வில்லங்கமா பார்க்காதீங்க!



‘கோலிசோடா-2’ படத்தில் ‘இன்னொசென்ட் இன்பா’வாக ரசிகர்களை கிறங்கடித்த கேரள தேவதை சுபிக்‌ஷாவை ஏர்போர்ட்டில் சந்தித்தோம்.“விஜய் மில்டன் இயக்கிய ‘கடுகு’, ‘கோலிசோடா-2’ன்னு அடுத்தடுத்து இரண்டு படங்கள் அவரோட டைரக்‌ஷனில் நடிச்சிருக்கீங்க. அடுத்து பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ‘ரா ரா ராஜசேகர்’, ‘யார் இவர்கள்?’னு அடுத்தடுத்து ரெண்டு படங்களில் நடிக்கறீங்க....”

“ஹா... ஹா... நான் சின்சி யரான நடிகையாக்கும். அதனாலேதான் ஒருமுறை என்னை இயக்கிய இயக்குநர்கள் அடுத்தடுத்து என்னையே அவங்க படத்துக்கு ஹீரோயின் ஆக்குறாங்க. இதை வில்லங்கமாகப் பார்க்காதீங்க.

பாசிட்டிவ்வான விஷயம் இது. ‘ரா ரா ராஜசேகர்’ படத்துலே லிங்குசாமியோட சொந்தக்காரர் மதியோட ஜோடியா நடிக்கிறேன். நியூஸ் ரீடர் கேரக்டர். அதனாலே எல்லா நியூஸ் சேனலும் பார்த்து பார்த்து ஹோம் வொர்க் பண்ணி ரொம்ப துல்லியமாகப் பண்ணியிருக்கேன். என்னோட டெடிகேஷனைப் பார்த்துட்டுதான் பாலாஜி சக்திவேல் சார், அடுத்த படத்துக்கும் என்னையே புக் பண்ணியிருக்காரு.

‘யார் இவர்கள்?’ படத்தில் இசக்கி கிஷோர், அஜய்னு ரெண்டு ஹீரோ. பாலாஜி சக்திவேலைப் பொறுத்தவரை ஒரு காட்சியை படம் பிடிப்பதற்கு முன்பாக அவரே நடிச்சுக் காமிப்பார். நாம அதன் மூலமாதான் டைரக்டருக்கு என்ன தேவைன்னு புரிஞ்சுக்கிட்டு செய்யணும்.

ஒரு காட்சியிலே கிளிசரின் இல்லாமே நான் அழணும்னு சொல்லியிருந்தார். எனக்கு அழுகையே வரலை. ‘என்னம்மா நீ? பரதநாட்டியம் டான்ஸர். அழக்கூட வராதா? உன்னைப் போயி ஹீரோயினா போட்டிருக்கேனே?’ன்னு சொல்லிட்டு அவர் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பிச்சிட்டார்.

அவரை அப்படிப் பார்த்ததுமே எனக்கும் அழுகை பீறிட்டுக்கிட்டு வந்துடிச்சி. உடனே, பாலாஜி சார் சிரிச்சிக்கிட்டே ‘என்னோட ஆக்டிங்கை பார்த்து நிஜமாவே அழுவுறீயே?’ன்னு சொன்னாரு. எனக்கு வெட்கமே வந்துடிச்சி.

நான் அழுததை அப்படியே கேமராமேன் எனக்குத் தெரியாம ஷூட் பண்ணியிருக்காரு. அந்தக் காட்சிதான் படத்திலும் இடம்பெறுது. நானா இவ்வளவு நல்லா நடிச்சிருக்கேன்னு அந்த சீனை பார்க்குறப்போ என்னாலேயே நம்ப முடியலை... யப்பா... எப்படியெல்லாம் சினிமாவில் வேலை வாங்குறாங்க பாருங்க...”

“வேற என்ன படங்கள்?”

“ஏ.வெங்கடேஷ் சார் டைரக்‌ஷனில் ‘நேத்ரா’ பண்ணியிருக்கேன். கனடாவில் படம் பிடிக்கப்பட்ட ஒரு சண்டைக் காட்சியை மறக்கவே முடியாது. ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் கொடுத்த தைரியத்தில் டூப்பே போடாம பண்ணினேன்.

மாடியில் ரோப் துணையில்லாமல் சுவரைப் பிடிச்சிக்கிட்டே நடந்தேன். நல்ல உயரமான கட்டிடம். கொஞ்சம் மிஸ் ஆனாலும், எலும்பு மொத்தமும் நொறுங்கிடும். உயிருக்கு ஆபத்தான அந்தக் காட்சியில் நடிச்சி முடிக்கிற வரைக்கும் ‘திக் திக்’குன்னுதான் இருந்தது.

இந்தப் படத்துலே வினய், தமன்னு இரண்டு ஹீரோக்கள்.அப்புறம் ஆர்.கே.சுரேஷ் சார் ஜோடியா ‘வேட்டை நாய்’ படத்துலே நடிக்கிறேன். இந்தப் படத்துலே பள்ளி மாணவி, மனைவி, கர்ப்பிணின்னு என்னோட கெட்டப்புலே நிறைய சேஞ்ச் இருக்கும். படிச்ச கிராமத்துப் பொண்ணு வேடம். நிறைவா செய்திருக்கிறதா ஃபீல் பண்றேன். இவை தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம்னு நெறைய பேசிக்கிட்டிருக்கேன்.”

“ரொம்ப இளமையா அழகா இருக்கீங்க. நீங்க ஜோடியாக நடிச்சதெல்லாம் இளம் ஹீரோக்களோடுதான். காதல், கீதல்னு ஏதாவது...”

“அட நீங்க வேற சார். சினிமாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஹீரோயின்களுக்கு கடுமையான போட்டி இருக்கு. அவங்க அவங்க பொசிஷனை தக்க வெச்சுக்கிறதுக்குள்ளே தாவூ தீருது. இதுலே எங்கிருந்து காதல், கீதல் எல்லாம்!”

- தேவராஜ்