பேய்க்கு கொம்பு சீவுறாங்க!



காமெடி நடிகர் ஜீவா ஹீரோவாக நடிக்கும் படம் ‘கொம்பு’. இதில் நாயகியாக திஷா பாண்டே நடிக்கிறார். பாண்டியராஜன், கஞ்சா கருப்பு, சுவாமிநாதன், காயத்ரி, அஸ்மிதா ஆகியோரும் இருக்கிறார்கள். இசை தேவ்குரு. ஒளிப்பதிவு சுதீப். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஈ. இப்ராகிம்.

“தமிழ் சினிமாவில் எப்போதும் இரண்டுவிதமான படங்களுக்கு முக்கியத்துவம் உண்டு. ஒன்று திகில், இன்னொன்று நகைச்சுவை. என்னதான் கருத்து சொல்ல படங்கள் வந்தாலும் மக்களை இவ்வகை திரைப்படங்கள் ரசிக்க வைக்க மறப்பதில்லை.

அதுவும் திகிலும் நகைச்சுவையும் சேர்ந்து வருகின்ற படங்கள் மக்களின் பெரும் கவனிப்புக்கும் ஆதரவுக்கும் முன்வரிசையில் இடம் பிடிக்கின்றன. இப்படி வெற்றி பெற்ற படங்களுக்கு பல உதாரணங்களைக் காட்டலாம். அப்படி திகிலும், நகைச்சுவையும் சேர்ந்த படம் இது” என்று பேச ஆரம்பித்தார் இயக்குநர் இப்ராகிம்.

“ஏற்கனவே வந்த பேய்ப் படங்களுக்கும் இந்தப் படத்திற்கும் என்ன வித்தியாசம்?”

“திகில் பேய்ப் படங்கள் வித்தியாசப்படுவது கதை சொல்லப்படும் விதத்திலும் அந்தக் கதையின் பயத்தை மக்களை உணர வைக்கும் நடிகர்களின் நடிப்பிலும்தான்.  ஏற்கனவே திகில் படங்களில் ரசிகர்களை பயப்படுத்தியும் சிரிக்கவும் வைத்த நடிகர் பட்டாளமே இந்தப் படத்திலும் இருப்பதை படத்தின் ஹைலைட்டாக கருதுகிறேன்.

பேய்ப் படங்களில் இருந்து புதுமையைக் காட்டவேண்டும் என்ற ஆவலும், அந்தப் புதுமையை எவ்வளவு எளிதாக மக்களின் மன ஓட்டதோடு ஒத்துப்போகும் அளவுக்கு திரைக்கதையில் சொல்லமுடியும் என்பதையும் முனைப்புடனும் காட்டி உள்ளோம். அதுமட்டுமில்லாமல் இந்தக் கதை வெறும் திகில், பேய்ப் படம் என்று மட்டுமில்லாமல் பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் விழிப்புணர்வு எவ்வளவு அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறது.”

“ஜீவா?”

“முற்றிலும் வித்தியாசமான ஜீவாவை இதில் பார்க்கலாம். திகில், காமெடி, காதல் என்ற மூன்று தளங்களையும் சேர்த்து கேரக்டரை வித்தியாசப்படுத்தி காண்பிக்க முயற்சி எடுத்திருக்கிறார்.”

“திஷா பாண்டே?”

“திஷா பாண்டேவுக்கு இந்தப் படம் திருப்புமுனையாக இருக்கும். திறமையான நடிகை. சரியான வாய்ப்பு அமையாததால் ஒருவித தேக்க நிலை ஏற்பட்டது. அதை இந்தப் படம் சரி செய்யும். கதைக்குத் தேவையான நடிப்பு, திரைக்குத் தேவையான அளவு கவர்ச்சி என தனக்கான முத்திரையை மீண்டும் பதித்துள்ளார். படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக இருக்கும்.’’

- எஸ்