கலைஞர் விரும்பிக் கேட்ட ‘மனோகரா’ வசனங்கள்!



பிலிமாயணம் 52

தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுதும்போது அதில் கலைஞரைக் குறிப்பிடாவிட்டால் அந்த வரலாறு முழுமை அடையாது. 1940களின் இறுதியில் துவங்கி 90கள் வரை தமிழ் சினிமாவில் அவருடைய பங்களிப்பு மறுக்க இயலாதது.முன்பெல்லாம் மாணவர்கள் பேச்சுத்திறனை வளர்ப்பதற்காக பள்ளி ஆண்டு விழாக்களில்  ஏதாவது கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்த வேண்டும் என்பது நடைமுறையாக இருந்தது.

மாணவர்கள் பெரும்பாலும் நாடகம்தான் தேர்வு செய்வார்கள். அல்லது ஏதேனும் திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபல வசனங்களைப் பேசவேண்டும். என்னுடைய பள்ளி ஆண்டு விழா ஒன்றுக்காக எனது தந்தையின் ஆலோசனைப்படி ‘பராசக்தி’ படத்தின் கோர்ட் காட்சி வசனங்களை மனப்பாடம் செய்து வைத்திருந்தேன்.

“கோவில்கூடாது என்பதல்ல; கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக... ஓடினாள் ஓடினாள்... வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்...” என பல நாட்கள் ஒத்திகை பார்த்து என்னை தயார் செய்து வைத்திருந்தேன்.

ஒத்திகைக்காக ஆசிரியர் ஒருவர் என்னை அழைத்து பேசச்சொன்னார். நான் பேச ஆரம்பித்ததுமே இடையில் நிறுத்திய அவர், “ஏலே.... ‘பராசக்தி’ வசனமாலே பேசுற... சரியாப்போச்சி... நம்ம ஹெட் மாஸ்டர் யாரு தெரியுமாலே? ‘பூணூல் சாமி’.  என் வேலையும் போச்சு; உன் உன் படிப்பும் போயிடும். போலே.. போயி வேற ஏதாவது மனப்பாடம் பண்ணிட்டு நாளைக்கு வா” என்று திருப்பி அனுப்பி விட்டார்.

இதை மனப்பாடம் பண்ணுவதற்குள்ேளயே நாக்கு தள்ளிப்போச்சு. இனி எங்கிருந்து இன்னொரு வசனத்தை மனப்பாடம் பண்றதுன்னு விட்டுவிட்டேன். இது நடந்தது 1978ம் ஆண்டு, நான் 7ம் வகுப்பு படிக்கும்போது. அப்போதே ‘பராசக்தி’ வெளியாகி 25 ஆண்டுகள் ஆகியிருந்தது. அப்படியும் ‘பராசக்தி’ அன்று மூட்டிய தீ அணைந்திருக்கவில்லை. இன்றும்கூட அணையவில்லை என்பதுதான் ஆச்சரியம்.

புராணங்களிலும், புனைவு வரலாற்றிலும் முழ்கிக் கிடந்த தமிழ் சினிமாவை சமூகத்தின் பக்கம் திருப்பிய மகத்தான சாதனைக்கு சொந்தக்காரர் கலைஞர். 90 திரைப்படங்களுக்கு மேலாக அவரது பங்களிப்பு சினிமாவில் இருந்திருக்கிறது.

முன்பெல்லாம் சினிமாவில் நடிகராக விரும்புபவர் சிவாஜியின் நடிப்பையும், கலைஞரின் வசனத்தையுமே தங்களின் பயிற்சிக்களமாகக் கொண்டிருந்தார்கள். சிவக்குமார், சத்யராஜ் போன்ற சிறந்த நடிகர்கள் பலரும் இன்றும் கூட மேடைகளில் கலைஞரின் வசனத்தைப் பேசி கைதட்டல் வாங்குவது நாம் காணக்கூடிய காட்சியாக இருக்கிறது.

அந்தக் காலத்தில் அதிகம் கேட்கப்பட்ட ஒலிச்சித்திரம் ‘பராசக்தி’யும், ‘மனோகரா’வும். எங்கள் ஊரில் கலைஞர்தாசன் என்ற தீவிர திமுக ெதாண்டர் ஒருவர் இருந்தார். அவரது இயற்பெயர் திருமலைக்குமரன். கலைஞர் மீதுள்ள அன்பால் கலைஞர்தாசன் என்று அவரே தனக்கு பெயர் வைத்துக் கொண்டார். அவர் ‘பராசக்தி’, ‘மனோகரா’ படங்களின் வசனத்தை முதலில் தொடங்கி கடைசி வரை மளமளவென சொல்வார். மற்ற கேரக்டர்கள் எப்படி பேசுவார்களோ அதே போன்ற தொனியிலும் பேசுவார்.

ஒரு முறை கலைஞர் தென்காசி ெபாதுக்கூட்டத்திற்கு வந்திருந்தார். குற்றாலத்தில் உள்ள அரசு விடுதியில் தங்கியிருந்தார். அதைக் கேள்விப்பட்ட கலைஞர்தாசன் அவர் தங்கியிருக்கும் விடுதிக்கு சென்றார். அங்கே குழுமியிருந்த திமுக முன்னணியினர் மத்தியில் மடமடவென்று கலைஞரின் வசனங்களை ஏற்ற இறக்கத்தோடு முழங்க ஆரம்பித்தார்.

வெளியே ஏதோ சத்தம் கேட்கிறதே என்று விசாரித்த கலைஞரிடம், இம்மாதிரி கலைஞர்தாசன் என்றொருவர் வந்து உங்கள் வசனங்களை அதிரடியாக சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார்கள். “கூப்பிடுய்யா அவரை உள்ளே...” என்றிருக்கிறார் கலைஞர். கலைஞர்தாசன் உள்ளே சென்றதும் கலைஞரின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிட்டுவிட்டு, ‘மனோகரா’ வசனத்தை பேசத் தொடங்கிவிட்டார்.

சிறிதுநேரம் அசையாமல் அமர்ந்து மெய்மறந்து கேட்ட கலைஞரிடம், உதவியாளர் நிகழ்ச்சிக்கு ெசல்லவேண்டிய நேரத்தை நினைவுபடுத்த, டக்கென்று உணர்வுநிலைக்கு வந்த கலைஞர், கலைஞர்தாசனை அழைத்து ஒரு பொன்னாடையைப் போர்த்தி விட்டு, கையில் இரண்டாயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்து விட்டுச் சொன்னார்.

“தம்பி, வசனத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களை உணர்ந்து, புரிந்து அதன்படி நடப்பதுதான் பெருமை. இப்படி பேசித் திரிவதால் உனக்கும் நன்மை இல்லை, யாருக்கும் நன்மை இல்லை.”அவர்தான் கலைஞர்!

(பிலிம் ஓட்டுவோம்)

பைம்பொழில் மீரான்