கமர்ஷியல் ஊறுகாய்!இது வெங்கட்பிரபுவின் சீடர்களின் சீஸன் எனலாம். ‘ஆர்.கே.நகர்’ படத்தை இயக்கும் சரவண ராஜன், ‘ஜருகண்டி’ பிச்சுமணி ஆகியோர் வெங்கட்பிரபுவிடம் சினிமா பயின்றவர்கள்.இதில் சரவண ராஜன், ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தை இயக்கியவர். விரைவில் வெளிவரவுள்ள ‘ஆர்.கே.நகர்’ படத்தைப் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

‘‘இது பக்கா கமர்ஷியல் கதை. ஆர்.கே.நகர்வாசியான வைபவ் தன்னுடைய ஏரியாவில் நடக்கும் பிரச்சனைக்காக குரல் கொடுக்கிறார். அதன் மூலம் சில எதிர்ப்புகளைச் சந்திக்கிறார். அதிலிருந்து அவர் எப்படி புத்திசாலித்தனமாகத் தப்பிக்கிறார் என்பதை காமெடி கலந்து சொல்லியுள்ளேன். வைபவ் ஜோடியாக சனா நடிக்கிறார். இவர் ‘சென்னை-28’ இரண்டாம் பாகத்தில் நடித்தவர். இவர்களோடு இனிகோ, சம்பத், சந்தானபாரதி, அர்ச்சனா ஆகியோரும் இருக்கிறார்கள்.

பிரேம்ஜி இசையில் ‘பப்பரமிட்டாய்’ பாடல் செம ஹிட்டாகியிருப்பதால் படத்துக்கு விநியோகஸ்தர் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
‘டிக்...டிக்...டிக்...’ வெங்கடேஷ் ஒளிப்பதிவு. ‘வடகறி’தான் அவருக்கும் முதல் படம் என்பதால் பழைய பாசத்தில் இந்தப் படத்துக்கு ஸ்பெஷலாக ஒளிப்பதிவு பண்ணிக்கொடுத்தார். இது கலகலப்பான கமர்ஷியல் படமாக இருந்தாலும் ஊறுகாய் மாதிரி கொஞ்சமாக மெசேஜும் இருக்கும்’’ என்கிறார் சரவணராஜன்.

- எஸ்