவர்களோடு சுவாமிநாதன், நமோ நாராயணன், அஜய்ரத்னம், மோகன். நிகில் கெளசிக், ஜீவா, அனிரூத், கனிகா ஆகியோரும் இருக்கிறார்கள்.”

“டெக்னீஷியன்ஸ்?”

“என்னுடைய நண்பர் கமலக்கண்ணன் மியூசிக் பண்ணியிருக்கிறார். காஞ்சிபுரத்துக்காரர். ஆறு வயசுல இருந்து கீ போர்டு வாசிப்பதால் இசை ஞானம் ஜாஸ்தி. நிறைய ஆல்பம் பண்ணியிருக்கிறார். சினிமாவா இதுதான் முதல் படம். பொதுவா படங்களில் ஹீரோ, ஹீரோயின் கெமிஸ்ட்ரி ஒத்துப் போகணும் என்ற நிலை இருக்கும்.

என்னைப் பொறுத்தவரை மியூசிக் டைரக்டருக்கும் இயக்குநருக்குமான கெமிஸ்ட்ரி முக்கியம் என்று நினைப்பேன். எந்த மாதிரி கெமிஸ்ட்ரி என்றால், கணவன் மனைவி மாதிரி இல்லாமல் லவ்வர்ஸ்க்கான கெமிஸ்ட்ரி இருக்கணும் என்று நினைத்தேன். ஏன்னா, கணவன் மனைவிக்கிடையே சின்ன மனஸ்தாபம் வரும். ஆனால் லவ்வர்ஸ் அப்படி இல்லை.

ஒரு இசையமைப்பாளர், இயக்குநர் என்ன நினைக்கிறாரோ அதைக் கொடுக்கவேண்டும். அந்த வகையில் நான் என்ன நினைத்தேனோ அதை மியூசிக் டைரக்டர் அழகாகக் கொடுத்தார். இந்தப் படத்தைப் பொறுத்தவரை சின்னப் பசங்களுக்குப் பிடித்த மாதிரியும் இருக்கணும்; பெரியவங்களையும் ரசிக்க வைக்கணும். என்னுடைய மியூசிக் டைரக்டர் அதை சரியாகப் பண்ணியிருக்கிறார். பாடல்களையும் அவரே எழுதியிருக்கிறார். நா.முத்துக்குமார் மாதிரி காஞ்சிபுரத்துலேருந்து ஒரு பாடலாசிரியர் கிடைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவை லோகு, காசி விஸ்வா இணைந்து பண்ணியுள்ளார்கள். என்னுடைய நண்பர் மகேஷ்வரன் தயாரித்துள்ளார். சினிமா மீது பேஷன் உள்ளவர். ஒரு நாள் போன்லே யதேச்சையாக கதை சொல்லிவிட்டு அடுத்த வேலையை பார்க்க போயிட்டேன். மறுநாள் மீட் பண்ண வர்றேன் என்று சொல்லி இந்தப் படத்தை நானே தயாரிக்கிறேன் என்று முன்வந்தார். அவருடன் பூபதி என்ற நண்பரும் இணைத் தயாரிப்பாளராக பணிபுரிந்திருக்கிறார்.”

 “சின்னப் பசங்களை எப்படி சமாளித்தீர்கள்?”

“எங்க ஆபீஸ்லே பசங்களுக்கு ஒரு மாதம் ஒர்க் ஷாப் நடத்தினோம். சனி, ஞாயிறுன்னா பசங்க எங்க ஆபீஸுக்கு ஜாலியா வந்துடுவாங்க. பசங்களுக்கு பிடிச்ச நொறுக்குத் தீனியை எக்கச்சக்கமா வாங்கி வைத்திருப்போம்.

வீடியோ கேம்ஸ், பார்க்ல கண்ணாமூச்சி என்று விளையாட வைத்து ஜெல்லாக்கினோம். அதன் பிறகே படப்பிடிப்புக்கு அழைத்துச் சென்றோம். அதனால் எந்த பிரச்னையும் இல்ல. சொல்லப்போனால் பெரிய ஆர்ட்டிஸ்ட்டை விட தெளிவா பண்ணாங்க.”

“உங்களுடைய பின்னணி?”

“சினிமாவில் என்னுடையது 20 வருட டிராவல். நான் கேயார் சார் மாணவன். சாரிடம் ‘வனஜா கிரிஜா’ முதல் ‘டான்சர்’ வரை ஒர்க் பண்ணினேன். அசிஸ்டென்ட், அசோசியேட் தாண்டி அவருடைய செல்லப் பிள்ளையா இருந்தேன். ஒரு கட்டத்தில் சினிமாவைத் தாண்டி அவருடன் இருக்கவேண்டிய சூழ்நிலை இருந்தது.

சாரிடமிருந்து முழுமையாக வெளியே வந்த பிறகு ‘நேர் எதிர்’ பண்ணினேன். அந்தப் படம் சரியா ஓடாததால் நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் ஆனேன். பிறகு என்னை நானே சுதாரித்துக் கொண்டு இயக்கிய படம்தான் இது. இந்தப் படம் எனக்கு பேர் வாங்கித் தருவதோடு மக்கள் மத்தியில் பேசப்படும் படமாகவும் இருக்கும்.”

- சுரேஷ்ராஜா