காட்டுப்பய சார் இந்த காளி



தமிழ் தேசிய பிரச்சாரம்!

தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் என்ற குரலுக்கு வலு சேர்க்கும் படம். ஃபைனான்ஸ் கம்பெனி நடத்தும் ஒரு வட இந்தியருக்கு சொந்தமான வாகனங்கள் நள்ளிரவில் தீ வைத்துக் கொளுத்தப்படுகின்றன. விசாரணையில் ஒரு சைக்கோ வாகனங்களை எரிப்பதாகத் தெரியவருகிறது. அந்த சைக்கோ யார், எதற்காக வாகனங்களை எரிக்கிறார், காவல்துறை கண்டுபிடித்ததா போன்ற கேள்விகளுக்கான விடைதான் படம்.

சைக்கோவைக் கண்டுபிடிக்கும் காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கிறார் நாயகன் ஜெய்வந்த். முறுக்கு மீசை, ஜிம் பாடி என்று சகல விதத்திலும் கேரக்டருக்கு பெருமை சேர்க்கிறார். நாயகி ஐரா குல்பி ஐஸ் மாதிரி ஜில்லுன்னு இருக்கிறார். அவரைப் பற்றிய உண்மை தெரியும்போது வியப்பு.

ஃபைனான்சியராக நடித்திருக்கும் சி.வி.குமார், கமிஷனராக வரும் ‘ஆடுகளம்’ நரேன், ‘யோகி’ தேவராஜ், மூணாறு ரமேஷ் ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள். விஜய்சங்கர் இசையில், ‘லைட்டுங்கோ’, ‘சிவசம்போ’ உட்பட பாடல்கள் அனைத்தும் ஒன்ஸ்மோர் ரகம்.

இன்வெஸ்டிகேஷன் கதையில் விசாரணையை நடத்தவேண்டிய காவல்துறை அதைவிட்டுவிட்டு சமையல் செய்துகொண்டிருப்பது படத்துக்கான பின்னடைவு. கந்துவட்டி தொடங்கி கார்ப்பரேட் வட்டி வரை அனைத்தையும் சகட்டுமேனிக்கு வெளுத்துக்கட்டும்போது நம்மையும் அறியாமல் சபாஷ் போட முடிகிறது. ஆழமான கருத்தை மையமாக வைத்து ஜனரஞ்சகமான படம் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் யுரேகா. குட் ஜாப்!