வேலைக்காரன் பாடலாசிரியர் விவேகாடைட்டில்ஸ் டாக் 73

இந்த உலகமே வேலைக்காரர்களால் இயங்குகிறது. நாம் அனுபவிக்கக்கூடிய வசதிகள் அத்தனையையுமே ஏதோ ஒரு வேலைக்காரனின் கைவண்ணம்தான். நம்முடைய உலகம் நவீனமயமாக இயங்கக் காரணமே பலதரப்பட்ட மக்களின் வேலையால்தான்.

அந்த வேலை ஏசி ரூமில் வேலை பார்க்கும் ஐடி வேலையாகவோ அல்லது மலையில் கல்லுடைக்கும் வேலையாகவோ கூட இருக்கலாம்.நாம் அனைவருமே வேலைக்காரர்கள்தான்.

என்னுடைய வேலை பாட்டு எழுதுவது. வேலையில் முழுமூச்சாக இருக்கும்போது ஓய்வெடுக்க நேரம் இருக்காது; குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க நேரமிருக்காது. ஒரு வேலையில் இருக்கும்போது மற்ற விஷயங்களுக்கு நேரம் இல்லையென்றாலும், நேசிக்கும் தொழில் மீது இருக்கும் பற்றுதல் எல்லா கவலைகளையும் மறக்கடிக்கச் செய்துவிடும் என்பதுதான் என் அனுபவம்.

‘மனதுக்குப் பிடிச்ச வேலையே நம் வேலையாக மாறும்போது நீங்கள் வேலையே செய்ய வேண்டாம்’ என்று ஓர் அறிஞர் சொல்லியிருக்கிறார். எனக்குப் பிடிச்ச வேலை பாடல் எழுதுவது. பாட்டு கேட்பதும், எழுதுவதும் என் பொழுதுபோக்கு.

அதே துறையில் பணியாற்றுவதால்தான் என்னால் சந்தோஷமாக வேலை செய்ய முடிகிறது. பொழுதுபோக்கே வேலையாக அனைவருக்கும் அமைந்துவிடுவதில்லை.எனினும் இந்த வேலையை அடைய அதற்கு முன்பாக நான் ஏகப்பட்ட வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது.

சென்னைக்கு பாடல் எழுத வந்தபோது என் சொந்தக் காலில் நின்று வாய்ப்பு தேடவேண்டும் என்று முடிவு பண்ணினேன். இவ்வளவுக்கும் எங்கள் குடும்பம் ஊரிலேயே வசதியான குடும்பம். செலவுக்கு பணம் கேட்டிருந்தால் எங்கள் வீட்டில் மாதம் மாதம் பணம் அனுப்பியிருப்பார்கள். ஆனால், தன்மானம் காரணமாக நான் அப்படிக் கேட்கவில்லை.

ஒரு ஹோட்டலில் டைம் கீப்பராக வேலைக்குச் சேர்ந்தேன். எனக்கு இரவு ஷிப்ட். ஏன் இரவு வேலையைத் தேர்வு செய்தேன் என்றால் பகலில் சினிமா வாய்ப்பு தேடும் படலம் நடக்கும். ஒரு முறை பணி நேரத்தில் ஏசி காற்றில் தூங்கிவிட்டேன்.

ரவுண்ட்ஸ் வந்த மேனேஜர் கன்னாபின்னாவென்று சத்தம் போட்டார். அந்த மாதம் என் சம்பளத்தில் பாதியை கட் பண்ணிவிட்டார்கள். அத்துடன் பிரச்சனை முடிந்திருந்தால் பரவாயில்லை. ‘நீ ஓட்டல் வேலைக்கே செட்டாக மாட்டே’ என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

வேலை செய்வது என் நோக்கம் அல்ல. நான் விரும்பியிருந்தால் நல்ல வேலையில் சேர்ந்திருக்கலாம். எங்கள் வீட்டில் வியாபாரத்துக்கும் ஏற்பாடு செய்து கொடுத்திருப்பார்கள். ஒரு கட்டத்தில் எனக்கு வருவாய் அலுவலராக அரசு உத்தியோகமே கூட கிடைத்தது. அந்த சர்வீஸில் இருந்திருந்தால் உதவி கலெக்டர், கலெக்டர் என்று இந்த நேரம் புரோமோஷன் வேறு கிடைத்திருக்கும்.

ஆனால் -அரசு வேலை என்னுடைய நோக்கம் அல்ல. சென்னையில் வேலை செய்துகொண்டே சினிமாவில் பாட்டு எழுத வேண்டும் என்பதற்காக  இன்னொரு வேலையில் சேர்ந்தேன். பிறகு பத்திரிகையாளர் வேலை உள்பட பல வேலைகளைக் கடந்துதான் பாடலாசிரியராக வரமுடிந்தது.

சின்ன வயதில் ஊரில் இருக்கும்போது ஏர் ஓட்டுவது, நிலத்துக்கு நீர் பாய்ச்சுவது, மணிலா காய் பறிப்பது உள்பட கழனி வேலைகளைச் செய்துள்ளேன். என் அம்மா மிகப்பெரிய விவசாயக் குடும்பத் தலைவி. ‘ஒரு நல்ல விவசாயியின் மகன் காலையில் எழுந்ததும் பயிர் முகத்துல முழிக்கணும்; அதுதான் சரியான விவசாயிக்கு அழகு’ என்று சொல்வார்.

வாழ்க்கையில் ஜெயிக்க நினைக்கும் ஒரு மனிதனின் அன்றாட வாழ்க்கை விடியலில்தான் ஆரம்பிக்க வேண்டும். அப்படித்தான் என் இளமைக்காலம் இருந்தது. சமீப காலமாக இரவு முழுவதும் கண் விழித்து பாடல்கள் எழுதிவிட்டு காலையில் தூங்கும் பழக்கம் ஒட்டிக் கொண்டுள்ளது. எங்கம்மா சொன்னதை முழுசா கடைப்பிடித்திருந்தால் காலையில் எழுந்து வேலை செய்து முடித்துவிட்டு இரவில் தூங்கியிருப்பேன்.

சினிமாவைப் பொறுத்தவரை என்னுடைய முதல் வேலை ‘நீ வருவாய் என’ படத்துக்காக. இரவு பதினொரு மணிக்கு டியூன் வாங்கி காலை ஐந்து மணிக்குள் அந்தப் படத்துக்கு பாடல் எழுதி முடித்தேன்.

எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்த அந்தப் படத்தை ராஜகுமாரன் இயக்கியிருந்தார். ஏ.வி.எம். ‘ஜி’ தியேட்டரில் ரிக்கார்டிங் நடந்தது. சினிமாவில் நான் செய்த முதல் வேலை, அடுத்த வேலையான விக்ரமன் சார் இயக்கிய ‘வானத்தைப் போல’ படத்துக்கு பாடல் எழுதும் வேலையை  ஏற்படுத்திக் கொடுத்தது.

சினிமாவில் முதல் வேலையே வெற்றியைக் கொடுத்ததால் நான் செய்த வேலைகள் அனைத்துமே அடுத்தடுத்து வெற்றி மேல் வெற்றியைத் தேடிக் கொடுத்தது. சினிமாவில் பாட்டெழுதத் துவங்கிய காலம் முதல் இப்போது வரைக்கும் நான் வேலையில்லாமல் இருந்தது இல்லை.

வேலைக்காக நார்வே, டென்மார்க், ஸ்வீடன், இங்கிலாந்து, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் என்று ஏராளமான வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளேன். இந்தியாவில் எல்லா மாநிலத்தலை நகரங்களிலும் வேலை பார்த்துள்ளேன். மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, டில்லி என்று பல மாநகரங்களுக்கு பலதடவை சென்றுள்ளேன்.

இதுதவிர இலக்கியப் பணிகளுக்காகவும் இந்தத் தேசத்தை பலமுறை சுத்திச் சுத்தி வந்துள்ளேன். இப்போது நான் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் இருக்கிறேன். அதுக்குக் காரணம் நான் செய்து முடித்து வரவேண்டியுள்ள வேலைகள் அதிகம்.

அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’, விக்ரம் நடிக்கும் ‘சாமி ஸ்கோயர்’, ‘களவாணி-2’, ‘ஆண் தேவதை’, சிவகார்த்திகேயன் படம், காஜல் அகர்வால் நடிக்கும் ‘ பாரீஸ் பாரீஸ்’, ‘இவனுக்கு எங்கேயோ மச்சம்’ உள்பட 60 படங்களில் வேலை செய்துள்ளேன்.

எப்போதும் ரிலீஸான படங்களைவிட வரவேண்டிய படங்களைப் பொறுத்துத்தான் என் மகிழ்ச்சி இருக்கும். அந்த சிந்தனை ஏன்னா, வேலை செய்ய வேண்டும் என்ற கோணத்தில் இருக்கும். மற்றவர்களுக்கும் நான் சொல்ல நினைப்பது - ‘வேலையோடு இருங்க; வேலையில்லா மனிதன் உணர்வில்லாத மனிதன்’.

தொகுப்பு : சுரேஷ்ராஜா

(தொடரும்)