கோ போஸ் வெங்கட்டைட்டில்ஸ் டாக் 74

‘கோ’ என்றால் தலைவன், அரசன். தலைவன் குடியிருக்கும் இல்லமே ‘கோ’ + ‘இல்’ என்று ‘கோயில்’ ஆனது. கடவுளரையும் தலைவனாகத்தானே நம் முன்னோர் கருதியிருக்கிறார்கள்?எனக்கு சொந்த ஊர் அறந்தாங்கி. ஊரில் இருந்து சென்னைக்கு வரும்போதே ‘கோ’ ஆக, அதாவது ‘கிங்’ ஆக வாழவேண்டும் என்கிற ஆசையோடுதான் வந்தேன்.

ஒருவன் எவ்வளவு பெரிய ஏழையாக இருந்தாலும் மனதளவில் கிங்காக இருந்தால்தான் அவன் இந்த சமுதாயத்தில் எதிர்நீச்சல் போடமுடியும். ஒருவனுடைய தோல்வி எங்கு ஆரம்பிக்கிறது என்றால் அடுத்தவங்களைப் பார்த்து பயப்படும்போதுதான். பய உணர்வு தோன்றும்போதே அவனுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை அவனை ‘உன்னால் முடியாது’ என்று வீட்டுக்கு அனுப்பிவைக்கிறது.

மனதளவில் உங்களை ஒரு ராஜாவாக எண்ணிப் பார்த்து ‘என்னால் ஜெயிக்கமுடியும்’ என்று அணுகும்போது உங்களால் எளிதில் எடுத்த காரியத்தில் வெற்றி பெறமுடியும். என் வெற்றிக்கு அப்படித்தான் நான் வரையறை வைத்துள்ளேன்.
உலகத்தில் பல நூறு கோடிப் பேர் இருக்கிறார்கள் என்றால் அதில் ‘எனக்கு எதன்மீதும் பற்றுதல் இல்லை அல்லது ஆசையே இல்லை’ என்று சொல்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.  அந்த ஒருவன் ஏன் அந்தப் போட்டியில் கலந்துகொள்ளவில்லை என்றால் ‘இது கிடைக்காது, இது நடக்காது’ என்று பின்வாங்கும் செயலால்தான்.

நான் எங்க ஊர்ல இருந்து வரும்போது என்னால் நடிகனாக முடியாது என்று நெகடிவ்வாக சிந்திக்க முடியவில்லை. காரணம், ‘என்னைப்போன்ற உருவம், என்னுடைய அழுத்தமான குரல் வேண்டும் என்றால் அதற்கு என்னைவிட வேறு யார் பொருத்தமாக இருக்கமுடியும்’ என்ற நம்பிக்கையோடுதான் சென்னைக்கு வந்தேன்.

எனக்குள் எப்போதும் I am the King என்ற மைண்ட் செட் ஓடிக்கொண்டே இருக்கும். அப்படி நினைத்து செயல்பட்டதால்தான் என்னால் இந்த உயரத்தை தொட முடிந்தது. நடிகனான பிறகு பிரபல கட்சியில் பொறுப்புக்கு வர விரும்பினேன். உனக்கு என்ன அவ்வளவு செல்வாக்கு இருக்கா? நீ என்ன குஷ்பூவா இல்லை சிரிப்பு நடிகரா? என்று உடனிருந்தவர்கள் கிண்டலும் கேலியுமாக கலாய்த்தார்கள்.

ஆனால் என்னுடைய முயற்சியிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து கழகப் பணிகளைச் செய்து இப்போது மாவட்ட அளவில் நல்ல பொறுப்பில் இருக்கிறேன். ஆனால் என்னை மட்டம் தட்டிய அல்லது எதிர்மறையாகப் பேசிய என் நண்பர்கள் கட்சியிலும் இல்லை, பொறுப்பிலும் இல்லை.

சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, நான் ஜெயிக்க காரணம்... எனக்குள் இருந்த அந்த ‘கிங்’ மனப்பான்மைதான். நான் அரசியலுக்குப் போனால் கண்டிப்பாக ஜெயிக்கமுடியும் என்ற கான்பிடன்ஸ் இருந்தது.

நடிகன், அரசியல்வாதி என்ற அடையாளங்களோடு ரியல் எஸ்டேட் பிசினஸும் கடந்த பத்து ஆண்டுகாலமாக செய்து வருகிறேன். முன்பு மாதிரியே ‘எதுக்கு உனக்கு வேண்டாத வேலை. ரியல் எஸ்டேட் பிசினஸ் படுத்துவிட்டது. ஒழுங்கா நடிச்சி நாலு காசு சேர்க்கிற வழியை பாரு’ என்று அட்வைஸ் என்ற பெயரில் டிஸ்கரேஜ் பண்ணினார்கள்.

ஆனால் பத்து வருடத்தில் எனக்கு பலவித அனுபவம் கிடைத்தது. அதையே மூலதனமாக்கி இப்போது வெற்றிகரமாக ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணிக் கொண்டுதான் இருக்கிறேன். சமீபத்துல சென்னை ஏர்போர்ட் பின்புறத்துல 48 ஏக்கர்ல ரியல் எஸ்டேட் ஆரம்பித்துள்ளேன். இவ்வளவும் நான் பண்ணுவதற்குக் காரணம் ‘எனக்கு நான்தான் ராஜா’ என்ற மனநிலைதான். எனக்கு போட்டியாக யாரையும் நினைப்பதில்லை.

ஆனால் இந்தத் துறையில் பல ஜாம்பவான்கள் இருந்தாலும் அவர்களைப் பார்த்து அச்சப்படமாட்டேன். அப்படி அச்சப்பட ஆரம்பித்தோம் என்றால் அச்சாணி கழல ஆரம்பித்துவிடும். எல்லாரும் சமம் என்ற பார்வையில்தான் பிசினஸைப் பார்க்கிறேன். வளர்ந்த அல்லது புகழ்பெற்ற பிசினஸ்மேனின் இப்போதைய நிலையைப் பார்க்கும்போது மலை மாதிரி பிரம்மாண்டமா தெரிவார்கள்.

ஆனால் அவர்களும் ஒரு காலத்தில் தெருத் தெருவாக சில நூறு ரூபாயில் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணியவர்கள் என்று நினைக்கும் போது உங்களால் ஜெயிக்கமுடியும் என்ற நம்பிக்கை கிடைக்கும். அன்றும் சரி, இன்றும் சரி எனக்குள் தாழ்வு மனப்பான்மையை வரவும்விடமாட்டேன், வளரவும் விடமாட்டேன். அது இருந்திருந்தால் இந்த போஸ் வெங்கட் யார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். முதல் முறையாக  ரியல் எஸ்டேட் பிசினஸுக்காக ஆபீஸ் ஆரம்பித்தேன். என்னுடன் இருந்தவர்கள் அதைத் தடுத்தார்கள். அப்போது ஒரு சாய்பாபா போட்டோவை ப்ரேம் போட்டு என் பூஜை அறையில் மாட்டிவைத்து ‘ஒரு நாள் நான் ஜெயிக்கும்போது உங்க போட்டோ கீழே நான் சீக்கிரத்துல உட்காருவேன்’ என்று பாபா போட்டோ முன்பு சபதம் எடுத்து கடுமையாக உழைத்தேன்.

அதன் பிறகு ஆறாவது மாதத்தில் பழைய ஆபீஸைவிட பல மடங்கு பெரியளவில் ஆபீஸ் திறந்து பிசினஸ் பண்ணி வருகிறேன். அன்று எனக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் யாரும் இப்போது இந்தத் தொழிலில் இல்லை. தாழ்வுமனப்பான்மையோ,தோல்வி அடைந்துவிட்டோம் என்ற எண்ணமோ, முடியாது என்ற எதிர்மறையான சிந்தனையோ இருந்திருந்தால் இது சாத்தியம் இல்லை.

எனக்கு இன்ஸ்பிரேஷனாக நிறைய கிங்ஸ் இருக்கிறார்கள். அதில் மறக்கமுடியாத கிங் பீட்டர் சார். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பத்தில் ரோட்டோரத்தில் இஸ்திரிக்கடை நடத்தி வந்தவர். இன்று பல என்ஜினியரிங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, ரியல் எஸ்டேட் என்று கொடிகட்டிப் பறந்துக்கொண்டிருக்கிறார்.

ரியல் எஸ்டேட்டில் அவர்தான் எனக்கு வழிகாட்டி. உழைப்பு மட்டுமே என்னுடைய வெற்றிக்குக் காரணமாக இருந்தது.வாழ்க்கையில் ‘முடியாது’ என்ற ஒன்று கிடையாது. சினிமாவில் நுழைந்த பிறகு டைரக்‌ஷன் மட்டும்தான் பண்ணவில்லை. அதையும் சீக்கிரத்தில் பண்ணிவிடுவேன். மத்தபடி நான் ஆசைப்பட்ட எல்லா விஷயத்தையும் அடைந்துவிட்டேன்.

32 வயசுலதான் எனக்கு கிரிக்கெட் அறிமுகமானது. டென்னிஸ் பந்து வைத்து தெருவில் விளையாட ஆரம்பித்தேன். CCL போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற லட்சியத்தில் கிரிக்கெட் பந்தில் பிராக்டீஸ் பண்ணினேன். ஆனால் என்னை டீம்ல சேர்த்துக் கொள்ளவில்லை.

மூணு வருஷம் CCLக்கு  எதிரா பவுலிங் பண்ணி அவங்களை நம்ப வைத்து டீம்ல இடம் பிடித்தேன். இந்தியன் கிரிக்கெட் டீம்ல இருக்கிறவங்க இந்தியாவில் உள்ள அனைத்து ஸ்டேடியங்களிலும் விளையாடினார்களா, இல்லையா என்று தெரியாது. ஆனால் எல்லா ஸ்டேடியத்திலும் நான் விளையாடியிருக்கிறேன்.

ஜார்கண்ட்ல உள்ள டோனி ஸ்டேடியத்திலும் விளையாடியிருக்கிறேன். அந்த வகையில் இந்தியாவில் உள்ள அனைத்து இண்டர்நேஷனல் ஸ்டேடியத்திலும் விளையாடியுள்ளேன். அதுமட்டுமில்ல, கோலிவுட் டீம்ல இடம்பிடிச்சவங்க எல்லாரும் ஹீரோவா நடித்தவர்கள். அந்த டீம்ல நான் மட்டுமே கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்.

தாழ்வு மனப்பான்மைக்கு இடம் கொடுத்திருந்தால் நான் கிரிக்கெட் விளையாடி இருக்க முடியாது. எல்லோரும் நான் டீம்ல இடம் பிடிச்சி ஆல் ரவுண்டராக அசத்தியதை அதிர்ச்சியாகப் பார்த்தார்கள். 32 வயசுவரை கிரிக்கெட்டே விளையாடத் தெரியாமல் இருந்த எனக்கு இப்போது சொந்தமாக கிரிக்கெட் கிரவுண்ட், டீம், அகாடமி இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு செயலில் இறங்கினாலும் அதன் கடைசி எல்லை வரை போய் பார்ப்பேன்.  

நான் கிங்காக வலம் வருவதற்கு என்னுடைய எண்ணங்களுக்குத்தான் மிக முக்கிய பங்கு இருக்கிறது. எப்போதும் என்னுடன் இருக்கிறவர்கள் உயர்வு அடைய வேண்டும் என்று எண்ணுவேன். அவர்களுடைய வளர்ச்சியைப் பார்த்து பொறமைப்படவும்மாட்டேன். அப்படி நான் நினைப்பதில் இரண்டு அட்வான்ட்டேஜ் உண்டு.

முதல் விஷயம் என்னுடன் இருப்பவர்கள் வாழ்க்கையில் உயரும்போது ‘கஷ்டம்’ என்று சொல்லி என்னிடம் வரமாட்டார்கள். அடுத்து எனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் அவர்களிடம் உதவி கேட்கமுடியும். உங்களால் அடுத்தவர் கிங்காக மாறுகிறார். என்றால் நீங்கள்தான் கிங் ஆஃப் தி கிங்.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)