அரசியல்வாதியிடம் மோசம் போன ஆவிகள்!



நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் ஒவ்வொரு காமெடியிலும் ஒரு வசனம் மக்களிடையே வரவேற்பைப் பெறும். அப்படி யாராலும் மறக்க முடியாத வசனம் ‘படித்தவுடன் கிழித்துவிடவும்’.
அந்த வசனத்தையே தலைப்பாகக் கொண்டு ஒரு படம் உருவாகிறது. இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார் செ.ஹரி உத்ரா. இவர் ஏற்கனவே மீத்தேன் திட்டத்தால் விவசாய நிலங்கள் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பதை மையமாக வைத்து ‘தெருநாய்கள்’ என்கிற படத்தை இயக்கியவர். ரிலீஸுக்கான வேலைகளில் பிஸியாக இருந்தவரிடம் பேசினோம்.

“காமெடி கதையா?”

“தலைப்புதான் வடிவேலுவின் காமெடி வசனம் மாதிரி இருக்கும். ஆனால் சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் இந்தக் கதைக்கும் தொடர்பு இருக்கும். இன்று பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் நாம் சில விஷயங்களை செய்வதோடு விட்டுவிடுகிறோம். அப்படி விட்டுவிடுகிற ஒரு முக்கியமான விஷயம் இன்று நாம் வாங்கும் செல்போனிற்குக்கூட செய்கிறோமே இன்சூரன்ஸ்... அதுதான்.

அதைப்பற்றிய ஒரு சிறு பயணம் தான் இந்தப் படம்.இன்சூரன்ஸ் இன்று நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அப்படி நாம் செய்யும் இன்சூரன்ஸ் தொகையை வாங்க நாமும் முறையிடுவது இல்லை. சம்பந்தப்பட்ட கம்பெனிகளும் அதை மக்களுக்கு அதிகமாக தர முன்வருவதும் இல்லை.

இதனால் கிட்டத்தட்ட பல லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணம் முடங்கி உள்ளன. அப்படி ஒரு அரசியல்வாதியால் இன்சூரன்ஸ் மோசடி செய்யப்பட்டு  இறந்தவர்களின் ஆவிகள் மனிதர்களின் துணை கொண்டு எப்படி அந்த அரசியல்வாதியைப் பழிவாங்கியது என்பதை காமெடி கலந்து கமர்ஷியலாக  திரைக்கதை அமைத்துள்ளேன்.”

“படத்துல வேறென்ன ஹைலைட்?”

“பிளாஸ்டிக் தொழிற்சாலை கதையின் முக்கிய கதாபாத்திரமாக உள்ளதால் மன்னார்குடி பகுதியில் மிக பிரமாண்டமான பிளாஸ்டிக் தொழிற்சாலை செட் அமைத்து படமாக்கினோம். 90 சதவீதம் படப்பிடிப்பை இரவில் மட்டுமே நடத்தியிருக்கிறோம். அதற்காக  சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட  ரெட் ஹீலியம் என்ற புதுவகையான  கேமராவில் CP3 எனும் லென்ஸை பயன்படுத்தியுள்ளோம்.

அது இரவு நேர படப்பிடிப்புக் காட்சிகளை மிகத் துல்லியமாக படம்பிடித்துள்ளது. இவ்வகை லென்ஸை நாங்கள்தான் இந்திய அளவில் முதன் முதலாகப் பயன்படுத்தியுள்ளோம். எங்களுடைய ஃபுட்டேஜ் காட்சிகளை ரெட் கேமரா நிறுவனம் தங்கள் புரொமோஷனில் பயன்படுத்துவதை எங்கள் படைப்புக்கான அங்கீகாரமாகக் கருதுகிறோம்.”

“யாரெல்லாம் நடிக்கிறார்கள்?”

“இது ஹீரோ, ஹீரோயின் சப்ஜெக்ட் கிடையாது. கூல் சுரேஷ், பிரதீக், ஸ்ரீதர், சீனி ஆகிய நால்வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் பிரதீக் ஏற்கனவே நான் இயக்கிய ‘தெரு நாய்கள்’ படத்தில் நாயகனாக நடித்தவர்.

மற்றவர்களுக்கும் சினிமா அனுபவம் இருந்ததால் என்னுடைய வேலை சுலபமாக இருந்தது. இவர்களோடு பான்பராக் ரவி, காதல் சரவணன், நெல்லை சிவா, ரோஜா பதி, சபீதா, ஜெனிபர், சுபாஷி, சுமா, அனிதா, சிறுவன் தனுஷ், சுரேஷ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். வில்லனாக கருணாநிதி அறிமுகமாகிறார்.”

“டெக்னீஷியன்ஸ் பற்றி?”

“லண்டனைச் சேர்ந்த நிரோ பிரபாகரன் இசையமைத்துள்ளார். ரிக்கார்டிங் முழுதும் லண்டனில் உள்ள அதி நவீன ஸ்டூடியோவில் நடந்துள்ளதால் உலகத்தரத்தில் பாடல்களும், பின்னணி இசையும் இருக்கும். ‘பிக் பாஸ்’ என்ற பாடலுக்கு சோஷியல் மீடியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வாசு ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார்.

ஹாரர் படத்துக்கான விஷுவல்ஸை மிக அற்புதமாக எடுத்துக்  கொடுத்தார். தயாரிப்பாளர் உஷா மேடம் ‘தெரு நாய்கள்’ படத்தின் இணைத் தயாரிப்பாளர் என்பதால் எங்களுக்குள் நல்ல பரிச்சயம் இருந்தது. அப்போதே எனக்கு வாய்ப்பு தருவதாகச் சொன்னார். இந்தப் படத்தின் கதை அவருக்குப் பிடித்திருந்ததால் உடனே ஷூட் போகலாம் என்றார். தயாரிப்பாளராக அவர் கொடுத்த ஒத்துழைப்பு அதிகம்.”

“உங்களைப் பற்றி?”

“எனக்கு சொந்த ஊரே சென்னைதான். சினிமா பேஷன் என்பதால் படிப்பு முடிந்ததும் உதவி இயக்குநராக சேருவதற்கு முயற்சி செய்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததைவிட எதிர்பார்க்காத துறையான ஆர்ட் டைரக்ஷன் டிபார்ட்மென்ட்டில் வாய்ப்பு கிடைத்தது. ஆர்ட் டைரக்டர் கென்னடியிடம் ‘ரெட்டைச்சுழி’, ‘16’, ‘தா’ உள்பட ஏராளமான படங்களில் உதவி ஆர்ட் டைரக்டராக வேலை பார்த்தேன்.

‘திணறல்’ என்ற மலேஷிய தமிழ்ப் படத்தை இயக்கினேன். அதன்பிறகு கிடைத்த வாய்ப்புதான் ‘தெரு நாய்கள்’. சமீபத்தில் இந்த ‘படித்தவுடன் கிழித்துவிடவும்’ படத்தைப் பார்த்த சென்சார் டீம், ‘ஹாரர் படத்துல சமுதாயக் கருத்து சொல்லியுள்ளீர்கள்’ என்று பாராட்டியது அதிக உற்சாகத்தைக் கொடுத்திருக்கு.”

- சுரேஷ்ராஜா