ஹீரோவான டாக்டர்...ஹீரோயினை கட்டிப் பிடிக்க வெட்கப்படுகிறார்!



தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு டாக்டர் தினேஷ்பாபு. மருத்துவ சேவை செய்துவரும் இவர், கலை மூலமாகவும் மக்களுக்கு சேவை செய்வதற்குரிய வாய்ப்பாக சினிமாவைப் பார்க்கிறாராம். ‘பிரம்ம புத்ரா’வைத் தயாரித்து ஹீரோவாகவும் என்ட்ரி கொடுக்கிறார்.

‘‘சொந்த ஊர் சேலம். ஐபிஎஸ் ஆகி காக்கி உடுப்பு உடுத்த வேண்டும் என்பதுதான் என் பள்ளிக்கூட நாட்களில் கனவாக இருந்தது. ஒரு கட்டத்தில் என்னால் ஐபிஎஸ் கனவை எட்டமுடியாது என்று தோன்றியதால் மருத்துவம் படித்தேன். இப்போது சென்னையில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறேன். ஜெனரல் செக்கப்புக்காக ஏராளமான முன்னணி இயக்குநர்கள் என்னுடைய மருத்துவமனைக்கு வந்து போவார்கள். அதன் மூலம் சினிமாக்காரர்களின் நட்பு கிடைத்தது.

அந்த தொடர்புகள் மூலம் எனக்குள் சினிமா ஆசை தலைதூக்க ஆரம்பித்தது. சமூகத்துக்கு பயன் தரக்கூடிய கருத்து ரீதியான கதை கிடைத்தால் நடிக்கலாம் என்று முடிவு எடுத்தபோது இயக்குநர் தாமஸ் சொன்ன கதைதான் ‘பிரம்மபுத்ரா’.

நட்புக்கு முக்கியத்துவம் உள்ள கதை இது. நட்புக்கு என்றுமே அழிவு இல்லை என்பதை சொல்லியிருக்கிறோம். நானும், இன்னொரு ஹீரோவான முரளியும் நல்ல நண்பர்கள். இரண்டு நண்பர்களும் நேசித்த வேலையில் சேர்ந்து நல்லா சம்பாதிக்கணும், விரும்பிய பெண்ணை கல்யாணம் பண்ணி மன நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் வாழணும்கிற கனவோடு விரும்பிய வேலையைத் தேடுகிறோம்.

வேலை தேடலுக்கிடையில் காதலும் வருகிறது. அதில் முரளியின் காதலில் பிரச்சினை வர, அந்தப் பிரச்சினையால் முரளி கோமா நிலைக்கு தள்ளப்படுகிறார். முரளி கோமா நிலைக்கு செல்ல காரணமானவரை நான் போட்டுத் தள்ளி விடுகிறேன். அத்தகைய சூழலில் நாங்கள் ஆசைப்பட்ட மாதிரி வேலையும், காதலியும் கிடைத்ததா இல்லையா என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

கிராமத்திலிருந்து சினிமா இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு வரும் இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஏற்கனவே ‘பாண்டி’, ‘மாயாண்டி குடும்பத்தார்’ போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்ததால் கேமரா பயம் இல்லாமல் நடிக்க முடிந்தது. ஒரு ரசிகனாக சினிமாவைப் பார்ப்பதற்கும் ஒரு நடிகனாக சினிமாவைப் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

ஒரு ரசிகனாக படம் நல்லா இருக்கு, நல்லா இல்லை என்று ஓரிரு வார்த்தையில் விமர்சனம் பண்ணிவிடலாம். ஆனால் சினிமாவுக்குள் வந்தபிறகுதான் சினிமாவின் கஷ்டங்கள் தெரிய வந்தது. அந்த வகையில் சின்ன படமோ, பெரிய படமோ அவர்களின் முயற்சியை பாராட்டியே ஆகவேண்டும்.

எனக்கு ஜோடியாக உதயதாரா பண்ணியிருக்கிறார். படிப்புல கெட்டியான நான் உதயதாராவை  கட்டிபிடிக்கும் போது கொஞ்சம் நெர்வஸானதை தவிர்க்க முடியவில்லை. இன்னொரு ஹீரோ,  ஹீரோயினாக முரளியும் அக்‌ஷதாவும் செய்திருக்கிறார்கள். தவிர கங்கேஷ், டெல்லி கணேஷ், டி.பி.கஜேந்திரன், பாண்டு, வையாபுரி, போண்டா மணி ஆகியோர் இருக்கிறார்கள். வில்லனாக ‘கும்கி’ தரணி பண்ணியிருக்கிறார்.

இந்தப் படத்தின் டெக்னீஷியன்கள் பங்களிப்பைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். ஒளிப்பதிவு மோகன். ‘சோக்காலி’ உள்பட சில படங்கள் பண்ணியிருக்கிறார். இசை சுனில் சேவியர். ‘அமுதே’ படம் பண்ணியவர். ஐந்து பாடல்கள் வெரைட்டியாகக் கொடுத்துள்ளார்.  இயக்குநர் தாமஸ் நல்ல திறமைசாலி. இந்தப் படத்துக்குப் பிறகு இண்டஸ்ட்ரியில் பெரிதும் பேசப்படுவார்.

இந்தப் படத்தை என்னுடைய டாக்டர் நண்பர் ராஜாவுடன் சேர்ந்து நானே தயாரித்துள்ளேன். ராஜா, டாக்டரேட் பட்டம் வாங்கியவர். சமீபத்தில் சிறந்த சமூக சேவைக்காக ஜனாதிபதியிடமிருந்து விருது வாங்கியுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்விச் சேவை செய்துவருகிறார். இப்போது கலைச் சேவைக்காக என்னுடன் இணைந்துள்ளார்.

தயாரிப்புப் பணி என்பது ரொம்பவே கஷ்டமான பணி. ஆனால், பழகப் பழக இதுவும் எளிதான வேலைதான் என்று புரிந்தது. என்னுடைய அடுத்த படத்திலும் சோஷியல் எலிமெண்ட்ஸ் நிச்சயமாக இருக்கும். நிறைய பேர் ஆழம் தெரியாமல் சினிமாவில் கால் விடுவார்கள். நான் ஆழம் அறிந்த பிறகுதான் கால் விட்டிருக்கேன்.

காவேரி பிரச்சினை எப்படி போராட்டம் நிறைந்ததாக உள்ளதோ, அப்படித்தான் இந்த ‘பிரம்மபுத்ரா’ படமும் பல போராட்டங்களைச் சந்தித்து வெளியாகவுள்ளது.சொசைட்டியில் எனக்கு என்று ஒரு நல்ல பெயர் இருப்பதால், அதைக் கெடுத்துக் கொள்கிற மாதிரி மது, புகை, ஆபாசம் போன்ற விஷயங்களுக்கு தடை போட்டுவிட்டேன்.

பொதுவாக பிரம்மாண்டமாக படம் எடுப்பார்கள். கதை குப்பையாக இருக்கும். இந்தப் படத்தின் பிரம்மாண்டமே கதைதான். ஆனால் மேக்கிங் சிம்பிளாக இருக்கும். நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்’’ என்று நம்பிக்கையோடு சொல்கிறார் டாக்டர் தினேஷ்பாபு.

- சுரேஷ்ராஜா