மகனுக்கு பெண் தேடும் பேராசை மயில்சாமிஅறிமுக இயக்குநர் கே.எஸ்.பழனி இயக்கும் படம் ‘காசு மேல காசு’. ‘மன்னார் வளைகுடா’, ‘இன்னுமா நம்மள நம்புறாங்க’, ‘கண்டேன் காதல் கொண்டேன்’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதியவர். அவரிடம் படத்தைப் பற்றி கேட்டோம்.‘‘இன்றைய காலகட்டத்தில் காதல் என்ற சொல்லுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது. ஒவ்வொரு பெற்றோரும் தன் மகள், மகனுக்கு எவ்வாறு வாழ்க்கை அமைய வேண்டும் என்று ஆயிரம் கனவுகளுடன் வாழ்கிறார்கள்.

பேராசை பிடித்த மயில்சாமி, தன் மகனுக்கு மிகப்பெரிய இடத்தில் சம்பந்தம் பண்ணத் துடிக்கிறார். அதற்காக அவர் எவ்வாறெல்லாம் தன் மகனுக்கு பெண் தேடுகிறார் என்பதுதான் கதை.  முழுக்க முழுக்க காமெடிப் படமாக உருவாகியுள்ள இதில் மயில்சாமி லீட் ரோலில் நடித்திருக்கிறார். கதையின் நாயகன் எனுமளவுக்கு மயில்சாமியின் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும், கதாநாயகனாக ஷாருக், நாயகியாக காயத்ரி நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் கஞ்சா கருப்பு, கோவை சரளா, நளினி, மதுமிதா, லொள்ளுசபா சாமிநாதன் என்று ஏராளமான காமெடி நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். பாண்டியன் இசையமைத்திருக்கிறார். சுரேஷ்தேவன் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் சிரித்த முகங்களுடன் வெளியே செல்வது உறுதி’’ என்கிறார் இயக்குநர் கே.எஸ்.பழனி.

- எஸ்