டெய்லர்மேட் லவ்!



கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகளை பட புரொமோஷனுக்கு அழைத்து வருவதற்குள் நம்மூர் தயாரிப்பாளர்கள் விழி பிதுங்கி நிற்பது வாடிக்கையான விஷயம். ஆனால் இந்த விஷயத்தில் பாலிவுட் முன்னுதாரணமாக இருக்கிறது.
வருண் தவான், அனுஷ்கா ஷர்மா நடிக்கும் படம் ‘சுய் தாகா-மேட் இன் இந்தியா’. விரைவில் வெளியாகவுள்ள இந்தப் படத்துக்காக இந்த ஜோடி 40  நாட்கள் விளம்பர வேலைக்காக ஒதுக்கியுள்ளனர். அனுஷ்கா ஷர்மா, நம்ம இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவி என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்.

வருண் தவான், அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக இந்தப் படத்துக்காகத்தான் ஜோடி சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2018ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படவரிசையில் இந்தப்படம் அமைந்துள்ளது. தேசிய விருது வெற்றிக் கூட்டணியான இயக்குனர் சரத் கட்டாரியா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தயாரிப்பு மணீஷ் ஷர்மா.

இந்தப் படம் முழுக்க முழுக்க சொந்தமாய் யாரையும் சார்ந்து இருக்காமல் நம் உழைப்பால் முன்னேறலாம் என்ற கருத்தினைக் கொண்ட படமாக அமைந்துள்ளது. மேலும் மகாத்மா காந்தி அவர்களின் வழியைப் பின்பற்றும் வகையில், நாம் பயன்படுத்தும் பொருட்கள் நம் நாட்டில் உருவாக்கப்பட்டதாக இருக்கவேண்டும் என்ற செய்தியையும் தெரிவிக்கிறது. இந்தப் படத்தில் வருண் தவான் டெய்லராகவும், அனுஷ்கா ஷர்மா தையல்கலை நிபுணர் வேடத்திலும் நடித்துள்ளார்கள்.

‘‘கண்டிப்பாக இந்தப் படம் அனைத்து மக்களையும் கவரும் வகையில் அமையும். சுயமாகத் தொழில் செய்து யாரையும் நம்பி வாழாமல் நம்மால் வாழ முடியும் என்ற தன்னம்பிக்கையை விதைக்கும் படமாக அமையும்’’ என்கிறார் நாயகி அனுஷ்கா ஷர்மா.

‘‘வருண் தவான், அனுஷ்கா ஷர்மா ஆகியோர் மிகவும் திறமைசாலியான நடிகர்கள். இந்தப் படத்தின் மீது அதிக நம்பிக்கையை வைத்துள்ளனர். இது எங்கள் கனவுப் படம். இந்தப் படத்தை தயாரித்ததற்காக பெருமைப்படுகிறோம்’’ என்கிறார் தயாரிப்பாளர் மணீஷ் ஷர்மா.

- ரா