பயணம் சாம்ஸ்டைட்டில்ஸ் டாக் 78

சினிமாவில் மிகக்குறுகிய காலத்தில் செஞ்சுரி அடித்திருப்பவர்களில் நானும் ஒருவன். என்னுடைய பயணத்தில் ராதாமோகன் இயக்கத்தில் வெளிவந்த ‘பயணம்’, ரொம்பவே ஸ்பெஷல். இந்த சாம்ஸுக்கு தனி அடையாளம் அந்தப் ‘பயணம்’ மூலம் அமைந்ததை மறக்கவே முடியாது.

திருச்சியில் பிறந்து, வளர்ந்து, படித்துக் கிழித்தேன். அடிப்படையில் ஆவரேஜ் மாணவனான நான் +2 வொக்கேஷனல் க்ரூப்பில் மாவட்டத்திலேயே முதல் மாணவனாக வந்தேன். அப்புறம், மெக்கானிக் பிரிவில் டிப்ளமோ. அப்போதெல்லாம் எனக்கு இலக்கு என்பதே இல்லை.

ஒருமுறை பொள்ளாச்சியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது கமல் சார் நடித்த ‘சகலகலா வல்லவன்’ ஷூட்டிங்  நடந்துக்கிட்டிருந்தது. நான் பார்த்த முதல் ஷூட்டிங் அதுதான். ஸ்கூல் படிக்கும்போது அண்ணன் நடத்திய நாடகத்தில் எனக்கு சேவகன் வேடம் (அவர்தான் ராஜா). அப்போது சினிமா ஆசையால் கருப்பு வெள்ளை பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்து எல்லா டைரக்டர்களுக்கும் போஸ்ட் பண்ணுவேன்.

என்னுடைய 25வது வயதில்தான் சினிமா ஆசை, வெறியாக மாறியது. வேலைக்குச் சென்றபோது கூட பணிபுரியும் நண்பர்களிடம் காமெடி செய்து காட்டுவேன். ஜெயப்பிரகாஷ் என்கிற நண்பர்தான், ‘நீ சினிமாவுக்குத்தான் லாயக்கு’ என்று ஆரம்பித்து வைத்தார். அப்போது எங்கள் நிறுவனம் சென்னையில் கிளை துவக்க, என்னுடைய சினிமா ஆசைக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டதாக நினைத்தேன்.

சென்னை வந்ததும் வேலை முடிந்ததும், மாலை வேளைகளில் சினிமா வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்தேன். ஒரு தனியார் சினிமா கல்லூரியில் சேர்ந்தேன். இயக்குநர் பாலகுருதான் நடிப்பு சொல்லிக் கொடுப்பார். அவர் மூலம் சீரியல் ஒன்றில் நடித்தேன்.

அந்தக் காலகட்டத்தில் பாலசந்தர் சார் ஆபீசுக்கு நூறு முறையாவது படையெடுத்திருப்பேன். ஒரே ஒரு முறைதான் தெய்வ தரிசனம் கிடைத்தது. அப்போது அவரிடம் உதவியாளராக இருந்த சரணை சந்திக்கச் சொன்னார். சரண், ‘காதல் மன்னன்’ படத்தை இயக்கும்போது நினைவு வைத்து என்னை அழைத்து வாய்ப்பு கொடுத்தார்.

கிரேஸி மோகன் சாரை சந்தித்ததுதான் எனக்கு திருப்புமுனை. அவருடைய தம்பி மாது பாலாஜியை தொல்லை கொடுத்து தொடர்ந்து வாய்ப்பு கேட்டுக்கொண்டே இருப்பேன். அவர்களது நாடகத்தில் போலீஸ் கேரக்டர் கொடுத்தார்கள். தொடர்ந்து கிரேஸி குழுவினரின் நாடக உலகத்திலேயே எனக்கு நல்ல அஸ்திவாரம் அமைந்தது. நாடகங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தபோதுதான் எனக்கு திருமணம் ஆனது. அப்போதும் என்னுடைய வேலையை விடவில்லை. மாதாமாதம் உறுதியான சம்பளம் கிடைத்துக் கொண்டிருந்தது இல்லையா?

திருமணத்துக்குப் பிறகு குடும்பச் செலவுகளுக்கு மேலும் உழைக்க வேண்டியிருந்தது. சீரியல்களில் பிஸியானேன். மகன், மகள் என்று குடும்பம் பெருக, ஓய்வில்லாமல் உழைக்க ஆரம்பித்தேன். என் மனைவிக்கு அப்போது டீச்சராக அரசு வேலை கிடைத்தது. “இனியும் நீங்க கஷ்டப்பட வேண்டாம். வேலையை ராஜினாமா செய்துட்டு, முழுக்க சினிமாவில் முயற்சி செய்யுங்க” என்று வாழ்த்தி அனுப்பினார். மனைவியே மந்திரி. அவர் சொல்லை மீறலாமா?

வடிவேலுவின் ‘இசை எங்கே இருந்து வருது?’ காமெடியில் நடித்ததால் எனக்கு ரசிகர்களிடம் நல்ல அறிமுகம் கிடைத்தது. தொடர்ந்து படவாய்ப்புகள் பெருக சம்பாத்தியமும் அதிகரித்தது. இப்போது குடும்பத்தை நிர்வாகம் செய்ய என் மனைவியும் வேலையை விட்டுவிட்டார். ஆனால், ஒரு காலத்தில் அவர் கொடுத்த தைரியத்தில்தான் நான் வேலையையே விட்டேன். இனி, நம் கணவரின் வருமானமே போதும் என்கிற நம்பிக்கையை அவருக்கு உருவாக்குமளவுக்கு நான் வளர்ந்தது எனக்கே மகிழ்ச்சியாக இருக்கிறது.

என்னுடைய இலக்கை நோக்கிய வெற்றிப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்திருக்கிறேன். ஜிம் கேரி மாதிரி சோலோ காமெடியனாக பேரெடுக்க வேண்டும் என்பதே என் இலக்கு. ஆத்ம திருப்திக்காக கல்வி சார்ந்த சேவைகளிலும் என்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமென்கிற எண்ணம் சமீபமாக தலை தூக்குகிறது.

இது தான் என் வாழ்க்கைப் பயணம்.ஊரு விட்டு ஊரு போகும் பயணமென்றால் அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர், இலங்கை என்று ஏராளமான உலக நாடுகளுக்கு போயிருக்கேன்.சினிமாவில் ரஜினி சாரோடு ‘எந்திரன்’, கமல் சாரோடு ‘தூங்காவனம்’ போன்ற படங்களில் நடித்தது என் வாழ்வின் முக்கியமான பாக்கியங்கள். அது போலவே என்னுடைய ரோல்மாடலான நாகேஷ் சார் முன்னிலையில் ஒரு டிராமாவில் நடித்ததையும் எப்பவுமே மறக்கமுடியாது.

நம் வாழ்க்கைப் பயணத்தில் எல்லாருமே ‘படி படி’ என்றுதான் திரும்பத் திரும்பச் சொல்கிறார்களே தவிர, எப்படி வாழ வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதில்லை. படிப்புதான் வாழ்வு என்று சிறுவயதில் நாம் நம்பிவிடுவதால், வாழ்க்கையின் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் நம்மில் பலரும் தோற்றுப் போகிறார்கள்.

என்னுடைய அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு நான் சொல்லிக் கொடுக்க விரும்பும் வாழ்க்கைப் பாடம் அன்புதான். அன்பு இருந்துவிட்டால் போதும், நம் வாழ்க்கை எனும் பயணம் அவ்வளவு இனிதாக அமையும். உங்களை நம்பி வரும் மனைவிக்கு நேரம் ஒதுக்கி அன்பு செலுத்த வேண்டும். குடும்பத் தேவைக்கு பணம் கொடுத்துவிட்டு கடமை முடிந்துவிட்டதாக நினைக்கக்கூடாது. நீங்கள் உங்கள் குடும்பத்தார் மீது செலுத்தும் அன்பை செயலிலும் காட்ட வேண்டும். என்னுடைய வெற்றிக்கு இதுதான் காரணம்.

எங்கள் பிள்ளைகளை படி படியென்று நாங்கள் கண்டிப்பு காட்டுவதில்லை. பிளஸ் டூ முடித்ததுமே என் மகனுக்கும் நடிப்பு ஆசை வந்தது. அவன் விருப்பப்படி கூத்துப்பட்டறையில் சேர்த்துவிட்டேன். எட்டாவது படிக்கும்போதே மகள் கிராபிக்ஸ் துறையில் பங்கெடுக்க ஆசைப்பட்டார். அவள் விருப்பப்படி கிராபிக்ஸ் படிக்க வைத்துள்ளோம்.

அவர்கள் லட்சியம் நிறைவேற சப்போர்ட் பண்ணியுள்ளோம். இருவரும் அவர்களின் ஆர்வத்துறையில் மட்டுமின்றி, எங்கள் திருப்திக்காக படிப்பையும் தொடர்கிறார்கள்.நண்பர்களே, சிந்தனை இல்லாமல் வாழ்வில் முன்னேற முடியாது. அத்தனைக்கும் ஆசைப்படுங்கள். எண்ணத்தில் தீவிரமாக இருங்கள். உங்கள் உழைப்பைக் கொடுங்கள். பயணத்தில் சாதிக்கலாம்.

தொகுப்பு : சுரேஷ்ராஜா

(தொடரும்)