ஹன்சிகாவை சமாளிப்பாரா அதர்வா?



ஜம்மென்று உடம்பை முறுக்கேற்றி வைத்திருக்கிறார் அதர்வா. கம்பீரமான காக்கி உடுப்பில் தோன்றுவதற்கு அவருக்கும் ஆசை இருக்காதா என்ன? அதர்வாவும் போலீஸ் ஆகிவிட்டார். ரயில் சண்டை, பரபர சேஸிங் என்று ஃபுல் ஆக்‌ஷனுக்கு ரெடியாகியிருக்கிறார். ஜோடி தளதள ஹன்சிகா. காமெடிக்கு யோகிபாபு என்று செம ஜமா கூட்டணியோடு ‘100’ படத்தில் களமிறங்கியிருக்கிறார்.

ஏற்கனவே ஜி.வி.பிரகாஷை வைத்து ‘டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ வெற்றிப் படங்களை இயக்கிய சாம் ஆண்டன், இம்முறை அதர்வாவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.அடுத்தடுத்து காமெடிப் படங்களை இயக்கிக் கொண்டிருந்தவர், ஆக்‌ஷனுக்கு தாவிவிட்டாரே என்கிற கேள்வியோடு சாம் ஆண்டன் முன்பாக நின்றோம்.

‘‘என்னோட முதல் இரண்டு படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தேன். அடுத்து வேறு புதுசா ஒரு ஜானர் யோசிச்சப்போ, அழகான ஒரு ஆக்‌ஷன் நாட் ஒண்ணு அகப்பட்டுச்சு. முழு ஸ்கிரிப்ட்டையும் எழுதின பிறகு, அதர்வா  நூறு சதவிகிதம் பொருத்தமாக வந்து நின்னார். இதுவரைக்கும் அவர் போலீஸ் கதைகள் பண்ணினதில்ல. ஃப்ரெஷ் போலீஸாகத் தெரிஞ்சார்.

‘அவுரா சினிமாஸ்’ மகேஷ் என்னோட காலேஜ் சீனியர். ஸோ, அவர்கிட்ட கதையை சொன்னேன். அவங்களுக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. இதோட ஃபர்ஸ்ட் லுக் வெளியான அன்னிக்கு, ‘டைட்டில் நம்பர்ல இருக்கே..?’னு பலரும் ஆச்சரியமா கேட்டாங்க. இது நூறு சதவிகிதம் கதைக்கு பொருத்தமான ஒரு டைட்டிலா எங்க எல்லாருக்குமே தோணுச்சு.’’

“தமிழில் ஏகத்துக்கும் போலீஸ் ஸ்டோரி வந்தாச்சு. நீங்க புதுசா என்ன பண்ணிடப் போறீங்க?”

“இது வழக்கமான போலீஸ் கதை இல்லை. ஒரு நாள் மிட்நைட்ல ஏர்போர்ட்ல இருந்து கார்ல என் வீட்டுக்கு திரும்பிட்டிருந்தேன். ஒரு சிக்னல்ல போலீஸ்காரங்க வழிமறிச்சாங்க. அந்த இன்ஸிடென்ட்ல தோணின கதை இது. நம்ம எல்லாருக்குமே போலீஸ் கண்ட்ரோல் ரூம் பத்தி தெரிஞ்சிருக்கும். நம்மில் பலரும் ஒருதடவையாவது அதற்கு போன் செய்திருப்போம். அதனாலதான் இப்படி ஒரு டைட்டில் வச்சோம். ஹீரோ அதர்வா, ஊர்ல சும்மா ஜாலியா சுத்திட்டு திரியுற பையன்.

அவருக்கு ‘சிங்கம்’ சூர்யா மாதிரி போலீஸ் ஆகணும்னு ஆசை. ஆனால், டிபார்ட்மென்ட்ல  அவரை கண்ட்ரோல் ரூம்ல டூட்டி பார்க்கச் சொல்லிடுறாங்க. அதிலிருந்து கதை நூறு கிலோமீட்டர் ஸ்பீடுல வேகம் எடுக்குது... 

ஆக்‌ஷனும் காமெடியுமா ட்ராவல் ஆகுது. அதர்வாவோட இதுவரை நடிக்காத ஹீரோயின்கள் யாரெல்லாம்னு  ஒரு லிஸ்ட் எடுத்தோம். முதல் ஆளாக ஹன்சிகா வந்து நின்னாங்க.  அப்புறம் ராதாரவி சார், யோகிபாபு,  யூடியூப் ‘எருமசாணி’ல வந்த விஜய்- ஹரிஜா... இவங்க தவிர நிறைய புதுமுகங்களும் இருக்காங்க.”
“டெக்னிக்கல் டீம்?”

“என் முதல் படத்துல இருந்து என்னோட பயணமாகும் கிருஷ்ணன்வசந்த் ஒளிப்பதிவும் படத்துக்கு ப்ளஸ். மொத்த டாக்கி போர்ஷனையும் 24 நாட்கள்ல முடிக்க அவரோட வேகமும் ஒரு காரணம். ‘தீரன் அதிகாரம் ஒன்று’க்குப் பிறகு திலிப் சுப்பராயன் மாஸ்டரோட ஸ்டன்ட் இதிலும் பலம். ஆக்‌ஷன் சீக்குவென்ஸிற்காக 18 நாட்கள் உழைச்சிருக்கோம். அதர்வாவை பென்ட் நிமிர்த்தியிருக்கார்.

பாடல்களும் நல்லா வந்திருக்கு. ‘விக்ரம் வேதா’வுக்கு அடுத்து சாம்.எஸ் மியூசிக்குக்கு கமிட் ஆன படம் இது. அதே மாதிரி கமர்ஷியலும், ஆர்ட் வெர்ஷனுமா பிரமாதமாக இசையமைச்சிருக்கார். இன்னும் ஒரு பாடல் ஷூட் மீதி இருக்கு. அதை ஃபாரின்ல ஷூட் பண்ற ப்ளான் இருக்கு.”

“அதர்வாவுக்கு ஹன்சிகா பொருத்தமாக இருப்பாங்களா?”

“நிறைய பேர் இதே கேள்வியைக் கேட்டுக்கிட்டே இருக்காங்க. ஹன்சிகா கொஞ்சம் சீனியர். அவர் அதர்வாவுக்கு ஜோடின்னா பொருத்தம் சரியாக இருக்குமான்னு ஒரு சின்ன டவுட் எனக்கே இருந்தது நிஜம்தான். ஆனா, ஹன்சிகாவை நேர்ல சந்திச்சதும், டவுட் காணாமல் போயிடுச்சு. அவ்ளோ ஸ்லிம்மா, க்யூட்டா.... ஃபிட்டா வந்து நின்னாங்க. எங்க டவுட் க்ளியர் ஆகிடுச்சு.  அதர்வா, ஒரு டைரக்டர் ஆர்ட்டிஸ்ட். எது சொன்னாலும், நம்மள முழுசா நம்பி, கேள்வியே கேட்காமல் நடிச்சுக் கொடுப்பார்.

அதேமாதிரி ஹன்சிகா. இதுல கால்சென்டர்ல ஒர்க் பண்ற பொண்ணு. ஆஸ்பிட்டல்ல ஒரு சேஸிங்ல ரிஸ்க் எடுத்து நடிச்சாங்க. இந்த சம்மர் வெயில்ல, டேக் ஓகே ஆகிறவரை வெயிலை பொருட்படுத்தாமல் நடிச்சுக் கொடுத்தாங்க. இப்ப, தமிழ் நல்லா பேசுறது ப்ளஸ்ஸா இருந்தது. அதர்வா- ஹன்சிகா காம்பினேஷன் இதுல நல்லா ஒர்க் அவுட் ஆகியிருக்குனு நீங்களும் சொல்வீங்க.”

“யோகிபாபுவோடு உங்க கெமிஸ்ட்ரி எப்பவுமே பக்காதான்....”“ஆமாம். யோகிபாபு ரொம்ப ஃப்ரண்ட்லி. இன்னிக்கு டிரெண்டுக்கு காமெடிக்கு இருக்கற ஒரே ஆள் அவர்தான். எங்க படத்தோட ஆரம்பத்துல அவர் கொடுத்த கால்ஷீட்டை பயன்படுத்த முடியாமப் போச்சு.

ஆனா, மறுபடியும் நாங்க ஷூட் கிளம்பும்போது, கேட்ட தேதிக்கு வந்து நடிச்சுக் கொடுத்தார். இயல்பாகவே காமெடி ரசனை உள்ள ஆளு. நிறைய டயலாக்ல அவரோட பங்கு இருக்கும். ஆனா, டைரக்டர் தான் பண்ணினார்னு கிரெடிட்ஸ் கொடுப்பார். ராதாரவி சார் வர்ற சீன்கள்ல காமெடியும், சீரியஸும் களைகட்டும்.”

“உங்க ஃபேவரைட் ஹீரோ ஜி.வி.பிரகாஷ் எப்படி இருக்காரு?”

“நிஜமாகவே அவருக்கு நான் டியர் ஃப்ரெண்ட்தான். என் முதல் ரெண்டு படத்தோட ஹீரோ. மூணாவது படத்துல எங்க ரெண்டு பேருக்குமே சேஞ்ஜ் தேவைப்பட்டுச்சு. அவர்கிட்ட பிடிச்ச விஷயம், டைமிங். அவ்வளவு துல்லியமாக ஃபாலோ பண்ணுவார். மறுபடியும் எங்க காம்பினேஷன் வர சான்ஸ் அதிகமாகவே இருக்கு. காரணம், எங்க ரெண்டு பேர் ரேப்போவுமே வேற லெவல்.”

- மை.பாரதிராஜா