தமிழ் சினிமாவின் புதிய கனவுக்கன்னி!தெலுங்கில் ஒரு டஜன் படங்களில் நடித்து முடித்துவிட்ட ராக்‌ஷி கண்ணாவின் தமிழ் என்ட்ரி கொஞ்சம் லேட்டுதான். ‘இமைக்கா நொடிகள்’ மூலமாக தமிழுக்கு வரவிருக்கும் இவரிடம் கைவசம் மேலும் இரண்டு பெரிய படங்கள் இருக்கிறதாம்.

கோலிவுட்டில் எல்லா இயக்குநர்களின் கண்களும் ராக்‌ஷியின் கால்ஷீட்டைத்தான் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனவாம்.

“லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, பாலிவுட் வித்தியாச இயக்குநர் அனுராக் காஷ்யப் போன்றோரின் புராஜக்ட் என்பதால்தான் தமிழுக்கு வந்தேன்” என்கிறார் ராக்‌ஷி.‘இமைக்கா நொடிகள்’ ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக சென்னைக்கு விசிட் அடித்தவரை காஃபிஷாப் சந்திப்பில் பிடித்துப் பேசினோம்.“அக்கட தேசத்துல இருந்து தமிழ்நாட்டுக்கு வர ஏன் இவ்வளவு தாமதம்?”

“தமிழில் அறிமுகமாகிற முதல் படமே முத்தாய்ப்பா இருக்கணும்னு விரும்பினேன். 2016லேயே ‘இமைக்கா நொடிகள்’ தொடங்கியது. படம் தாமதமாக வெளியாக பல்வேறு காரணங்கள். இடையில் பெரிய இண்டஸ்ட்ரி ஸ்ட்ரைக் வேற.”

“இன்னும் முதல் படமே தமிழில் வெளிவரலை....”“ஆமாம். ‘இமைக்கா நொடிகள்’ படத்துக்காகத்தான் தமிழுக்கே வந்தேன். அதுக்குள்ள ‘சைத்தான் கா பச்சா’, ‘அடங்க மறு’ன்னு அடுத்தடுத்து ஒரே சமயத்தில் மூன்று படங்கள் அமையும்னு நானே எதிர்பார்க்கலை. இந்த மூன்று படங்களிலுமே எனக்கான ஸ்பேஸ், கேரக்டருக்கான முக்கியத்துவம் இருந்தது.  ‘இமைக்கா நொடிகள்’ ரிலீஸுக்கு அப்புறம் இன்னும் பிஸி ஆயிடுவேன்.

‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதி என்று பெரிய ஸ்டார் காஸ்ட் உள்ள படம். என் கேரக்டர் சூப்பரா வந்திருக்கு. பெர்ஃபாமன்ஸுக்கு முக்கியத்துவம் இருக்கும்.

என் முதல் தமிழ்ப் படம் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்று நினைத்துதான் இந்தப் படத்தை தேர்வு செய்தேன். இயக்குநர் அஜய் ஞானமுத்து திரைக்கதையை பிரமாதமாக எழுதியிருக்கிறார்.

படத்துல எனக்கு சுதந்திரத்தை அதிகம் விரும்பும் கேரக்டர். அதே சமயம் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டராகவும் இருக்கும். ஆர்.டி.ராஜசேகர் போன்ற சிறந்த டெக்னீஷியன்கள் படத்துல இருக்கிறார்கள்.

‘அடங்க மறு’ படத்தில் ஜெயம் ரவி ஜோடியா வர்றேன். எனக்கு முதிர்ச்சியான வேடம். ஒருவகையில் என் மனதுக்கு நெருக்கமான வேடம் என்று சொல்லலாம். சித்தார்த்துடன் ‘சைத்தான் கா பச்சா’வில் ரொம்பவும் அமைதியான ரோல். என்னுடைய கேரக்டர் வித்தியாசமா இருக்கும்.”

“நயன்தாராவுடன் நடித்த அனுபவம்?”

“நயன்தாரா மட்டுமில்ல, அதர்வா, ஜெயம் ரவி, சித்தார்த் என்று சக நடிகர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நயன்தாராவுக்கும் எனக்கும் காம்பினேஷன் காட்சிகள் இருக்காது. ஆனால் நடிகையாக இந்தத் துறையில் கால் வைத்த போது அவரைப் பற்றி நிறைய விஷயங்களைக் கேள்விப்பட்டு என் திறமைகளை வளர்த்துக் கொண்டேன்.

அப்புறம், அனுராக் காஷ்யப். இந்தி சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநர். ஆனா, செட்டில் எங்களிடம் சகஜமாகப் பழகினார். நான் பாலிவுட் படம் பண்ணியிருந்தாலும்கூட எனக்கும் அவருக்கும் பெருசா பரிச்சயம் இருந்தது இல்லை. சினிமாவில் வித்தியாசமாக சிந்திக்கக்கூடியவர்களில் அவரும் ஒருவர். அதற்கு உதாரணமாக அவருடைய படங்களைச் சொல்லலாம்.

இந்தியில் வித்தியாசமான ஜானர்ல படம் பண்ணுகிறார். நடிகர், நடிகைகள் சின்ன பட்ஜெட் படங்களில், கமர்ஷியல் இல்லாத கதைகளில் ஏன் நடிக்கவேண்டும் என்பதற்கான அவசியத்தை எடுத்துச் சொன்னார்.அதர்வா எனர்ஜிடிக் பெர்சன்.

அதே சமயம் குறும்பும் ஜாஸ்தி. ஆரம்பத்தில் சீரியஸாக இருந்தார், அடுத்தடுத்த நாட்களில் நாங்கள் திக் ஃப்ரண்ட்ஸ் ஆகிவிட்டோம். சித்தார்த் பழகுவதற்கு இனிமையான மனிதர். பிறருடன் கம்பேர் பண்ண முடியாத இடத்தில் இருக்கிறார். அவருடைய வளர்ச்சியைப் பார்க்கும்போது தன்னை ஒரு நடிகனாக எப்படி நிலை நிறுத்திக் கொண்டார் என்பது தெரியும்.”

“என்ன மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்?”

“ஸ்கிப்ரிட், என்னுடைய கேரக்டருக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். இப்போது நடிக்கும் படங்களில் எனக்கு நல்ல வேடம் கிடைத்துள்ளது. க்ளாமர் டால் போல்  வந்து போனால் போதும் என்கிற கதையில் நடிக்கமாட்டேன்.

ஒரு கமர்ஷியல் ஹீரோயினாக என்னை அடையாளப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. ராக்‌ஷியிடம் என்ன ரோல் கொடுத்தாலும் பண்ணுவார் என்று பெயர் எடுக்கவே விரும்புகிறேன்.”

“இந்தியில் ஆரம்பிச்சாலும் கெடாவெட்டு கணக்காக குறுகிய காலத்தில் தெலுங்கில் நிறைய பண்ணிட்டீங்க போலிருக்கே?”

“என் சினிமா கேரியர் திட்டமிட்டு ஆரம்பித்தது இல்லை. ‘மெட்ராஸ் கபே’ இந்திக்குப் பிறகு தெலுங்குப் படம் பண்ண ஆரம்பித்தேன். அடுத்தடுத்து அங்கு படங்கள் வரிசைகட்டி நின்றன. எப்போதும் நான் மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்கள் பண்ணுவதில்லை. கடந்த ஆண்டு மோகன்லாலுடன் ஒரு மலையாளப் படமும் பண்ணியிருக்கிறேன். விஷயம் என்னன்னா, வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்கள்தான் என் சினிமா கேரியரைத் தீர்மானிக்கிறது.”

“இங்கிருக்கிறவர்கள் பாலிவுட்டில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். நீங்கள் தென்னிந்தியப் படங்களில் ஆர்வம் காட்டுவது பற்றி?”

“நீங்கள் சொல்வதில் உண்மை யில்லாமல் இல்லை. இந்திய சினிமாவைப் பொறுத்தவரை இப்போது தமிழ்ப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்தியில் வாய்ப்பு வரும்பட்சத்தில் இந்தியில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்.”
“நல்லா பாடுவீங்களாமே?”

“ஒரு பாடகியாக வர வேண்டும் என்பதுதான் என் சின்ன வயது கனவு. நான் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதால் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருந்தது. ஸ்கூல் படிக்கும்போது கல்ச்சுரல் நிகழ்ச்சிகளில் பெரிதாகக் கலந்துகொள்ளமாட்டேன். ஆனால் பாடல் போட்டியில் முதல் ஆளா பேர் கொடுப்பேன். ஒரு கட்டத்தில் பாடகியாக வேண்டும் என்ற ஆசையையே மறந்துவிட்டேன். இப்போது என் குரல் நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள். இப்போது கனவு நிஜமாகக்கூடிய இடத்தில் இருக்கிறேன். கூடிய சீக்கிரத்துல தமிழில் கண்டிப்பாகப் பாடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

“கனவு வேடம்?”

“எனக்கு சவாலாக இருக்கும் அனைத்து ரோல்களுமே பிடித்த ரோல்கள்தான். அதனால் குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. சமீபத்தில் ‘நடிகையர் திலகம்’ படம் சிறப்பாக இருந்தது என்று கேள்விப்பட்டேன். கீர்த்தி சுரேஷின் நடிப்பும் அபாரமாக இருந்தது என்று சொன்னார்கள். அந்த டீமுக்கு என் வாழ்த்துகள்.”

“தமிழில் சொந்தக் குரலில் பேசும் ஐடியா இருக்கிறதா?”

“அப்படியொரு ஐடியா இன்னும் இல்லை. தமிழில் நடிக்க ஆரம்பித்தபோது தமிழ் வாத்தியார் வைத்து தமிழ் கற்றுக் கொண்டேன். ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடிக்கும் போது தமிழுக்கான சில அடிப்படை விஷயங்கள் புரிந்தது. படம் பார்க்கும்போது என்னால் தமிழ் பேசமுடியும் என்று நம்பிக்கையைக் கொடுத்திருப்பேன். எதிர்காலத்தில் என்னால் சொந்தக் குரலில் பேசமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

“கேரக்டருக்காக உங்களை எப்படி தயார் செய்து கொள்கிறீர்கள்?”

“நான் நடிக்கும் படங்களின் வசனங்கள் புரிந்தால்தான் என்னால் இயல்பாக நடிக்க முடியும். முதலில் பவுண்டட் ஸ்கிப்ரிட் கேட்பேன். அப்போதுதான் முழுக் கதையையும் படித்து கதைக்குள் இன்வால்வாகி நடிக்கமுடியும். ஸ்பாட்ல வந்து ஒப்புக்கு ரெண்டு டயலாக் பேசிவிட்டு க்ளிசரின் உதவியால் அழுதுவிட்டுப் போகும் நடிகை நான் இல்லை. ஒரு காட்சியில் நான் இல்லையென்றாலும் ஒவ்வொரு காட்சியிலும் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள முயற்சிப்பேன். ஒரு விஷயம் புரியலைன்னா இயக்குநரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்பேன். அப்படி தொழில் மீது பற்றுதல் இருந்தால்தான் சினிமாவில் ஜெயிக்கமுடியும்.”

“சினிமாவில் உங்க லட்சியம்?”

“ஒவ்வொரு படத்திலும் புதுசா சில விஷயங்களை கற்றுக்கொள்கிறேன். மற்றபடிநெம்பர் 1, நெம்பர் 2 போன்ற ஸ்தானத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. இங்கு அவரவருக்கான ஸ்பேஸ் உள்ளது.”

- சுரேஷ்ராஜா