மனசெல்லாம் சொற்கோ கருணாநிதி



டைட்டில்ஸ் டாக் 79

என்னோட ‘மனசெல்லாம்’ நிறைஞ்சவங்களைப் பத்தி சொல்லலாம்னு நெனைக்கிறேன்.என்னுடைய சொந்த ஊர் புதுக்கோட்டை. பள்ளி நாட்களில் என் மனசில் நிறைந்தவர் எனக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசான் அமானுல்லா அஜரத்.
ஒரு சாதாரண மாணவனான எனக்குள் இருந்த ஆற்றலை அடையாளம் கண்டு ஒரு மேடைப் பேச்சாளனாக மாற்றியவர். இப்போது என் பேச்சும் நடையும் அழகாக இருக்கிறது என்றால் அதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் இவர்தான். எப்போதும் என் இதய ஓசையாக எனக்குள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

யாப்பு சொல்லிக் கொடுத்த கவிஞர்  தனிக்கொடி, என் மனதில் நிற்கும் முக்கியமானவர்களில் ஒருவர். அவர்தான்  மரபுக் கவிதைகள் எழுத கற்றுக் கொடுத்தார்.என் அம்மா எழுதத் தெரியா கவிஞர். படிக்காத பல்கலைக்கழகம். அவர் பேசுவது, நடப்பது, சிந்திப்பது என அனைத்துமே கவிதையாக இருக்கும். தந்தை ராமசாமி, கலைஞரின் நூல்களையும் மேடைப் பேச்சுகளையும் சுவாசித்தவர்.

என் இயற்பெயர் கண்ணன். ஆனால் கலைஞர் மீதுள்ள பற்றுதலால் ஏட்டில் என் பெயரை கருணாநிதி என்று மாற்றினார். அவரால்தான் இன்று பாடலாசிரியராக சொற்கோ கருணாநிதி என்று பவனி வருகிறேன். கலைஞரின் தாக்கம் இல்லாமல் எவரும் இங்கு கவி பாட முடியாது. அந்த வகையில் நான் கலைஞரின் பித்தனாக மாறக் காரணமாக இருந்தவர் என்னுடைய அப்பா. என்னுடைய கவி ஆற்றலுக்கு வித்திட்ட ஆசான்களும் பெற்றோருமே என் மனசெல்லாம் என்றும் நிரம்பியிருக்கிறார்கள்.

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் கவிதைப் போட்டி யில் 26  முறை தமிழக அளவில் பரிசு வாங்கியது மறக்க முடியாதது.  பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்திய பாரதிதாசன் நூற்றாண்டு விழாவில் பாரதி  விருது வாங்கியதை இப்போதும் என் மனசெல்லாம் நிறைஞ்ச விஷயமாகப் பார்க்கிறேன். பூண்டி கலைவாணன் ஒருமுறை என்னை  கலைஞரிடம் அறிமுகம் செய்துவைத்த போது என்னைப்பற்றி விசாரித்துவிட்டு என்  கன்னத்தைக் கிள்ளி, முதுகைத் தட்டிக் கொடுத்த போது தேசிய விருதே கிடைத்த மாதிரி  மகிழ்ச்சி அடைந்தேன்.

மன்னர் கல்லூரியில் படிக்கும்போது கீழக்கரையில் உலக இஸ்லாமிய மாநாட்டில் கவிதை வாசிக்கச் சென்றேன். கலைஞர், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது அவருடைய தரிசனம் கிடைத்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மேடையிலிருந்து கீழே வந்த கலைஞர், ‘மிக அருமையான பேச்சு... மிக அருமையான வீச்சு...’ என்று பாராட்டினார்.

செம்மொழி மாநாட்டில் கவியரங்கத்துக்கு கவிப்பேரரசு தலைமை தாங்கினார். அப்போது என் கவிதையைப் பாராட்டி முதுகைத் தட்டிக் கொடுத்து கலைஞர் பாராட்டியதும் என் வாழ்வில் அடைந்த பேரானந்தம். கலைஞர் கடைசியாக ரசித்த கவியரங்கத்தில் நானும் கலந்து கொண்டது மனதைவிட்டு நீங்காதது. அந்த நிகழ்வு திருவாரூரில் நடந்தது.

கவிச்சுடர் கவிதைப்பித்தன் நடத்தினார். பா.விஜய், விவேகா உள்பட ஏராளமான கவிஞர்கள் கலந்துகொண்டோம். அப்போது கலைஞர் ஐயாவிடம், ‘உங்களை வாழ்த்திப்பாட கிடைத்த வாய்ப்புக்கு நாங்கள் புண்ணியம் செய்தி  ருக்கவேண்டும்’ என்றேன். ‘அப்படிச் சொல்லக்கூடாது. உங்கள் கவித்திறமை அபாரமானது. ரசித்தேன்’’ என்றார்.

அண்ணா அறிவாலயத்தில் அவர் பார்வையாளராகக் கலந்துகொண்ட ஏராளமான நிகழ்ச்சிகளில் கவி பாடியதும் மனதைவிட்டு நீங்காத நினைவுகள். கழக இலக்கிய அணியைச் சேர்ந்த கயல் தினகரன்  மூலம் கவிக்கோ தலைமையில் கலைஞர் முன்னிலையில் கவி பாடியது மறக்க முடியாதது. சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் நடத்திய கலைஞர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதும் எனக்குக் கிடைத்த
கெளரவம்.

பேராயர் எஸ்றா சற்குணம் நடத்திய ‘கலைஞர் கண்ட தமிழ்நாடு’ என்ற கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசை கலைஞர் கையில் வாங்கியது ஜென்ம பலன் அடைந்த மகிழ்வாக இருந்தது. இசைஞானி என்று போற்றப்படும் இளையராஜாவை கெளரவிக்கும் நோக்கத்தில் பாடலா சிரியர்களுக்கான போட்டி நடந்தது. அந்தப் போட்டியில் தங்கப் பேனா பரிசு பெற்றதும் என் மனதில் நிற்கக்கூடியதுதான். அந்தப் போட்டிக்குக் காரணமாக இருந்த சுஜாதாவுக்கு நன்றி.

இளையராஜா இசையில் ‘அழகி’ படத்தில் பாடல் எழுதியது, பேரரசு இயக்கத்தில் அஜித்துடன் ‘திருப்பதி’ படத்தில் 100 நாட்கள் தொடர்ந்து நடித்தது என்று மனதில் நிற்கும் சம்பவங்கள் ஏராளம்.ஒருமுறை கலைஞரைப் பற்றி நான் வாசித்த கவிதையை ரசித்த கலைஞர் நான் நன்றாகக் கவிபாடியிருப்பதாக வைரமுத்துவிடம் சொன்னாராம். அந்தக் கவிதை இதுதான்...

‘உன் நெற்றிச் சுருக்கம்
தமிழனத்தைப் பெற்ற பிரசவத் தழும்புகள்.
உன் கருப்புக் கண்ணாடி
தமிழ்த் தாய் தன்னை அலங்கரித்துக் கொண்ட கண்மை டப்பா.
உன் மூக்கு
உலகத் தமிழனத்தின் ஒரே ஒரு சுவாசக் குழாய்.
உன்னுடைய உதடு
தமிழ்த்தாயே பால் கொடுத்த மார்பகங்கள்.
தள்ளாடி சிலசமயம் நீ நடந்துவருவாய்
அதன் காரணம் என்னவென்றால் உன் அகவை அல்ல
இந்தத் தம்பிகளின் இதயத்தையெல்லாம் தாங்கி நடப்பதால் பாரம் தாங்காமல் தள்ளாடி நடக்கின்றாய்.

உன் மஞ்சள் தூண்டு ஏழைப் பெண்களுக்கு மாங்கல்யக் கயிறானது.’உச்சக்கட்டமாக வாழ்வின் பெரும் பேறாக நினைப்பது சமீபத்தில் மறைந்த கலைஞரின் இறுதி ஊர்வலத்தை ஆல் இந்தியா ரேடியோவில் வர்ணனை செய்தபோது...

அந்த வர்ணனை உரையை  வாசகர்களுக்காக படிக்க விரும்புகிறேன். ‘சென்னைப் பல்கலைக்கழகம் எதிரே ஒரு செம்மொழி பல்கலைக் கழகம்.
இதோ, அண்ணா பல்கலைக்கழகம் அருகே அமர்ந்து பேச வருகிறது. காஞ்சித் தலைவனோடு கற்றது போதாது என்று அந்தத் தலைவனிடம் கற்பதற்காக தம்பி ஊர்வலமாக வருகிறார்...ஒரு தமிழ்க் கடல் வங்கக் கடல் நோக்கி வருகிறது...

அண்ணாவின் இதயத்தைக் கடனாகப் பெற்ற கலைஞர்...கடன் பெற்றால் திருப்பித் தருவதுதானே கடமை கண்ணியம் கட்டுப்பாடு!
அந்தக் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் நெஞ்சுக்கு நீதி பெற்ற நேர்மையாளர் இதயத்தைத் திருப்பித் தர வருகிறார்...

தமிழுக்கு அகம்புறம்
கடற்கரையோரம் இருபுறம்
இருவருமே தமிழைச் சுமந்த சப்பரம்
ஒருபுறம் காஞ்சிபுரம்
மறுபுறம் கோபாலபுரம்
இது தமிழுக்கு பெரும்வரம்.
எத்தனையோ இருக்கிறது நினைவுகளாய்.

நினைவுகள்தான் நிரந்தரம்.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)