கபடியும், கிரிக்கெட்டும் தான் படத்தோட கதை!தமிழில் கடந்த பத்தாண்டுகளாகவே ஸ்போர்ட்ஸ் சினிமா என்கிற வகைக்கு நல்ல மரியாதை இருக்கிறது. குறிப்பாக வெங்கட்பிரபு இயக்கிய ‘சென்னை - 600028’ படத்துக்குப் பிறகு இந்தப் போக்கு அதிகரித்திருக்கிறது.கால்பந்தை மையமாக வைத்து ‘லீ’, கபடிப் போட்டி அணியின் கதையான ‘வெண்ணிலா கபடிக்குழு’, கிரிக்கெட் அரசியலைப் பேசிய ‘ஜீவா’, பிரகாஷ்ராஜின் ‘தோனி’ என்று நிறைய படங்களை உதாரணம் சொல்லலாம். இந்த வரிசையில் இணையவிருக்கிறது ‘தோனி கபடிக்குழு’.

சின்னத்திரையில் பிரபலமாகியிருக்கும் அபிலாஷ், இந்தப் படத்தின் ஹீரோ. ஏற்கனவே இவர் ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தில் வில்லனாக சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர்தான். ‘பட்டம் போலே’ என்கிற மலையாளப் படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்த லீமாவுக்கு லீட் ரோல். இவர்கள் மட்டுமின்றி தெனாலி, சரண்யா, செந்தில், புகழ், விஜித், பிரபாகரன், ரிஷி,நவீன் சங்கர், சுஜின், பீட்டர் ஆகியோர் நடிக்கிறார்கள். இசை ரோஷன் ஜோசப். பாடல்கள் ராசா. ஒளிப்பதிவு வெங்கடேஷ். இயக்கம் பி.ஐயப்பன். இவர் இயக்குநர் ஏ.வெங்கடேஷின் சீடன்.

“படத்தோட டைட்டிலே எங்க கதையை சொல்லிடும். ‘தோனி கபடிக்குழு’ங்கிற தலைப்பைக் கேட்டதுமே கதை எதைப் பற்றியதுன்னு யூகிச்சிருப்பீங்க. சினிமாவைப் பொறுத்தவரைக்கும் எப்பவுமே நல்ல கதைதான் கதாநாயகன். இந்தப் படத்தின் கதை கபடி மற்றும் கிரிக்கெட் விளையாட்டை வெறித்தனமாக நேசிக்கும் இரண்டு கதாநாயகர்களின் முரணைப் பேசுகிறது” என்கிறார் ஹீரோ அபிலாஷ்.

“இந்தக் கதை முழுக்க முழுக்க கற்பனைக் கதைன்னு சொல்லிட முடியாது. இந்தக் கதைக்குள்ளே என் வாழ்வில் சந்தித்த சில முக்கியமான நபர்கள் இருக்காங்க. அவர்களை வெச்சு சம்பவங்களை கற்பனை செய்து திரைக்கதையை உருவாக்கி இருக்கேன். கபடியை ஏன் எடுத்துக்கிட்டேன் என்பதற்கும் காரணம் இருக்கு. சின்ன வயசுலே இருந்தே எனக்கு கபடிதான் ரொம்பவும் பிடிச்ச விளையாட்டு. பள்ளி நாட்களில் நான் பாடம் படிச்சதைவிட கபடி விளையாட மைதானத்தில் இருந்த நாட்கள்தான் அதிகம். கபடிதான் என் அடையாளம். நிறையப் போட்டிகளில் கலந்துக்கிட்டு பரிசுகளை அள்ளிக் குவிச்சிருக்கேன்.

என்னோட நண்பர்கள் எல்லாம் கிரிக்கெட், கிரிக்கெட்டுன்னு பேட்டு, பால், ஸ்டம்போட அலையுறப்போ நான் மட்டும் எங்க ஏரியா பசங்களோடு கபடி விளையாடிக்கிட்டிருப்பேன். ஓப்பனா சொல்லணும்னா எனக்கு கிரிக்கெட்டுன்னாலே அலர்ஜி. கபில், சச்சின், தோனியையெல்லாம் பத்திரிகைகளில் படமாகத்தான் பார்த்திருக்கேன்.

அவங்க விளையாடினதை அப்போவெல்லாம் பார்த்ததே இல்லை. ஒரு கட்டத்தில் திடீர்னு கிரிக்கெட் என்னை ஈர்த்தது. இந்த ரெண்டு விளையாட்டுகளுமே ஒண்ணுக்கு ஒண்ணு தொடர்பில்லாதது. அதே நேரம் கேம் ஸ்பிரிட்டுன்னு எடுத்துக்கிட்டா ரெண்டுமே சூப்பர்தான். ஒண்ணுக்கு ஒண்ணு சளைத்ததில்லை.

இந்த இரண்டு விளையாட்டையும் கதைக்களமாக்கினா என்னன்னு தோணிச்சி. அது ஒரு வித்தியாசமான முயற்சியாகவும் இருக்கும். இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஜாம்பவான் மகேந்திரசிங் தோனி பேருலே ஒரு கபடிக்குழு என்கிற எண்ணமே, நிறையப் பேரை ஈர்த்திருக்கு. அதுக்குன்னு இந்தப் படத்தை முழுக்க விளையாட்டுப் படமா நினைச்சிடாதீங்க. சமூகத்துக்கு அவசியமான கருத்துகளும் அடங்கியிருக்கும்.

புரொஃபஷனல் நடிகர்கள் மட்டுமின்றி, புரொஃபஷனல் பிளேயர்ஸும் படத்தில் பாத்திரங்களாக நடிக்கிறாங்க. விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமா படப்பிடிப்பு நடத்தப் போறோம். விளையாட்டு ரசிகர்களை மட்டுமின்றி வெகுஜன சினிமா ரசிகர்களையும் கவரும் விதத்தில் ஜனரஞ்சகமான படமாக இது இருக்கப் போவுது” என்று நம்பிக்கையோடு சொல்கிறார் இயக்குநர் பி.ஐயப்பன்.

- எஸ்ரா