கிளாமர் வேணாம்... அதுக்குன்னு அழுகாச்சி ரோல் கொடுக்காதீங்க... லதா ராவ் வேண்டுகோள்!



வடிவேலுவுக்கு ஜோடியாக ‘தில்லாலங்கடி’ படத்தில் காமெடி வேடத்தில் அறிமுகமாகி புகழ் பெற்றவர் லதா ராவ். அதைத் தொடர்ந்து நடிகரும் இயக்குநருமான சசிகுமார் இயக்கத்தில் ‘ஈசன்’, சமுத்திரக்கனி இயக்கத்தில் ‘நிமிர்ந்து நில்’, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘முடிஞ்சா இவன புடி’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர்.  

சமீபத்தில் வெளியான ‘கடிகார மனிதர்கள்’ படத்தில் கிஷோர் ஜோடியாக நடித்து, குணச்சித்திர நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். பிரபுதேவா நடிக்கும் ‘யங் மங் சங்’ படப்பிடிப்பில் யங்காகக் காட்சியளித்தவரிடம் பேசினோம்.

“உங்களுக்கு ‘கடிகார மனிதர்கள்’ வேற மாதிரி ஒரு அனுபவம் இல்லையா?”

“கிஷோர் சாரின் நடிப்புத் திறமையைப் பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. ஸ்கிரீன்ல கொஞ்சம் இடம் கிடைத்தாலும் ஸ்கோர் பண்ணிவிடுவார். ‘கடிகார மனிதர்கள்’ படத்தைப் பொறுத்தவரை அவருக்கு அவருடைய தோற்றம் பெரிதாக பெயர் வாங்கிக் கொடுத்தது. அதன் மூலம் எளிதாக அவருக்கு பரிதாபமான லுக் கிடைத்தது.

ஆனால் எனக்கு பரிதாப லுக் வருவதற்கு ரொம்பவே மெனக்கெடல் போட்டேன். இவ்வளவுக்கும் ஒரு டிராப் மேக்கப் இல்லை. முழுப் படத்திலும் வித் அவுட் மேக்கப்பில்தான் நடித்தேன். ஒரே ஒரு காட்சியில் மட்டும் கண் மை யூஸ் பண்ணினேன். மற்றபடி வெளுப்பாக இருக்கிற சருமத்தை டல் பண்ணினார்கள். நடிக்கும் போது ஸ்கிரீன்ல எப்படி வருமோ என்று இயக்குநருக்கு தயக்கம் இருந்தது. ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததைவிட திரையில் நல்லாவே இருந்தது.

பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர்களுடன் நடிக்கும்போது எளிதில் கம்ஃபோர்ட் ஃபீல் கிடைக்காது. கிஷோருடன் நடிக்கும்போது கம்ஃபோர்ட்டா ஃபீல் பண்ண முடிந்தது. ஏன்னா கிஷோர் குறுகிய காலத்தில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். நான் சின்ன சஜஷன் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்வார்.

எனக்கும் சில சமயம் சஜஷன் சொல்வதோடு எனக்கான ஸ்பேஸுமும் கொடுத்தார். அழுகைக் காட்சியில் என்னுடைய இயல்பான நடிப்பைப் பார்த்துவிட்டு ‘உங்க கூட நடிக்கும்போது கவனமாக இருக்கணும்’ என்று சொன்னார். பெரிய நடிகர் அப்படிச் சொன்னதை எனக்கான  பாராட்டாக நினைக்கிறேன். நிஜ வாழ்க்கையில் இரண்டு குழந்தைகளின் அம்மா என்பதால் அம்மா கேரக்டர் அல்வா சாப்பிட்ட மாதிரி இருந்தது.”

“தொடர்ந்து அம்மா வேடத்தில் நடிப்பீர்களா?”

“அம்மா வேடத்தில் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நாலு குழந்தைக்கு அம்மாவா நடிக்கவும் தயாராக இருக்கேன். சில படங்களில் அம்மா ரோலுக்காக என்னை அழைத்தாலும் நேரில் என் இளமையான தோற்றத்தைப் பார்த்தபிறகு இயக்குநர்கள், வேறு ரோல் கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள். இதுதான் உண்மை நிலை. அந்த வகையில் அம்மா ரோலுக்கு இன்னும் கொஞ்சம் டைம் இருப்பதாகக் கருதுகிறேன்.”

“அப்படின்னா, நீங்க எந்த மாதிரி ரோலில் நடிக்க ஆர்வமாக இருக்கீங்க?”

“விதவிதமா சப்போர்ட்டிங் ரோல் பண்ணணும். வில்லி ரோல் கொடுத்தால் விரும்பி நடிப்பேன். அதுமட்டுமில்ல, காமெடி, அண்ணி, அக்கா என்று எந்த வேடமாக இருந்தாலும் ஓ.கே. என்னைப் பொறுத்தவரை இரண்டு காட்சிகள் இருந்தாலும் எனக்கான ஸ்பேஸ் இருக்கணும். ‘காஞ்சனா’வில் தேவதர்ஷினி பண்ணியிருப்பாங்க.

அந்த மாதிரி வாய்ப்பு வந்தால் என்ஜாய் பண்ணி நடிப்பேன். ஏன்னா நிறைய அழுதாச்சு. வேற மாதிரி பண்ண ஆர்வமாக இருக்கிறேன். அழுகாச்சி ரோல் மட்டும் வேண்டாம் என்று நினைக்கிறேன். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் கண்டிப்பா கிளாமர் ரோல் பண்ணமாட்டேன்.”

“அடுத்து?”

“நிறைய பண்றேன். ‘எழுமின்’. மார்ஷல் ஆர்ட்ஸ் சம்பந்தப்பட்ட கதை. ஹீரோ, ஹீரோயின் தாண்டி கதையில் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். விவேக், தேவயானி மெயின் லீட் பண்ணியுள்ளார்கள். சிலம்பம் கற்கும் பெண்ணின் அம்மாவாக நான் பண்ணியிருக்கிறேன். பெரிய ரோல் இல்லை என்றாலும் ரசிகர்கள் மனதில் நிற்கும்படியான ரோல். இந்தப் படத்திலும் என்னைக் கறுப்பாக்கித்தான் நடிக்க வைத்தார்கள். பக்கா குடிசை வாழ் பெண்ணாக மாறி நடித்தது புது அனுபவமாக இருந்தது.

பரத் நடிக்கும் ‘8’ படத்தில் ரோபோ சங்கர் ஜோடியா வர்றேன். காமெடி ரோல் என்று சொல்ல முடியாது. என் கேரக்டரைப் பிரித்துப் பார்க்கமுடியாதளவுக்கு கதையோடு கலந்திருக்கும். ‘யங் மங் சங்’ படத்தில் இளம் வயது பிரபுதேவாவின் அம்மாவா வர்றேன். இன்னும் சில படங்கள் இருக்கு. அதைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வராத நிலையில் சொல்லமுடியாது.”

“உங்கள் காதல் கணவர் ராஜ்கமலிடம் பிடித்தது?”

“அவருடைய அர்ப்பணிப்பு உணர்வு. எனக்கு சினிமா புரபஷன். அவருக்கு பேஷன். அதுக்காக எந்த லெவலுக்கும் போவார்.”

“யாருடைய இயக்கத்தில் நடிக்க ஆர்வமாய் இருக்கிறீர்கள்?”

“இது வம்புக்கு இழுக்கிற மாதிரி இருக்கு. பாலா சார் படம் பண்ணவேண்டும். எவ்வளவு பெரிய நடிகரா இருந்தாலும் அவர் படம் பண்ணும்போது வேற ஒரு ப்ளாட்பாரம் கொடுப்பார். கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் ஸ்டைலிஷ்ஷாக இருக்கும். ஏ.ஆர்.முருகதாஸ் சார் படத்தில் பஞ்ச் இருக்கும்.”  

“பிடிச்ச குணச்சித்திர நடிகை?”

“அப்படின்னு யாரும் தனியா இல்லை. சாவித்திரி, தேவிகா, ரேவதி, குஷ்பூவைப் பிடிக்கும். சமீப நாட்களில் நயன்தாராவை ரொம்பப் பிடிக்கும். இவர்களெல்லாம் ஹீரோயினா அறிமுகமானபோது டூயட் பாடினாலும் அதன் பிறகு வெரைட்டியாகப் படம் கொடுத்துள்ளார்கள்.”

 - சுரேஷ்ராஜா