எதிர்காலத்தில் படமெடுக்க கேமராமேனே தேவையில்லை!விஜய் மில்டன் கணிக்கிறார்

உற்சாகமாக இருக்கிறார் விஜய் மில்டன்.‘கோலிசோடா - 2’ படத்துக்கு முந்தைய பாகத்தைவிட பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.“முதல் பாகம் யதார்த்தமா இருந்தது. இது யதார்த்தத்தோடு நல்ல கமர்ஷியல் எலிமெண்ட்ஸ் கலந்திருக்குதுன்னு ரிப்போர்ட்ஸ் வந்திருக்கு.

படம் பார்த்த ரசிகர்கள் சிலர், ‘இந்தப் படம் பார்த்தப்புறம் தப்பு செய்யறவங்களைப் பார்த்தா அடிச்சி வெளுக்கணும்கிற மாதிரி ஆவேசம் வருது சார்’ என்கிறார்கள். ஒரு படைப்பு என்ன செய்யணுமோ, அதை செஞ்சிருக்குன்னு திருப்தியோடு இருக்கேன்” என்று பேச ஆரம்பித்தார் விஜய் மில்டன்.

“தமிழ் சினிமாவில் கதைப்பஞ்சம் தலைவிரித்து ஆடுவதால்தான், பாகம் பாகமா படமெடுக்கிறாங்கன்னு ரசிகர்கள் மத்தியில் ஒரு டாக் இருக்கு தெரியுமா?”“அப்படிப் பார்த்தா உலகத்துலேயே கதைப்பஞ்சம் ஹாலிவுட்டில்தான் அதிகம். பார்ட்-ஒன், பார்ட்-டூன்னு ஒரு படத்தோட கதையோட தொடர்ச்சியா எடுக்கிறது வேற; நல்ல வெற்றி பெற்ற ஒரு படத்தின் அதே டெம்ப்ளேட்டில் வேறு ஆட்களை வைத்து, வேற கதையை அதே டைட்டிலில் சொல்றது வேற.

உதாரணத்துக்கு சூர்யா நடித்த ‘கஜினி’ ஹிட் படம். பார்ட் ஒன்ல ஹீரோவுக்கு பதினைந்து நிமிடத்தில் எல்லாவற்றையும் மறந்துவிடுகிற வியாதி. அதே டைரக்டர், இன்னொரு படம் எடுக்கிறார். இதுலே வேற ஹீரோ, வேற வியாதின்னாலும், முந்தைய ஹிட் படத்தின் லீவரேஜ் மொத்தத்தையும் எடுத்துக்க அதே டைட்டிலை பார்ட்-2 போட்டு பயன்படுத்தலாம். இது உலகம் முழுக்க இருக்கிற நடைமுறைதான்.

கோலிசோடா மாதிரியான ஜாதியில் எனக்கு ஒரு கதை தோன்றியது. அதனால் பார்ட் டூ என்று தலைப்பு வைத்தேன். முன்னதாக இந்தப் படத்துக்கு ‘இடி மின்னல் மழை’ என்றுதான் டைட்டில் வைத்தோம். ரொம்ப இலக்கியத்தரமாக இருக்கிறதா பிசினஸ் ஏரியாவில் ஃபீல் பண்ணாங்க. அதனாலேதான் ஏற்கனவே ‘கோலிசோடா’ என்ற டைட்டில் மக்கள் மத்தியில் பிரபலம் என்பதால் அதே டைட்டிலை மீண்டும் யூஸ் பண்ணிக்கிட்டோம்.”

“நீங்க பெரிய கேமராமேன். கால்ஷீட் கேட்டா மாட்டேன்னு எந்த பெரிய ஹீரோவோ, ஹீரோயினோ சொல்லப் போறதில்லை. அப்படியிருக்க உங்கள் படத்தில் ஏன் எப்பவுமே புதுமுகங்கள்?”

“தமிழ் சினிமாவில் மொத்தமா இப்போ இருபது பெரிய ஹீரோக்கள் இருப்பார்களா? இது ஒரு லட்ச ரூபாய்க்கு கஷ்டப்படற ஹீரோவைப் பற்றிய கதை. அந்தக் கதையில் ஏற்கனவே பாரீனில் டூயட் பாடின ஹீரோ செட் ஆகமாட்டார். இங்கு பத்து பேரை பறந்து பறந்து பந்தாடிய ஹீரோக்கள்தான் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் என் கதைக்கு செட்டாக மாட்டார்கள். பெரிய ஹீரோக்கள் உள்ளே வந்துவிட்டால் அது சினிமாவாக இருக்கும்; புதுமுகம் நடித்தால் யதார்த்தமாக இருக்கும் என்பதால்தான் புதுமுகங்களை நடிக்க வைத்தேன்.”

“செல்போனிலேயே இப்போவெல்லாம் குறும்படம் எடுக்கிறாங்க. ஒளிப்பதிவு என்கிற துறையின் ரகசியங்கள் எல்லாருக்கும் தெரியுதே?”

“யெஸ். ஆண்ட்ராய்டு போன் வந்த பிறகு ஒளிப்பதிவு எளிதாகிவிட்டது. சொல்றதுக்கு கஷ்டமாதான் இருக்கு. இருந்தாலும் சொல்றேன். வருங்காலத்தில் கேமராமேன் என்ற டிபார்ட்மெண்ட்டே இல்லாமல் போகும். சினிமாவின் எதிர்காலம் அப்படித்தான் இருக்கும். இப்போது டிஐ துறையில் கலரிஸிட் என்ற கேட்டகிரி இருக்கிறது. அவருக்குத்தான் இனிமேல் எதிர்காலம். கலரிஸ்ட் வேலையில் எடிட்டிங், ப்ரேமிங், போகஸ், கலர் சேஞ்சஸ் உட்பட பல வசதிகள் வந்துவிட்டது.

அதேபோல்தான் ஆர்ட் டைரக்டருக்கும் வேலை குறைந்துவிட்டது. இப்போது ஆள் உயரத்துக்கு செட் போட்டால் போதும் என்றாகிவிட்டது. மீதியை சிஜியில் பார்த்துக் கொள்ளலாம் என்ற நிலை உள்ளது. கொஞ்ச காலம் முன்பு வரைக்கும் கூட பிரம்மாண்டமான செட் தேவைப்பட்டது. இப்போது பத்து சதவீத அளவில்தான் ஆர்ட் டைரக்டருக்கான வேலை இருக்கிறது. பிலிமில் ஒளிப்பதிவு செய்வதைவிட டிஜிட்டல் மிகவும் எளிது. ஆனா, படைப்பாளிகளுக்கான கிரியேட்டிவ் ஃப்ரீடம் கிடைத்துள்ளது என்பதை மறுக்க முடியாது.”

“சிறந்த ஒளிப்பதிவுக்கான இலக்கணம் என்பது எப்படி இருக்க வேண்டும்?”

“விஜய் மில்டன் படங்கள் மாதிரி இருக்கணும்னு ஒரு இலக்கணம் வரையறுக்கலாமா? (சிரிக்கிறார்). இலக்கணம் என்பதே உடைக்கிறதுக்குதான் சார். ஒருகாலத்தில் கேமராவை உருட்டக் கூடாது, அசைக்கக் கூடாதுன்னுலாம் ரூல் இருந்தது. கேமராவே தெரியக்கூடாது, ரொம்ப யதார்த்தமா இருக்கணும்னுலாம் சொல்லுவாங்க. பி.சி.ராம் சார், எல்லா மித்தையும் உடைச்சிக் காட்டினார்.

நானெல்லாம் சின்னப் பயலா இருக்கப்ப படம் பார்க்கிறப்போ ‘ஒளிப்பதிவு : பி.சி.ராம்’னு டைட்டில் போட்டாலே ஆடியன்ஸ் கைதட்டுவாங்க. பானைக்கும், யானைக்கும் தனித்தனி லைட்டிங் என்கிற மாதிரியான சம்பிரதாயங்களை எல்லாம் சுக்குநூறாக்கினார். ஒளிப்பதிவுக்கு மட்டுமில்லை, எதுக்குமே இலக்கணம் இல்லை என்பதுதான் சினிமாவின் நிஜமான இலக்கணம்.”

“இயக்கமா, ஒளிப்பதிவா.... எது ஈஸி?”

“கஷ்டப்படாமே எந்த வேலையுமே சுத்தப்படாது. ஒரு ஓவியர் நல்லா ஓவியம் வரைவார். அவருக்கு திடீர்னு விரலில் சுளுக்கு. வரையமுடியாத சூழலில் வாடகைக்கு ஒரு ஓவியரைப் பிடிக்கிறார். அவரிடம் ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லிச் சொல்லி வரைய வைக்கிறார். கடைசியாக ஓவியம், ஒரிஜினல் ஓவியர் வரைந்ததைப் போலவே அச்சு அசலாக வந்தது.

இந்தக் கதையில் வாடகைக்கு வந்த ஓவியரை கேமராமேனாகவும், விரலில் சுளுக்கு பட்ட ஓவியரை இயக்குநராகவும் நினைச்சுக்கங்க. இயக்குநரே கேமராவைக் கையாள முடிந்தால் இன்னும் சிறப்பு. அதுக்காக சினிமா ஒன்மேன் ஷோவாக இருக்கவேண்டும் என்று நான் நினைக்கவில்லை. கூட்டு முயற்சியில் உருவாவதால்தான் சினிமாவுக்கு ஒரு ஜீவன் இருப்பதாகக் கருதுகிறேன்.”

“உதவி இயக்குநராக நிறைய பேர் போட்டி போடும் சூழலில், உதவி கேமராமேனாக வருவதற்கு யாரும் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லையே?”
“கேமராமேனைவிட டைரக்டருக்கு சம்பளம் அதிகம் என்பதால் இருக்குமோ? (சிரிக்கிறார்). அப்படி இல்லை. போட்டோகிராஃபியில் ஆர்வம் இருக்கிறவங்களுக்குதான் கேமராவில் ஆர்வம் வரும். நமக்கு கதை சொல்ல வரும்னு நெனைக்கிற எல்லாருமே டைரக்டர் ஆயிடலாம்னு நெனைக்கிறாங்க. ஒளிப்பதிவாளராக வரவிரும்புபவர்களுக்கு விசாலமான பார்வை வேண்டும்.

சின்ன விஷயத்தைக் கூட பெரியளவில் கற்பனை பண்ணி பார்க்க வேண்டும். இயக்குநர் ஒரு சீன் சொல்லும் போது, ‘குரு வந்தான். லக்ஷ்மியைப் பார்த்தான்’ எனும்போது குரு எங்கிருந்து வந்தான், லக்ஷ்மி என்ன பண்ணிக் கொண்டிருந்தாள் என்று மைண்டுக்குள்ளேயே படம் ஓடணும். குரு எப்படி இருப்பான் என்று தெரியாமலேயே வருகிறவர் நல்ல கேமராமேன் கிடையாது.”

“இப்போ நிறைய கேமராமேன்கள் புதுசு புதுசா வர்றாங்களே?”

“டெக்னாலஜியோட மகிமை. வருஷத்துக்கு 200 கேமராமேன்கள் உருவாகிறார்கள். இப்போவெல்லாம் குருகுலக் கல்வியே இந்த டிபார்ட்மெண்டுக்கு தேவையில்லை சார். புதுசா வர்றவங்களும் நல்லாதான் பண்றாங்க. நானெல்லாம் பத்து படம் பண்ணி தெரிஞ்சிக்கிட்டதை, இவங்களெல்லாம் முதல் படத்துலேயே பண்ணிடுறாங்க.”

“நீங்க கேமரா ஹேண்டில் பண்ண ரொம்ப சிரமப்பட்ட படம் எது சார்?”

“நிச்சயம் ‘வழக்கு எண் 18/9’ படத்தைத்தான் சொல்லுவேன். ஏன்னா அந்தப் படத்தை 5 டி கேமராவில் எடுத்தோம். அப்போ அது புது முயற்சி மட்டுமல்ல, ரிஸ்க்கான முயற்சியும்தான். படம் தோல்வி அடைந்திருந்தால், ரொம்பப் பெரிய பாதிப்பாகி இருந்திருக்கும். ஏன்னா, 5டி என்பது சினிமாவின் அடுத்தகட்ட நகர்வாக அப்போ பார்க்கப்பட்டது.

சரியாகப் பண்ணவேண்டும் என்கிற சவால் எனக்கு இருந்தது. ப்ளாட்பார வாழ்க்கை, பணக்கார வாழ்க்கை, போலீஸ் என்று மூன்று களங்களையும் 5டியில் கிரியேட் பண்ணினோம். அந்த ஒரு படத்தின் சக்சஸ், இன்று ஏராளமான படங்களுக்கு வழி அமைத்துக் கொடுத்துள்ளது.”

“அடுத்து டைரக்‌ஷனா, ஒளிப்பதிவா?”

“இதென்ன கேள்வி. டபுள் ஆக்டிங்னு முடிவெடுத்துட்டா ரெண்டு கேரக்டரையும் பேலன்ஸ் பண்ணித்தானே ஆவணும்? ஒளிப்பதிவாளராக தாமிராவின் ‘ஆண் தேவதை’, பாலாஜி சக்திவேலின் ‘யார் இவர்கள்’ படங்களை முடித்துவிட்டேன். இயக்குநராக அடுத்து யாரை வைத்து பண்ணுவது என்று இன்னும் முடிவாகவில்லை.”

- சுரேஷ்ராஜா