விஜய்னாலே வெற்றிதான்!தெலுங்குதேச இளம்பெண்கள் இவருக்கும்தான் இப்போது ஹாட்டின் பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ‘நோட்டா’ மூலமாக தமிழிலும் படையெடுப்பு நடத்தியிருக்கிறார் இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா. இவரது அப்பா ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் என்பதால் நடிப்பு ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பே சினிமாவுக்கு வந்துவிட்டாலும், கடந்த இரண்டே ஆண்டுகளில் ‘பெல்லி சூப்புலு’, ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ என்று மூன்றே படங்களில் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம்பெற்றுவிட்டார்.தமிழ் ரசிகர்களுக்கும் ஏற்கனவே அறிமுகமானவர்தான். ‘நடிகையர் திலகம்’ படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக பத்திரிகையாளர் வேடத்தில் வந்தாரே, இவரேதான்.

தமிழில் என்ட்ரி ஆகிறோம் என்பதால் சின்ஸியராக திருக்குறள் படிக்கிறார். யாரைச் சந்தித்தாலும் அழுத்தம் திருத்தமாக ‘வணக்கம்’ சொல்லித்தான் பேச ஆரம்பிக்கிறார்.“எங்கே திருக்குறள் கத்துக்கிட்டீங்க?”

“தமிழுக்கே பெருமை சேர்ப்பது திருக்குறள். அதனால்தான் உலகத்துக்கே பொதுமறையாக வேற்று நாட்டவர்கள் கூட ஏத்துக்கிட்டாங்க. என்னோட ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் மூலமாகத்தான் திருக்குறளோட பெருமையைப் புரிஞ்சுக்கிட்டேன். ஒரு மனிதனின் வாழ்க்கையில் எதிர்நோக்கக்கூடிய எல்லாப் பிரச்னைகளுக்குமே திருக்குறளில் தீர்வு இருக்கு.”

“எங்க தமிழ் மண் எப்படி இருக்கு?”

“இந்த மண் எல்லாருக்கும்தான். யார் வந்தாலும் அன்பாக வரவேற்று உபசரிக்கிற தமிழர்களின் பண்பாடு, உலகத்துக்கே முன்னுதாரணம். எங்க தெலுங்கு நடிகர்கள் பலரும் பிறந்து வளர்ந்து படிச்சது எல்லாம் தமிழ்நாடுதான். அவங்க நல்லா தமிழ் பேசுறாங்க. ரொம்ப ஈஸியா தமிழர்கள் கிட்டே நெருங்கிட்டாங்க. என்னாலே அவங்க அளவுக்கு முடியலைங்கிற வருத்தம் இருக்கு. ஆனா, ‘நோட்டா’ இப்போ என்னை தமிழர்கள் மத்தியிலும் பிரபலமாக்கி இருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.”

“போற போக்கைப் பார்த்தா தமிழ்நாட்டுக்கு மருமகன் ஆகிடுவீங்க போலிருக்கே?”

“அப்படி ஒரு அதிர்ஷ்டம் அமைஞ்சா மகிழ்ச்சிதான். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது உங்க தமிழ்நாட்டோட தாரக மந்திரம் இல்லையா? என்னைப் பொறுத்தவரைக்கும் இப்போதைக்கு நான் நல்லா தமிழ் பேசணும். தமிழ் கத்துக் கொடுக்க ஒரு நல்ல கேர்ள் பிரண்ட் அமைஞ்சா போதும். நடக்குமான்னு பார்ப்போம்.”

“உங்க ‘நோட்டா’ பற்றி...”“இப்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்றவகையில் வந்திருக்குன்னு நாலாபக்கமும் பாராட்டு மழை. இளைஞர்கள், அரசியலிலும் கவனம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கு. அப்படியொரு இளைஞன், அரசியல் சூழலுக்குள் தள்ளப்பட்டு, அவனைச் சுத்தி என்ன நடக்குது, என்ன விளைவுகள் என்பதைத்தான் படம் சொல்லுது. பொதுவா அரசியல்னாலே கெட்ட வார்த்தைன்னு நெனைக்கிற நடுத்தர வர்க்கத்து மக்களை படம் சிந்திக்க வெச்சிருக்கு. எங்களோட நோக்கம் நிறைவேறி இருக்குன்னுதான் நெனைக்கிறேன்.”

“தமிழகத்தில் சமீபமாக சினிமாத்துறையினருக்கு நிறைய அரசியல் குடைச்சல் நடந்தது. உங்களுக்கு வரலையா?”

“தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுக்கவே இப்படியொரு போக்கு நடந்துக்கிட்டுதான் இருக்கு. ‘நோட்டா’வைப் பொறுத்தவரைக்கும் நான் நேரடியா எதிர்ப்புன்னு எதையும் எதிர்கொள்ளலை. எதிர்க்கிறவங்களும்கூட இவனைப் போய் எதுக்கு தேவையில்லாமே நோண்டணும்னு நினைப்பாங்க இல்லையா? பிரச்சினை வர்றதா இருந்தா படத்தோட இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும்தான்.

எனக்குக் கொடுத்த வேலையைத்தான் நான் செஞ்சி முடிச்சிருக்கேன். ‘நோட்டா’ ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருந்தப்போ தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் பிரச்சினை உக்கிரமா ஆகிட்டிருந்தது. மக்கள் விழிப்புணர்வா போராடிக்கிட்டு இருந்தாங்க. அந்த தகிப்பு எங்க படத்துலேயும் தெரியும்.”

“உங்களுடைய ‘அர்ஜுன் ரெட்டி’ படத்துலே பெண்களை மதிக்கவே மாட்டீங்க...”
“நிஜத்துலே நான் அப்படியா இருக்கேன்? அர்ஜுன் ரெட்டிதான் பெண்களை மதிக்கலை. விஜய் தேவரகொண்டாவுக்கு பெண்கள் மேலே பெரிய மரியாதை இருக்கு. பெண்களுக்கும் விஜய் தேவரகொண்டாவைப் பிடிச்சிருக்கு. இப்போ தமிழ்நாட்டு இளம்பெண்களும் என்னை ஃபேஸ்புக்கில் ஃபாலோ பண்றாங்க. மெசேஜ் அனுப்பறாங்க.”

“ஆனா, ‘கீதா கோவிந்தம்’ படத்துலே உங்களை ஹீரோயின் டாமினேட் பண்ணுவாங்க?”

“அதெல்லாம் நான் ஏத்துக்கிற கேரக்டரைப் பொறுத்தது. என் வேலை நடிக்கிறது. டைரக்டர் என்ன சொல்லிக் கொடுக்கிறாரோ, அவருக்கு திருப்தி ஏற்படும் வகையில் நடிக்கிறேன். அவ்ளோதான். மத்தபடி கேரக்டர் அனாலிசிஸ் பண்ண வேண்டியது ரசிகர்கள்தான். ஒரு கேரக்டரை என்னாலே திறம்பட செய்யமுடியும் என்கிற நம்பிக்கை எனக்கு வந்தபிறகுதான் நடிக்கிறேன்.

திரையில் தெரியும் என்னோட பாத்திரங்களின் தன்மைதான் நிஜமான விஜய் தேவரகொண்டாவுக்கு இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை.”
“தமிழில் விஜய், விஜய்சேதுபதி. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா. விஜய்னாலே வெற்றிதானா?”

“மகிழ்ச்சி. விஜய் சார், விஜய் சேதுபதி சார் ரெண்டு பேருமே பெரிய ஜீனியஸ். அவங்க கதையைக் கேட்டு கேரக்டர் செலக்ட் பண்ணி நடிக்கிறதுலேதான் அவங்களோட வெற்றி அடங்கியிருக்கு. என்னோட ஃபார்முலாவும் அதுதான். ஒரு கதையைக் கேட்குறப்பவே, அதுலே என்னை ஈர்க்கக்கூடிய விஷயம் என்னன்னு பார்த்துதான் செலக்ட் செய்யுறேன்.

மேலும் என்னோட நடிக்கிறவங்க, வேலை பார்க்கிறவங்களோட பங்களிப்பும் என்னோட வெற்றியைத் தீர்மானிக்குது. ‘அர்ஜுன் ரெட்டி’ எடுத்துக்கிட்டீங்கன்னா ஷாலினி பாண்டே, ‘கீதா கோவிந்தம்’ எடுத்துக்கிட்டீங்கன்னா ராஷ்மிகா.... இவங்க ரெண்டு பேரும் சரியா செய்யலைன்னா, அந்தப் படங்களில் நான் வெற்றியை எட்டியிருக்க முடியாது.

ஒரு படத்துலே ஹீரோ மட்டுமில்லை, ஹீரோயின், துணை பாத்திரங்கள், காமெடி, வசனம், இயக்கம், கேமரான்னு எல்லா டிபார்ட்மென்டுமே ஒழுங்கா செஞ்சா, எல்லாருக்கும் சேர்த்துதான் வெற்றி.”

“அரசியல் படத்தில் நடிச்சதாலே, அரசியலெல்லாம் பேசுறீங்க. எதிர்காலத்தில் அரசியலில் குதிப்பீங்களா?”

“பணம், சாதி, மதமெல்லாம் பார்த்து ஓட்டுப் போடுற கலாச்சாரம் இங்கே இருக்கு. இப்படிப்பட்ட சூழலில் அரசியல் செய்ய என்னை மாதிரி மென்மனம் படைச்சவங்களாலே முடியாது. இதெல்லாம் இல்லாத ஓர் அரசியல் உருவாகும்போது, நிச்சயமா நான் வருவேன்.”
“அப்போன்னா வரவேமாட்டீங்க...”“நம்பிக்கைதானே வாழ்க்கை? அதுவரைக்கும் கிரேட் எஸ்கேப்!”

- ஷாலினி நியூட்டன்