திருக்குறள் தெரியுமா?பிலிமாயணம் 47

சினிமாவில் இயக்குநராக சாதிக்க விரும்புகிறவர்கள், பொதுவாக புகழ்பெற்ற ஓர் இயக்குனரிடம்தான் உதவியாளராக விரும்புவார்கள். இப்படி உதவி இயக்குநர்களாக சேர்வதற்கு என்னென்ன தகுதி வேண்டும் என்பதில் எந்த உறுதிப்பாடும் இல்லை.

பொதுவாக உறவினர்கள் மற்றும் நண்பர்களின் சிபாரிசுதான் முதன்மையான தகுதியாக இருக்கும். சினிமா பற்றிய புரிதல், படைப்பாற்றல் திறன், சலிக்காமல் உழைக்கும் திறமை போன்றவற்றை எல்லாம் மதிப்பீடு செய்து தன்னுடைய உதவியாளரைத் தேர்ந்தெடுக்கும் இயக்குநர்கள் மிகவும் குறைவானவர்களே.

நான் பள்ளி மாணவனாக இருந்தபோது வகுப்பறையில் ஓயாமல் கதை சொல்லிக் கொண்டே இருப்பேன். வாரத்துக்கு இரண்டு மூன்று படங்களையாவது பார்த்திருப்பேன். அந்தக் காலத்தில் சினிமா பார்ப்பதும், கதை சொல்லத் தெரிவதும்தான் சினிமாவில் சேருவதற்கான தகுதி என்று கருதிக் கொண்டிருந்தேன். என்னை வருங்கால பாரதிராஜாவாக நினைத்து கனவுலகில் மிதந்து கொண்டிருந்த காலம் அது.

அப்போதுதான் எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் மலைப்பகுதி ஒன்றில் ‘கழுகு’ என்கிற படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது. சுத்துப்பட்டு ஊர் மக்கள் மொத்தமும் ஷூட்டிங் பார்க்க அங்கே மொத்தமாகக் கூடிவிடுவார்கள். திருவிழாக் கணக்காக திடீர் கடைகளும் முளைத்துவிட்டன.

அந்த படப்பிடிப்புக் குழுவில் யாரையாவது பிடித்து எப்படியாவது சினிமாவில் சேர்ந்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தில் ரஜினி ஒரு பஸ்ஸை வைத்திருப்பார். ரஜினியைப் பார்க்க முடியாத மக்கள், அந்த பஸ்ஸையாவது பார்ப்போமே என்று வரிசையில் நின்று பார்த்துவிட்டுப் போவார்கள்.

அப்போது கொண்டை ஊசி வளைவுச் சாலை ஒன்றில் சண்டைக்காட்சி ஒன்று படமாகிக் கொண்டிருந்தது. அதைப் பார்ப்பதற்காக போய்க் கொண்டிருந்தேன். போகும் வழியில் மரத்தடி நிழலில் வெள்ளைச் சட்டை, வெள்ளை பேண்ட் சீருடையில் ஒருவர் நியூஸ் பேப்பரை விரித்து ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போதெல்லாம் டிரைவர்கள்தான் எப்போதும் ஒயிட் & ஒயிட்டில் பளிச்சென்று இருப்பார்கள். இந்த டிரைவர் அண்ணன், யாராவது சினிமா நட்சத்திரத்துக்குத்தான் கார் ஓட்டுவார் என்று கருதிக்கொண்டு, அவரைப் பிடித்து சினிமாவுக்குள் நுழைந்துவிடலாம் என்று குறுக்கு ரூட்டு ஒன்றை மனசுக்குள் போட்டேன்.

நடுத்தர வயதில் இருந்த அவருக்கு அருகில் போய் பேசாமல் நின்றேன்.“என்னப்பா, என்ன விஷயம்?” என்று கேட்டார்.“ஒண்ணுமில்லை டிரைவர் அண்ணே. நான் நல்லா கதை சொல்லுவேன். நிறைய சினிமா பார்த்திருக்கேன். நானும் சினிமாவில் சேரணும், படம் எடுக்கணும்னு ஆசையா இருக்கு... சினிமாவில் சேர நீங்கதான் நல்ல ஐடியாவா கொடுக்கணும்” என்று கேட்டேன்.

சட்டென்று எழுந்து அமர்ந்தார். என்னை ஏற இறங்கப் பார்த்தார்.“இப்படி வா தம்பி” என்று அழைத்து வாஞ்சையாக அருகில் அமர வைத்துக் கொண்டார்.“இந்தப் படத்தோட டைரக்டர் எனக்கு ரொம்ப தெரிஞ்சவரு.

அவருக்கு திருக்குறள்னா ரொம்பப் பிடிக்கும். நீ மனப்பாடமா 20 திருக்குறளை அவர் முன்னாடி ஒப்பிச்சேன்னு வெச்சிக்கோ, அசந்துபோய் அவரோட அசிஸ்டெண்டா உன்னை சேர்த்துக்குவாரு. நாளைக்கும் இதே இடத்துலேதான் ஷூட்டிங் நடக்குது. நீ போயி உடனே மனப்பாடம் பண்ண ஆரம்பிச்சிடு. நீ சினிமாவில் சேருறதுக்கு நான் பொறுப்பு” என்று சொல்லிவிட்டு மீண்டும் படுத்து, லேசாக கண்களை மூடிக்கொண்டார்.

‘அடச்சே, சினிமாவில் சேருவது இவ்வளவு ஈஸியா? 20 குறள் என்ன, உடனே 200 குறள் மனப்பாடம் பண்ணிக்கிட்டு வந்திடறேன்’ என்று கிளம்பினேன்.அன்று இரவு முழுக்க முயற்சித்து ஒரு வழியாக 30 திருக்குறள் மனப்பாடம் செய்துவிட்டு, அதே இடத்துக்குச் சென்றேன்.

நேற்று நான் கண்ட டிரைவரை அங்கே காணவில்லை. சரி, நாமே நேரடியாகப் போய் டைரக்டர் முன்பாக குறளை ஒப்பித்து சேர்ந்துவிடலாம்; நமக்கு எதுக்கு இடைத்தரகர் என்று நினைத்தேன்.

யூனிட்டில் இருந்த ஒருவரிடம், “இந்தப் படத்தின் டைரக்டர் யார்?” என்று கேட்டேன்.“எஸ்.பி.முத்துராமன் சார். அதோ அங்கே சேர் போட்டு உட்கார்ந்திருக்காரே, அவர்தான்” என்றார்கள்.உட்கார்ந்திருவர் வேறு யாருமல்ல.

நேற்று நான் டிரைவர் என்று நினைத்தேனே, அவரேதான். அன்றுதான் ஒரு பேருண்மையை உணர்ந்தேன். ஒயிட் & ஒயிட்டில் இருப்பவர்கள் எல்லாமே டிரைவர்கள் அல்ல. அவர்கள் டைரக்டர்களாகக் கூட இருக்கலாம்.இதற்குள்ளாக எஸ்.பி.முத்துராமன் சாரும் என்னைப் பார்த்துவிட்டார். உற்சாகமாகக் கையசைத்து அருகில் அழைத்தார்.

“திருக்குறள் ரெடியா?” என்று கேட்டுவிட்டு கண்ணை மூடி அமர்ந்தார்.இதற்குள் எனக்கு பயங்கர நடுக்கம். கையும், காலும் உதற ஆரம்பித்து விட்டது. மனப்பாடம் செய்த அத்தனை குறளையும் மறந்துவிட்டேன்.ஒரு நிமிடம் ஆகியிருக்கும். அவரே மெல்ல கண் திறந்தார்.“எல்லாத்தையும் மறந்துட்டேதானே? பரவாயில்லை. உனக்கு சின்ன பனிஷ்மென்ட்.

100 திருக்குறளை மனப்பாடம் பண்ணிட்டு, சென்னைக்கு வா. அங்கே ஏவிஎம் ஸ்டுடியோன்னு கேட்டா சின்னக் குழந்தை கூட வழி சொல்லும். நான் அங்கேதான் எப்பவும் இருப்பேன். என்னைப் பார்த்ததுமே மடமடன்னு மொத்த குறளையும் சொல்லணும். சொல்லிட்டேன்னா உடனே வேலைக்கு சேர்த்துப்பேன்” என்றார்.

அதன் பிறகு நான் மெனக்கெட்டு முயற்சித்து 100 குறளை மனப்பாடம் செய்ய முடிவெடுத்தேன். ஆனால், முடியவில்லை.கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் போனது.பத்திரிகையாளனாகி விட்டேன்.

நேர்காணலுக்காக அவரை ஏவிஎம் ஸ்டுடியோவில் சந்தித்தேன். அவருக்கு நிச்சயமாக என்னை அடையாளம் தெரிந்திருக்காது. அந்தச் சம்பவத்தைச் சொல்லி நினைவூட்டுவதற்கு எனக்கும் கொஞ்சம் வெட்கமாகத்தான் இருந்தது.இருந்தாலும் சொல்லிவிட்டேன்.

அதைக் கேட்டதுமே விழுந்து விழுந்து சிரித்தார். சிரித்து முடித்ததும், “சரி, 100 குறள் வேண்டாம். நான் முதலில் கேட்ட 20 குறளை இப்போ சொல்லுங்க...” என்றார்.“அய்யோ சார், ஆளை விடுங்க” என்றேன்.“நீங்க இப்பவும் சினிமாவுக்கு ஃபிட் இல்லை” என்றார்.திருக்குறளுக்கும், சினிமாவுக்கும் என்ன சம்பந்தமென்று எனக்கு சத்தியமாகத் தெரியவில்லை. ஒருவேளை தெரிந்திருந்தால் பெரிய இயக்குநர் ஆகியிருப்பேனோ என்னவோ?

(பிலிம் ஓட்டுவோம்)