புல்லட்டு.. ஹெல்மெட்டு! அவரா இப்படி?



சமூகவலைத்தளங்கள் சாமானிய மக்களுக்கு பெரிய வரப்பிரசாதம்தான். அதேநேரம் பல குடும்பங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வில்லனாகவும் மாறி இருக்கிறது. குறிப்பாக பல சினிமா பிரபலங்கள், சாதாரண குடும்பப் பெண்களை தூண்டில் போட்டு தூக்கும் கொடுமையான களமாகவும் மாறிக் கொண்டிருக்கிறது.

பேரும், அடையாளமும் வேண்டாம். அந்த ஹீரோவுக்கு இண்டஸ்ட்ரியில் மட்டுமின்றி, சமூகத்திலும் ரொம்பவே நல்ல பெயர்.ஆனால் -சமூகவலைத்தளங்களில் வலைவீசி மீன் பிடிப்பதையே சமீபமாக முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.

அவரது குறி, நடுத்தர வர்க்கத்து இளம் பெண்கள். விஐபி என்கிற முறையில் இவருக்கு ஃப்ரண்ட் ரெக்வஸ்ட் கொடுப்பவர்களின் ஃப்ரண்ட் ரெக்வஸ்ட்டை உடனே ஓக்கே செய்ய மாட்டாராம். ஆற அமர பொறுமையாக தனக்கு ஃப்ரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்த பெண்ணை நன்கு அலசுவாராம்.

திடீரென ஒரு நாள் ரெக்வஸ்ட்டை அக்செப்ட் செய்வாராம். இவ்வளவு பெரிய ஹீரோ, நம்மை நண்பராக ஏற்றுக் கொண்டாரே என்கிற திக்குமுக்கு மகிழ்ச்சியில் சம்பந்தப்பட்ட பெண் திணறிக் கொண்டிருக்கும் சூழலில், அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சியாக மெசஞ்சர், வாட்ஸப்பில் ‘நல்லவிதமான’ ஃபார்வேர்ட் மெசேஜ்களை அள்ளித் தெளிப்பாராம். ‘குட்மார்னிங்’, ‘குட்நைட்’ மாதிரி மெசேஜ்களை அனுப்ப தினமும் மறக்க மாட்டாராம்.

ஓரளவுக்கு ஃப்ரண்ட்ஷிப் ஸ்டெடியானதும், சில எக்ஸ்க்ளூஸிவ் சினிமா கிசுகிசுக்களை அவிழ்த்து விடுவாராம். “யாரிடமும் சொல்லிடாதீங்க. நீங்க எனக்கு ரொம்ப குளோஸ் என்பதால் உங்க கிட்டே மட்டும்தான் சொல்றேன்” என்று அவர் சொல்லும்போது, நமக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறாரே என்று சம்பந்தப்பட்ட பெண் குஷியாகி விடுவார்.

திடீரென்று ஒருநாள், “இன்னைக்கு ஷூட்டிங் இல்லை. ரொம்ப போர் அடிக்குது. ஒரு திரில்லிங் பைக் ரைடு போலாமா?” என்று கேட்பாராம்.
அவ்வளவு பெரிய ஹீரோவே கேட்கும்போது மறக்கமுடியுமா?மீட்டிங் பாயிண்டில் புல்லட், முகம் மறைக்கும் ஹெல்மெட்டோடு காத்திருப்பாராம் ஹீரோ.

ஒருமுறை ரைடுக்கு சம்மதித்துவிட்டால் முடிந்தது ஜோலி. அடுத்த மீன் மாட்டும்வரை, ஏற்கனவே மாட்டிய மீன் அடிக்கடி ‘பைக் ரைடு’க்கு போயாக வேண்டியதுதான். வீட்டில் வரிசையாக ஃபாரின் கார்களை நிறுத்தியிருந்தாலும் மீன் பிடிக்க போகும்போது பைக்கை மட்டும்தான் பயன்படுத்துவாராம் ஹீரோ. கல்லூரியில் படிக்கும் பெண்கள், திருமணமான பெண்கள் என்று வயது வித்தியாசமே இல்லையாம்.

சம்பந்தப்பட்ட பெண்களின் குடும்பத்துக்கு விஷயம் தெரிந்துவிட்டால், அப்படியே அந்த கனெக்‌ஷனை காதும் காதும் வைத்தமாதிரி கட் செய்துவிடுவாராம். சினிமா சான்ஸ் கேட்டு வருபவர்களும்கூட ஹீரோவின் திரில் ரைடுக்கு பலியாவதும் உண்டு.

பெரிதாக கிசுகிசுக்களில் அடிபடாத அந்த ஹீரோவுக்கு இப்படியொரு அதிர்ச்சியான ‘கோஸ்ட் ரைடர்’ முகம் இருப்பதுதான் இப்போது இண்டஸ்ட்ரியில் ஹாட் டாக்.‘எந்தப் புத்தில் எந்தப் பாம்பு இருக்கும்னு யாராலேயும் சொல்ல முடியாது’ என்று நமக்கு தகவல் கொடுத்த சோர்ஸ், முத்தாய்ப்பாக விஷயத்தை முடித்தார்.

- பாண்டிபஜார் பரமசிவம்