பிரம்மபுத்திரா



நண்பர்கள் ராஜ்ஜியம்!

தினேஷ்பாபுவும், முரளியும் நெருங்கிய நண்பர்கள். கடைசிவரை ஒற்றுமையாக இருந்து நட்புக்கு பெருமை சேர்க்கவேண்டும் என்பது லட்சியம். தினேஷ்பாபு உதயதாராவையும், முரளி அக்‌ஷிதாவையும் லவ்வுகிறார்கள். இதில் முரளி, அக்‌ஷிதா காதலில் மோதல் ஏற்பட்டு முரளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. நண்பனை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை பழி வாங்க புறப்படுகிறார் தினேஷ்பாபு. பிறகு என்ன நடந்தது, நண்பர்கள் லட்சியத்தின்படி நட்பின் பெருமையைப் போற்றினார்களா என்பது மீதிக்கதை.

தினேஷ்பாபு இயல்பான நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். நண்பனுக்காக உருகும் காட்சியில் நெகிழவைக்கிறார். புதுமுக நாயகனாக இருந்தாலும் ரொமான்ஸ் காட்சியில் பாஸ் மார்க் வாங்குகிறார். தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தினால் முன்னேறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. முரளியும் ஓ.கே.

உதயதாரா அழகான நடிப்பை வெளிப்படுத்துகிறார். அக்‌ஷிதா ஜில்லென்று வந்து ரசிகர்களைச் சூடேற்றுகிறார். டெல்லி கணேஷ், பாண்டு, வையாபுரி ஆகியோர் கிடைத்த வாய்ப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுனில் சேவியரின் இசையில் பாடல்களை ரசிக்கலாம். மோகனின் ஒளிப்பதிவில் காட்சிகள் படத்துக்கு கூடுதல் அழகை சேர்க்கிறது. கதையில் கவனம் செலுத்தியிருக்கும் இயக்குநர் திரைக்கதையில் கவனம் சிதறியிருப்பது பலவீனம். கமர்ஷியல் ஃபார்முலாவில் படத்தை முடித்து வைத்து சுபம் போடுகிறார் இயக்குநர் தாமஸ்.