விஸ்வரூபம் 2



வெட்டி ஒட்டி ஏதோ தைச்சிருக்காங்க...

இந்திய அரசின் உச்ச அதிகாரமும், செல்வாக்கும் கொண்ட உளவு அமைப்பான RAWவில் பணியாற்றும் கமல் எதிர்கொள்ளும் ஆபத்துகளும், சவால்களும்தான் படம்.முதல் பாகத்தில் அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்த இருந்த நாசவேலையை தடுத்து நிறுத்தும் கமல்ஹாசன் மற்றும் குழுவினர், அங்கிருந்து இங்கிலாந்துக்கு வருகிறார்கள்.
அங்கு தீவிரவாதிகள் பெரிய அளவில் நாசவேலை செய்வதைக் கண்டுபிடிப்பதோடு, அதை தடுத்தும் நிறுத்துகிறார்கள். பிறகு இந்தியாவுக்கு வரும் கமல், அங்கேயும் தீவிரவாதிகளின் சதித்திட்டத்தை முறியடித்து நாட்டைக் காப்பாற்றுகிறார். சுபம்.

ஒன் மேன் ஷோவாக படம் முழுக்க நிறைந்திருக்கிறார் கமல். மல்லிகைப் பூ மணம் வீசும் என்பது மாதிரி கமலின் நடிப்பைப் பற்றி புதுசாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாடி நரம்பு என்று அவரது அத்தனை உடல் அங்கங்களும் நடிப்பதை அனைத்துத் தரப்பு ரசிகர்களும் கொண்டாடுவதைத் தவிர்க்கமுடியாது.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வாழ்க்கைத் தத்துவங்களைப் பேசுவது கமலின் எக்ஸ்க்ளூஸிவ் டச்சிங்.தொடக்கக் காட்சியிலிருந்து வந்தாலும் ஆண்ட்ரியாவும் பூஜாகுமாரும் ஊறுகாயாகத்தான் இருக்கிறார்கள்.

உயரதிகாரியாக வரும் சேகர் கபூர், வில்லனாக நடித்திருக்கும் ராகுல் போஸ் ஆகியோர் தங்கள் நடிப்பால் யார் இவர்கள் என்று கேட்கவைத்திருக்கிறார்கள். ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. ஷானு வர்கீஸ் மற்றும் ஷாம்தாட் சைனுதீன் ஆகியோரது ஒளிப்பதிவு நன்று.

‘விஸ்வரூபம்’ படத்துக்காக எடுக்கப்பட்டு படத்தொகுப்பில் மீதமான காட்சிகளைத் தொகுத்து இரண்டாம் பாகமாக்கிவிட்டார்கள். அதனால், இந்தக் காட்சி எந்த நாட்டில் நடக்கிறது? என்பதை உணரமுடியாதபடி இந்தியா, லண்டன், ஆப்கானிஸ்தான் என்று மாறி மாறிக் காட்சிகள் வருகின்றன. எது கமலின் நினைவு, எது இப்போது நடப்பது என்பதைப் புரிந்துகொள்ள பார்வையாளர்கள் பக்கத்தில் இருப்பவரிடம் கேட்டே ஆகவேண்டும். அவருக்கும் தெரியாது என்பதுதான் சோகம்.

வன்முறை வேண்டாம் என்பதைப் படம் முழுக்க கொடூரமாக இரத்தம் தெறிக்கத் தெறிக்கச் சொல்லும் கமல், பொம்பளைங்க பேச்சைக் கேட்காத, பொம்பளைங்க கிட்டப் பேசாத என்பது உட்பட பல இடங்களில் பொம்பளைங்க என்கிற சொல்லாடலைப் பயன்படுத்தி பெண்களுக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார். முதல் பாகத்திலிருந்த அந்த சுவாரஸ்யமும் பிரமிப்பும் இரண்டாம் பாதியில் இல்லை என்பதால் இந்த விஸ்வரூபம் வெறும் பிம்பம் மட்டுமே.