காசு மேலே காசு



காசுக்காக காதல், கல்யாணம்!

பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் மயில்சாமி தன் மகனை வைத்து கல்யாணம் என்ற பெயரில் காசு பார்க்க ஆசைப்படுகிறார். மகனிடம் ஏரியாவில் இருக்கும் பணக்கார வீட்டுப் பெண்களை காதலிக்க ஐடியா கொடுக்கிறார். காதல் மலரும் வேளையில் நாயகியை ஒரு கும்பல் கடத்துகிறது. மயில்சாமியால் வருங்கால மருமகளை மீட்க முடிந்ததா, காதலர்களால் ஒன்று சேர முடிந்ததா என்பது கலகலப்பான மீதிக் கதை.

நாயகன் ஷாரூக் சில காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். அழகுப் பெண்ணாக வருகிறார் காயத்ரி. நடிப்பில் பாஸ் மார்க் கொடுக்கலாம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மயில்சாமி தன் வித்தையைக் காண்பித்திருக்கிறார். அவர் இல்லாவிட்டால் படம் பப்படமாகியிருக்கும். கோவை சரளா, கஞ்சா கருப்பு, ஜாங்கிரி மதுமிதா, ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன் ஆகியோர் ரவுண்ட் கட்டி அடிக்கிறார்கள்.

சுரேஷ் தேவனின் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகு. எல்லா கேரக்டர்களையும் அழகாக காட்டியிருக்கிறார். பாண்டியன் இசையில் பாடல்கள் ஓ.கே. நாட்டு நடப்பு எப்படி இருக்கிறது என்பதை பிச்சைக்காரர் ஒருவரின் கண்ணோட்டத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கே.எஸ்.பழனி. வழக்கமான கதைக்களமாக இருந்தாலும் இன்னும் வலுவாகக் கொடுத்திருக்கலாம்.