நடனத்துக்கு சிறப்பு சேர்க்கும் லக்ஷ்மி!



‘தேவி’ படத்தின் அதிரடி ஹிட்டுக்குப் பிறகு மீண்டும் பிரபுதேவா, இயக்குநர் விஜய் இணைந்திருக்கும் படம் ‘லக்ஷ்மி’. நடனத்தை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தைப் பற்றி அதன் இயக்குநர் ஏ.எல்.விஜய்யிடம் கேட்டோம். ‘‘தமிழ் சினிமா நீண்ட காலத்துக்குப் பிறகு நடனம் பற்றிய ஒரு திரைப்படத்தைப் பார்க்க இருக்கிறது. ‘லக்ஷ்மி’ ஒரு மிகப்பெரிய நடனத் திருவிழாவாக வரவேற்கப்படும்.

நடனம் என்பது கலையின் மிகச்சிறந்த வெளிப்பாடு. பண்டை நாகரீகம் தொட்டு நமக்கும் நடனத்துக்குமான தொடர்புகள் அதிகம். நடனத்தை மையமாக வைத்து உருவாகும் இதில் முதல் சாய்ஸ் மற்றும் கடைசி சாய்ஸாக பிரபுதேவா மட்டுமே இருந்தார். அவரைத் தவிர வேறு யார் சர்வதேசத் தரத்துக்கு நடனத்தை வெளிப்படுத்த முடியும்.

இது நடனத்தை மட்டுமே சுவாசிக்கும் ஒரு குருவுக்கும், நடனத்தை சுவாசிக்கத் துடிக்கும் ஒரு சிஷ்யைக்கும் இடையேயான உண்மையான பிணைப்பைக் காட்டும் படம். நடனக்கலையில் இருக்கும் அனைத்து அம்சங்களையும் முடிந்த வரை முழுமையாகக் கொடுக்க முயற்சித்துள்ளேன். சமீபத்தில் வெளியான டிரைலருக்கு ஆடியன்ஸ் மத்தியில் செம ரெஸ்பான்ஸ். படத்தில் என்ன இருக்கும் என்ற ஒரு ஆவலை ட்ரைலர் ரசிகர்களுக்கு உருவாக்கி இருக்கும் என நம்புகிறேன்.

இந்தப் படத்தின் மெயின் பில்லர் பிரபுதேவா மட்டுமே. நடனத்தையும் நடிப்பையும் கலந்துகட்டி அடித்திருக்கிறார். அவருடைய கேரக்டரில் மிகச்சிறந்த உழைப்பு என்று சொல்லுமளவுக்கு மிகச்சிறந்த பங்களிப்பை இந்தப் படத்தில் வழங்கியுள்ளார்.ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்திருக்கிறார். பேபி டித்யா சூப்பர் சென்சேஷனல் சிஷ்யையாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஸ்கிரீன் பிரசன்டேஷன் அற்புதமாக இருக்கும். இந்தப்படம் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்சுக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது.

ஏன்னா, நடன அசைவுகளுக்கு ஏற்ற இசையைக் கொடுக்க வேண்டும். பிரபுதேவாவின் நடனத்திற்கு ஏற்றவாறு இசையமைத்திருப்பது ஹைலைட்டாக இருக்கும். மதன் கார்க்கி பாடல்கள் கதையையொட்டி இருக்கும்.

என்னுடைய ஃபேவரைட் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா நடனக் காட்சிகளை பிரமாதமாகப் படமாக்கியுள்ளார். எடிட்டர் ஆண்டனியின் கட்ஸ் பேசப்படும். இந்தப் படத்தின் நடனக் காட்சிகள் சர்வதேசத் தரத்திலும், எமோஷன்ஸ் இந்தியத் தரத்திலும் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது’’ என்று நம்பிக்கையோடு பேசுகிறார் விஜய்.

- எஸ்